அதிகார விளக்கம்.
இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது திருக்குறளின் 16வது அதிகாரமான பொறையுடைமை. பொறையுடைமை என்றால் பொறுத்துக்கொள்ளும் பண்பாகும். பிறர் நமக்குத் தெரிந்தோ தெரியாமலோ தீங்கு செய்யும்போது மனதில் கோபம் உண்டாகலாம். அதற்குத் திரும்பித் தண்டிக்க நினைப்பது இயல்பு. அப்படி ஒவ்வொரு தடவையும் தண்டித்தால் பழி தீர்க்கும் குணம் தான் அதிகமாகும். ஒருவர் நமக்குத் தீங்கு செய்யும் போது அதைப் பொறுத்துக் கொண்டு மறந்துவிட வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது. பொறுத்தார் பூமி ஆழ்வார் என்பது பெரியோர் வாக்கு.
பொறையுடைமை 1
- முதல் குறள்.
“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.“
இதில்
‘அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல‘
இதன் பொருள்
தன்னைத் தோண்டுபவரையும் விழாமல் தாங்கும் நிலம் போல்
அடுத்து
‘தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை’
தம்மை இகழ்பவரையும் பொறுத்துக் கொள்ளுதல்
தலையாய அறம் ஆகும்.
அதாவது
தன்னைத் தோண்டுபவரையும் விழாமல் தாங்கும் நிலம் போல்
தம்மை இகழ்பவரையும் பொறுத்துக் கொள்ளுதல் தலையாய அறம் ஆகும்.
பொறையுடைமை அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.”
இதில்
‘பொறுத்தல் இறப்பினை என்றும்‘
இதன் பொருள்
பிறர் செய்த தீமையை எப்போதும் பொறுத்தல் நல்லது.
அடுத்து
‘அதனை மறத்தல் அதனினும் நன்று‘
இதன் பொருள்
அந்த தீமையை நினைவில் கொள்ளாமல் மறந்து விடுவதே பொறுத்தலை விட நல்லது.
அதாவது
பிறர் செய்த தீமையை எப்போதும் பொறுத்தல் நல்லது. அந்த தீமையை நினைவில் கொள்ளாமல் மறந்து விடுவது பொறுத்தலை விட நல்லது.
பொறையுடைமை அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.
- மூன்றாவது குறள்.
“இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை”.
இதில்
‘இன்மையுள் இன்மை விருந்தொரால்‘
இதன் பொருள்
வறுமையுள் வறுமை விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்.
அடுத்து
‘வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை‘
இதன் பொருள்
அது போல வலிமையுள் வலிமை அறியாமையால் தீங்கு செய்வோரைப் பொறுத்துக் கொள்வது.
அதாவது
வறுமையுள் வறுமை விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல். அது போல வலிமையுள் வலிமை அறியாமையால் தீங்கு செய்வோரைப் பொறுத்துக் கொள்வது.
பொறையுடைமை அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.
- நான்காவது குறள்.
“நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்“.
இதில்
‘நிறையுடைமை நீங்காமை வேண்டின்‘
இதன் பொருள்
நற்குணங்கள் நிறைய இருக்கும் தன்மை தன்னை விட்டு விலகக்கூடாது என்று விரும்பினால்
அடுத்து
‘பொறையுடைமை போற்றி ஒழுகப் படும்‘
பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.
அதாவது
நற்குணங்கள் நிறைய இருக்கும் தன்மை தன்னை விட்டு விலகக்கூடாது என்று விரும்பினால் பொறுமையைப் போற்றி ஒழுக வேண்டும்.
பொறையுடைமை அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள்.
“ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து“.
இதில்
‘ஒறுத்தாரை ஒன்றாக வையார்‘
இதன் பொருள்
தமக்குத் தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்.
அடுத்து
‘வைப்பர் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து‘
இதன் பொருள்
ஆனால் பொறுத்தவரைப் பொன்னாகக் கருதி மதிப்பர்.
அதாவது
தமக்குத் தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார். ஆனால் பொறுத்தவரைப் பொன்னாகக் கருதி மதிப்பர்.
பொறையுடைமை அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு இந்த பகுதி முடிவடைந்தது. அடுத்து உள்ள ஐந்து குறள்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
நன்றி! வணக்கம்!