இன்றைய பகுதியில் நீங்கள் கேட்கப்போவது திருக்குறளின் 48வது அதிகாரமான வலியறிதல்.
வலியறிதல் என்றால் ஒரு செயலைச் செய்வதற்கான அடிப்படை திறன் அல்லது ஆற்றலைக் குறிக்கும். எந்த ஒரு செயலைத் தொடங்கும் முன் அதைச் செய்வதற்கான திறமை, பலம் மற்றும் எதிரியின் பலம் இது போன்றவற்றை ஆராய்ந்த பின் தொடங்க வேண்டும். ஒரு செயலைத் தொடங்க வேண்டிய அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் இந்த அதிகாரம் எடுத்துக் கூறுகிறது.
வலியறிதல் – 1
- முதல் குறள்.
“வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.“
இதில்
‘வினைவலியும்’
இதன் பொருள்
செயலின் வலிமையையும்.
அடுத்து
‘தன்வலியும்‘
இதன் பொருள்
அதைச் செய்து முடிக்கத் தன் வலிமையையும்.
அடுத்து
‘மாற்றான் வலியும்’
இதன் பொருள்
அதை எதிர்க்கும் எதிரியின் வலிமையையும்.
அடுத்து
‘துணைவலியும் தூக்கிச் செயல்’
இதன் பொருள்
இருவருக்கும் துணையாக இருப்போரின் வலிமையையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.
அதாவது
செயலின் வலிமையையும், அதைச் செய்து முடிக்கத் தன் வலிமையையும், அதை எதிர்க்கும் எதிரியின் வலிமையையும், இருவருக்கும் துணையாக இருப்போரின் வலிமையையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்.
வலியறிதல் அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.”
இதில்
‘ஒல்வ தறிவது அறிந்து‘
இதன் பொருள்
தம்மால் செய்ய முடியும் தொழிலையும், அதைச் செய்வதற்கு வேண்டிய வலிமையினையும் ஆராய்ந்து.
அடுத்து
‘அதன் கண்தங்கிச் செல்வார்க்குச்’
இதன் பொருள்
எப்பொழுதும் அதையே சிந்தித்து முயற்சி செய்பவர்களுக்கு.
அடுத்து
‘செல்லாதது இல்‘
இதன் பொருள்
முடியாதது ஒன்றும் இல்லை.
அதாவது
தம்மால் செய்ய முடியும் தொழிலையும், அதைச் செய்வதற்கு வேண்டிய வலிமையினையும் ஆராய்ந்து எப்பொழுதும் அதையே சிந்தித்து முயற்சி செய்பவர்களுக்கு முடியாதது ஒன்றும் இல்லை.
வலியறிதல் அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.
- மூன்றாவது குறள்.
“உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.”
இதில்
‘உடைத்தம் வலியறியார்’
இதன் பொருள்
தம்முடைய வலிமையை அறியாமல்.
அடுத்து
‘ஊக்கத்தின் ஊக்கி‘
இதன் பொருள்
ஊக்கத்தால் செயலைத் தொடங்கி.
அடுத்து
‘இடைக்கண் முரிந்தார் பலர்‘
இதன் பொருள்
இடையில் அதை முடிக்க முடியாமல் அழிந்தவர் பலர்.
அதாவது
தம்முடைய வலிமையை அறியாமல், ஊக்கத்தால் செயலைத் தொடங்கி இடையில் அதை முடிக்க முடியாமல் அழிந்தவர் பலர்.
வலியறிதல் அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.
- நான்காவது குறள்.
“அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.”
இதில்
‘அமைந்தாங்கு ஒழுகான்’
இதன் பொருள்
மற்றவர்களோடு பொருந்தி நடக்காமல்.
அடுத்து
‘அளவறியான்’
இதன் பொருள்
தன் பலத்தையும் அறியாமல்.
அடுத்து
‘தன்னை வியந்தான் விரைந்து கெடும்’
இதன் பொருள்
தன்னை வியந்து மதிப்பவன் விரைவில் அழிவான்.
அதாவது
மற்றவர்களோடு பொருந்தி நடக்காமல், தன் பலத்தையும் அறியாமல் தன்னை வியந்து மதிப்பவன் விரைவில் அழிவான்.
வலியறிதல் அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள்.
“பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.“
இதில்
‘பீலிபெய் சாகாடும் அச்சிறும்‘
இதன் பொருள்
மென்மையான மயிலிறகே ஆனாலும் வண்டியின் அச்சு முறியும்.
அடுத்து
‘அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்’
இதன் பொருள்
அளவுக்கு அதிகமாகப் பண்டங்களை வண்டியில் ஏற்றினால்.
அதாவது
அளவுக்கு அதிகமாகப் பண்டங்களை வண்டியில் ஏற்றினால் மென்மையான மயிலிறகே ஆனாலும் வண்டியின் அச்சு முறியும்.
வலியறிதல் அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது. இந்தக் குறளோடு இந்தப் பகுதி முடிவடைந்தது. இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
நன்றி! வணக்கம்!



