வணக்கம். இந்த பகுதியில் இல்வாழ்க்கை அதிகாரத்தில் உள்ள ஆறிலிருந்து பத்து வரை, அதாவது அறத்துப்பாலின் நாற்பத்தாறாவது குறளிலிருந்து ஐம்பதாவது குறள் வரை பார்க்கப்போகிறோம். இந்த அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களைப் போனபகுதியல் பார்த்தோம். இல்வாழ்க்கையில் உள்ள அறநெறிகளைப் பற்றி இல்வாழ்க்கை-2ஆம் பகுதியில் பார்க்கலாம்.
இல்வாழ்க்கை-2
- ஆறாவது குறள்
"அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின் போஒய்ப் பெறுவது எவன்?" இதில் "அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின்" இதன் பொருள்: இல்வாழ்க்கையின் அறத்தை ஒருவன் கடைப்பிடித்தால் அடுத்தது "புறத்தாற்றின் போஒய்ப் பெறுவது எவன்"? இதன் பொருள்: அப்படிப் பட்டவன் அந்த அறத்திற்குப் புறம்பான வேறு வழியில் சென்று பயன் பெறுவது என்ன? அதாவது இல்வாழ்க்கையின் அறத்தை ஒருவன் கடைப்பிடித்தால், அப்படிப் பட்டவன் அந்த அறத்திற்குப் புறம்பான வேறு வழியில் சென்று பயன் பெறுவது என்ன? இது இந்த அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள். • ஏழாவது குறள். "இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வாருள் எல்லாம் தலை". இதில் "இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்" இதன் பொருள்: இல்வாழ்க்கையின் அறத்தைக் கடைப்பிடித்து வாழ்பவன் அடுத்து "முயல்வாருள் எல்லாம் தலை." இதன் பொருள்: பிற வழிகளில் வாழ முயல்பவர்கள் பலரினும் மேலானவன். அதாவது இல்வாழ்க்கையின் அறத்தைக் கடைப்பிடித்து வாழ்பவன், பிற வழிகளில் வாழ முயல்பவர்கள் பலரினும் மேலானவன். இது இந்த அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள். • எட்டாவது குறள். "ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து." இதில் "ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை" இதன் பொருள்: பிறறையும் நன்னெறியில் ஒழுகச் செய்து, அறத்தினின்றும் நீங்காத இல்லறம் அடுத்து "நோற்பாரின் நோன்மை உடைத்து." இதன் பொருள்: இது தவம் செய்பவருடைய நிலையைவிட வல்லமை உடையது. அதாவது பிறறையும் நன்னெறியில் ஒழுகச் செய்து, அறத்தினின்றும் நீங்காத இல்லறம், தவம் செய்பவருடைய நிலையைவிட வல்லமை உடையது. இந்த அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது. • ஒன்பதாவது குறள். "அறனெனப் பட்டது இல்வாழ்க்கை அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று." இதில் "அறனெனப் பட்டது இல்வாழ்க்கை" இதன் பொருள்: அறன் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே அடுத்து "அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று" இதன் பொருள்: துறவற வாழ்க்கை என்றால் அதுவும் பிறரால் பழிக்கப்படாமல் இருந்தால் நன்மையாகும் அதாவது அறன் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே.துறவற வாழ்க்கை என்றால் அதுவும் பிறரால் பழிக்கப்படாமல் இருந்தால் நன்மையாகும். இல்வாழ்க்கை அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது. • பத்தாவது குறள். "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்." இதில் "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்" இதன் பொருள்: இந்த உலகத்தில் இல்வாழ்க்கையின் அறத்தின்படி வாழவேண்டிய முறையில் வாழ்கின்றவன் அடுத்து "வான்உறையும் தெய்வத்துள் வைக்கப் படும்". இதன் பொருள்: வானத்தில் உள்ள தெய்வங்களுள் ஒருவனாக மதிக்கப் படுவான். அதாவது இந்த உலகத்தில் இல்வாழ்க்கையின் அறத்தின்படி வாழவேண்டிய முறையில் வாழ்கின்றவன், வானத்தில் உள்ள தெய்வங்களுள் ஒருவனாக மதிக்கப் படுவான் இது இந்த அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள். இல்வாழ்க்கை-2ஆம் பகுதியுடன் இந்த அதிகாரம் முடிந்தது. அடுத்த பகுதியில் நாம் பார்க்கப்போகிற அதிகாரம் வாழ்க்கைத் துணைநலம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி! வணக்கம்!
திருக்குறளின் மற்ற அத்தியாயங்களைக் கேட்க இங்கே கிளிக் செய்யவும்: