வணக்கம். வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களைப் போன பகுதியில் பார்த்தோம். மீதி உள்ள ஐந்து குறள்கள் இந்தப் பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. இல்வாழ்க்கையின் அறனுக்குத் துணையாக நிற்கும் மனைவிக்குரிய நற்பண்புகளை இந்த அதிகாரத்தில் பார்க்கலாம்.
வாழ்க்கைத் துணைநலம்-2
- ஆறாவது குறள்.
“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்”.
இதில்
“தற்காத்துத் தற்கொண்டாற் பேணி”
இதன் பொருள்
கற்புநெறியில் தன்னையும் காத்து, தன் கணவனையும் காப்பாற்றி
அடுத்து
“தகைசான்ற சொற்காத்து” பெருமை சேர்க்கும் புகழையும் காத்து
“சோர்விலாள் பெண் “சோர்வில்லாமல் இருப்பவளே பெண்.
அதாவது
கற்புநெறியில் தன்னையும் காத்து, தன் கணவனையும் காப்பாற்றி ,பெருமை சேர்க்கும் புகழையும் காத்து, சோர்வில்லாமல் இருப்பவளே பெண்.
இந்த அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்.
“சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை”.
இதில்
“சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்”
இதன் பொருள்
மகளிரைக் காவல் வைத்து காத்தல் என்பது என்ன பயனைத் தரும்?
அடுத்து
“நிறைகாக்கும் காப்பே தலை.”
இதன் பொருள்
அவர்கள் நிறை என்ற கற்பினால் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதே சிறந்தது.
அதாவது
மகளிரைக் காவல் வைத்து காத்தல் என்பது என்ன பயனைத் தரும்? அவர்கள் நிறை என்ற கற்பினால் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதே சிறந்தது.
இந்த அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு”.
இதில்
“பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்பு“
இதன் பொருள்
பெண்கள் தன்னைக் கொண்ட கணவனைப் போற்றி கடமைகளைச் செய்தால்
அடுத்து
“புத்தேளிர் வாழும் உலகு.”
இதன் பொருள்
தேவர்கள் வாழும் உலகில் பெரிய சிறப்பினைப் பெறுவார்கள்.
அதாவது
பெண்கள் தன்னைக் கொண்ட கணவனைப் போற்றி கடமைகளைச் செய்தால், தேவர்கள் வாழும் உலகில் பெரிய சிறப்பினைப் பெறுவார்கள்.
இந்த அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்.
“புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.“.
இதில்
“புகழ்புரிந்த இல்இலோர்க்கு”
இதன் பொருள்
புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்களுக்கு
அடுத்து
“இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை.”
அவர்களை இகழ்ந்து பேசும் பகைவர் முன் ஆண் சிங்கம் போன்ற பெருமித நடை இல்லை.
அதாவது
புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்களுக்கு, அவர்களை இகழ்ந்து பேசும் பகைவர் முன் ஆண் சிங்கம் போன்ற பெருமித நடை இல்லை.
இந்த அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு”.
இதில்
“மங்கலம் என்ப மனைமாட்சி“
இதன் பொருள்
மனைவியின் நற்குண நற்செயல்களே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்.
அடுத்து
“மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு.”
இதன் பொருள்
அந்த மங்கலத்திற்கு நன்மக்களைப் பெறுதலே அணிகலன் என்று சொல்வர்.
அதாவது
மனைவியின் நற்குண நற்செயல்களே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர். அந்த மங்கலத்திற்கு நன்மக்களைப் பெறுதலே அணிகலன் என்று சொல்வர்.
இந்த அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.
வாழ்க்கைத் துணைநலம்-2 பகுதியுடன் இந்த அதிகாரம் முடிவடைந்தது. அடுத்து வரும் அதிகாரம் புதல்வரைப் பெறுதல். அடுத்த பகுதியில் இந்த அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களை பார்க்க போகிறோம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி! வணக்கம்!
திருக்குறளின் மற்ற அத்தியாயங்களைக் கேட்க இங்கே கிளிக் செய்யவும்: