ஹிதோபதேசக் கதை
ஹிதோபதேச கதைத் தொடரில் போன வாரம் எலி ராஜா ஹிரண்யகா, மான்,காகம், குள்ளநரி இந்த மூன்று விலங்குகளின் கதையை சொல்ல ஆரம்பித்தது. இந்தக் கதையில் மான் குள்ளநரியோடு நட்பாக இருக்க ஆசைப்பட்டதும், அதற்கு காகம் கழுகும் பூனையும் பற்றி ஒரு கதை ஆரம்பித்து எச்சரிப்பதையும் பார்த்தோம். பூனை தந்திரமா கழுகிடம் பேசி அந்த கழுகு வசிக்கும் பொந்தில் இருக்க அனுமதி வாங்கிவிட்டது. அதற்குப் பின் என்ன நடந்தது, அந்த கழுகுக்கு என்ன ஆனது என்று இந்த பகுதியில் பார்ப்போமா!
கழுகும் பூனையும்
காகம் கதையைத் தொடர்ந்தது. “பூனை அந்த கழுகின் பொந்துக்குள் வசிக்க ஆரம்பித்ததும், பறவை குஞ்சுகள் ஒவ்வொன்றாகக் காணாமல் போக ஆரம்பித்தது. ஒன்று அல்லது இரண்டு குஞ்சுகளை ஒவ்வொரு நாளும் அந்த பொந்துக்குள் எடுத்துக் கொண்டு வந்து சாப்பிட்டுவிட்டு எலும்புகளை அந்த பொந்திலேயே மறைத்தும் வைத்துவிடும். தாய் பறவைகள் குஞ்சுகளைக் காணாமல் தேட ஆரம்பித்தன. “அந்த குஞ்சுகளுக்கு இன்னும் பறக்கத் தெரியாதே. எங்கே போகமுடியும்” அந்த குஞ்சுகள் காணாமல் தாய் பறவைகளின் புலம்பலும் அழுகையும் அந்தக் காடு முழுவதும் கேட்டது. இது எல்லாம் அந்த பூனைக்குத் தெரிந்து விட்டது.
“இனிமே நான் இங்க இருக்கக்கூடாது. இருந்தால் எனக்கு ஆபத்து “அந்த கழுகிடம் கூட சொல்லிக் கொள்ளாமல்! அங்கிருந்து கிளம்பி வேறு இடத்துக்குப் போய்விட்டது. இவ்வளவு நடந்தும் அந்த கழுகுக்கு ஒன்றும் தெரியவில்லை. மீதிப் பறவைகளுடன் சேர்ந்து கண் தெரியாததால் அதனால் தேடவும் முடியவில்லை. கடைசியில் அந்த தாய் பறவைகள் அந்த கழுகின் பொந்துக்குள் வந்து பார்த்தன. அந்த பூனைதான் அந்த குஞ்சுகளைச் சாப்பிட்டுவிட்டு மீதியை மறைத்து வைத்திருக்கிறதே. அவ்வளவுதான். அதைப் பார்த்ததும் பறவைகள் எல்லாம் சேர்ந்து அந்த கழுகைக் கொத்திக் கொன்றுவிட்டன”.
“இப்போது புரிந்ததா! நான் ஏன் உன்னை முன்பின் தெரியாதவர்களோடு பழகுவதற்குமுன் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று சொல்கிறேன் என்று?” இந்தக் கதையைக் கேட்ட குள்ளநரிக்குக் கோபம் வந்தது. இயற்கைதானே.
குள்ளநரியின் எண்ணம் காக்கைக்குப் புரிந்தது என்றோ என்னவோ, தன்னைக் காப்பாற்றிக்கொள்ள “நீங்க இரண்டுபேரும் முதன் முதலில் சந்தித்ததை மறந்து விட்டீர்களா என்ன? முதல் சந்திப்பில் இரண்டு பேருக்கும் உங்களைப் பற்றித் தெரியாமல் தானே இருந்தீர்கள். இப்போது பார்த்தால் நீங்க இரண்டு பேரும் எவ்வளவு நெருக்கமா இருக்கிறீர்கள். அந்த மாதிரி ஏன் நானும் உங்களோடு நெருக்கமாக இருக்கக்கூடாது? உங்களுக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா? ஒரு வேளை இந்த மான், என்னிடம் உன்னைவிட நெருக்கமா ஆகிவிடும் என்று பயப்படுகிறாயா? குறுகிய மனப்பான்மை உடையவர்கள்தான், உன்னைப் போல் சந்தேகக் கண்ணோடு பார்ப்பார்கள். பரந்த மனப்பான்மை உள்ளவர்கள், இப்படி எல்லாம் வித்தியாசம் பார்க்காமல் நட்பாக பழகுவார்கள்” குள்ளநரி படபடவென்று பொரிந்தது.
குள்ளநரியும் காகமும் இப்படி விவாதம் செய்தது மானுக்குப் பிடிக்கவில்லை.” ஏன் தான் இந்த இரண்டு பேருக்கும் ஒத்துப்போக முடியவில்லையோ தெரியவில்லை.எல்லாரும் நண்பர்களாக இருக்க முடியாதா என்ன?” என்று நினைத்தது. தொண்டையைக் கனைத்துக்கொண்டே “அப்பா! விவாதம் பண்ணுவதை நிறுத்துங்களேன். நண்பனாக இருப்பதும், விரோதியாக இருப்பதும் நம் செய்கைதானே. அன்பா நடத்தினால், நாம் எல்லாரும் நல்ல நண்பர்களாகா இருக்க முடியும்.” மான் அதன் யோசனையைச் சொன்னது.
“இந்த மானுக்குப் புரியவே இல்லையே” வருத்தத்தோட காகமும் “ம்ம் அப்படியா! சரி! நீ சொன்னபடியே நட்பா இருப்போம்,” என்று அரை மனதோடு ஒப்புக்கொண்டது. காகத்துக்கு சந்தேகம் மட்டும் விலகவில்லை. இதற்குப் பிறகு மூன்று நண்பர்களும் காலையில் இரை தேட வெளியில் கிளம்புவார்கள். மாலையில் திரும்பி வந்ததும், அன்று நடந்த கதைகளைப் பேசி சந்தோஷப்படுவாங்க.
இப்படி ஒரு நாள் காலையில் காகம் பறந்து போவதற்குக் காத்திருந்த குள்ளநரி, மெதுவான குரலில் மானைப் பார்த்து “உன்கிட்ட ஒன்று சொல்லவேண்டும். நேற்று நான் இரையைத் தேடிப் போகும்போது அருமையான ஒரு வயலில் கோதுமைப் பயிரைப் பார்த்தேன். அந்தப் பயிர்களைப் பார்த்ததும் நீதான் என் ஞாபகத்துக்கு வந்தாய். என்னோடு நீ வா இன்று. நல்ல அருமையான சாப்பாடு உனக்குக் கிடைக்கும்,” மானுக்கு ஆசை காட்டியது. குள்ளநரி சொன்னதை நம்பிய மான் அதோடு அந்த அந்த வயலுக்குப் போனது. அதற்குப் பிறகு மான் தினமும் அந்த வயலுக்குப் போக ஆரம்பித்தது.
கோதுமையை வயலில் பயிர் செய்தால் தானே வரும். அப்படித்தான் இந்த வயலிலும் ஒரு விவசாயி கோதுமையைப் பயிர் செய்திருக்கிறார். நாளடைவில் அந்த விவசாயி பயிர்களுக்கு உண்டான சேதத்தைக் கவனித்தார். பயிரை நாசம் செய்யும் விலங்கைப் பிடிக்கவேண்டும் என்று ஒரு பொறியை வைத்தார். அடுத்த நாளிலேயே அந்தப் பொறியில் மான் மாட்டிக்கொண்டது. மான் அதை எதிர்பார்க்க வில்லை. “ஐயோ! இந்தப் பொறியில் வந்து மாட்டிக்கொண்டேனே! குள்ள நரியோ, காகமோ இந்த பக்கம் வந்தால் நல்லா இருக்குமே. நான் இந்த வலையிலிருந்து தப்பிக்க உதவுவார்களே” நம்பிக்கையோடு யார் வருவார்கள் என்று காத்திருந்தது.
குள்ளநரி மான் வலையில் மாட்டிக்கொள்ளும் நாளை எதிர்பார்த்துக் காத்திருந்தது. மான் வலையில் மாட்டிக்கொண்டதும் அதற்குச் சந்தோஷம் தாங்கவில்லை. “இதுக்குத்தானே காத்திருந்தேன். அந்த விவசாயி அதைக் கொன்று போட்டதுக்குப்புறம் நிதானமா ருசித்து சாப்பிடவேண்டும்” என்று அந்தப் பக்கம் வந்தது. குள்ளநரியைப் பார்த்ததும் மானுக்கு மறுபிறவி எடுத்த மாதிரி இருந்தது.
“ஆ! வந்துவிட்டாயா! சீக்கிரம் வா. வந்து உன் கூரான பற்களால் இந்த வலையைக் கடித்து என்னைக் காப்பாற்று. நல்லவேளை நீ வந்தாய். நல்ல நண்பர்கள் நல்லதிலும் கெட்டதிலும் உதவத்தானே இருக்கிறார்கள். நீ எனக்கு நண்பனாகக் கிடைத்தது என் அதிர்ஷ்டம்” மான் குள்ளநரியைப் பார்த்துக் கேட்டது. குள்ளநரியும் அந்த மானைச்சுற்றி இருந்த வலையைச் சுற்றி வந்து நோட்டம் விட்டது. அந்த மானால் தப்பிக்க முடியாது என்று தெரிந்ததும் குரலைச் சோகமா வைத்துக்கொண்டு தந்திரமாக “என்னை மன்னித்துவிடு. இன்று நான் விரதம் இருக்கிறேன். ஒன்றும் சாப்பிடமாட்டேன். இந்த வலை மாமிசத்தால் ஆனது. என்னால் இதை இன்று கடிக்க முடியாது. இன்று ஒரு நாள் பொறுத்துக்கொள். நாளை காலையில் முதல் வேலையா உன்னை இந்த வலையிலிருந்து காப்பாற்றுகிறேன் “சொல்லிவிட்டு அங்க இருந்து கிளம்பிவிட்டது.
மான் “நண்பனாக நினைத்த குள்ளநரியா இப்படிச் சொன்னது” என்று திகைத்தது. குள்ளநரியும் கொஞ்ச தூரம் போனதும் இரண்டு பெரிய பாறைகளுக்கு நடுவில் ஒளிந்து கொண்டது.” ஓ இது தான் இவ்வளவு நாட்களாக இந்த குள்ளநரியின் திட்டமா?” இப்படி நினைத்ததும் மானின் உடல் பயத்தில் நடுங்க ஆரம்பித்தது. “என்னை ஏமாற்றி, இந்த வயலுக்கு வரவழைத்து, ஆபத்தில் என்னை மாட்டிவிட்டு நாளைக்கு வருகிறேன் என்று எவ்வளவு தந்திரமாகச் சொல்லிவிட்டுப் போகிறது இந்த நரி” மான் வருந்தியது.
அதே சமயத்தில் மானும் குள்ளநரியும் திரும்பி வராததைப் பார்த்த காகம் அவர்களுக்காகக் காத்திருந்தது. “திரும்பி வரும் நேரம் கடந்து போயிடுச்சே! என்ன ஆயிற்று இவர்களுக்கு” காகம் கவலைப்பட ஆரம்பித்தது. சுத்தி சுத்தி பார்த்தது. “எங்கே போனார்கள் இந்த இரண்டு பேரும்” அவர்களைத்தேடிப் பறக்க ஆரம்பித்தது. வயலுக்குப் பக்கத்தில் வந்ததும் வலையில் மாட்டிக்கொண்ட மானைப் பார்த்தது. “என்ன ஆயிற்று? எப்படி இந்த வலையில் மாட்டிக்கொண்டாய்?” காகம் தன் நண்பனைக் கேட்டது. ” நீ சொன்ன அறிவுரையைக் கேட்காமல் போனதால் வந்த வினைதான் இது”. மான் சொன்னதும் “ஆமா! குள்ள நரி எங்கே?” என்று காகம் கேட்டது. காகத்திற்கு இது குள்ளநரியின் தந்திரமாகத்தான் இருக்க வேண்டும் என்று புரிந்தது.
“என்னை எப்பொழுது சாப்பிடமுடியும் என்று எங்கேயாவது ஒளிந்து கொண்டிருக்கும்” மானின் குரலில் ஏமாற்றம் இருந்தது. “என் பேச்சை நீ கேட்கவில்லை என்று சுட்டிக்காட்ட விரும்பவில்லை. ஆனாலும் பார்! நீ எல்லோரையும் சுலபமா நம்பி விடுகிறாய்.வெளுத்ததெல்லாம் பால் என்று நீ நினைக்கிறாய். அதனால்தான் இப்படி நடக்கிறது. நீ எல்லாரையும் உன்னைப் போல் இருப்பார்கள் என்று நம்பிவிடுகிறாய். நல்லவர்களும் இருப்பார்கள். இந்த உலகத்தில் கெட்டவர்களும் இருப்பார்கள். உன்னை ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள். இது உனக்கு ஏன் புரியமாட்டேன் என்கிறது’ காகம் படபடவென்று சொல்லிவிட்டு அதன் கோபத்தைக் குள்ளநரிமேல் காண்பித்தது. “அந்த குள்ளநரி முகத்தைப் பார்க்கவே எனக்குப் பிடிக்கவில்லை. எவ்வளவு பெரிய நம்பிக்கைத் துரோகி. எப்படிப் பொய் சொல்லி உன்னை ஏமாற்றி இருக்கிறது. இவர்கள் மாதிரி இருப்பவர்கள் எல்லாம் தேனொழுகப் பேசி நஞ்சை கொடுப்பார்கள். எப்போது ஏமாற்றி நம்மை அடிப்பார்கள் என்று தெரியவே தெரியாது”. காகம் மனதில் உள்ள கோபத்தைக் கொட்டியது.
சூரியனும் மறைந்தது. இரண்டு நண்பர்களும் இரவு முழுவதும் தூங்கவே இல்லை.அதிகாலை நேரத்தில் அந்த விவசாயி வரும் காலடி சத்தம் கேட்டது. கூடவே ஒரு பலமான தடியால் எதையோ அடிக்கும் சத்தமும் கேட்டது. விவசாயியின் கைகளில் கெட்டியான தடி ஒன்று இருந்ததை காகம் பார்த்து விட்டது.
“அவன் வரான், அவன் வரான். அப்படியே அசையாமல் செத்தது மாதிரி படுத்துக் கிட. என்ன ஆனாலும் அசையாதே. வயிற்றை உப்பினமாதிரி வைத்துக்கொள். நான் உன் கண்ணைக் கொத்துவது போல நடிக்கிறேன். நான் “காகா” என்று கரையும் போது ஒரே ஓட்டமா எழுந்து ஓடிடு. பக்கத்தில் வந்துவிட்டான் நீ படு”. காக்கா திட்டத்தைச் சொன்னது. மானும் வயிற்றை கற்றடைத்தைப் போல் உப் என்று வைத்துக்கொண்டு இறந்ததைப் போல் நடித்தது. கண்களை இமைக்காமல் வைத்துக்கொண்டது. காகமும் மானின் கண்களைக் கொத்துவது போல் நடித்தது.
“அட! அதுவே செத்துப்போச்சா!” விவசாயி நிம்மதியோடு அந்த வலையை எடுத்து பக்கத்தில் வைக்கத் திரும்பினான். மானைவிட்டு அவன் சிறிது நகர்ந்ததுதான் தாமதம், காகம் கரைய ஆரம்பித்தது. அவ்வளவுதான்! மான் குதித்து ஒரே தாவலில் அங்க இருந்து ஓட ஆரம்பித்தது. அந்த விவசாயி மான் ஓடுவதைப் பார்த்துத் திகைத்து நின்று விட்டான். “என்ன! இறந்து போன மான் எப்படி எழுந்து ஓடுகிறது?” கோபத்தில் தன் கையில் தடியை மானைத் தாக்க வேகமா அதன் மீது வீசினான். ஆனால் நடந்ததோ வேறு.
குள்ளநரியின் திட்டம் திசைமாறினதும் மறைவிடத்திலிருந்து மானைத் தொடர வேகமாக வந்தபோது விவசாயி வீசிய தடி அதன் மீது பலமாக விழுந்து உயர் போய்விட்டது. நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும் எதிர்வினையை அனுபவித்துத்தானே ஆகவேண்டும். இதனால்தான் நான் சொன்னேன் நீயும் நானும் நண்பர்களாக முடியாது என்று” ஹிரண்யகா கதையை முடித்தது.”
“நாம் இயற்கையான எதிரிகள். நீ அதைப் புரிந்துகொள் முதலில்” ஹிரண்யாகா மறுபடியும் சொன்னது. லகுபட்னகா மனசு மாறவில்லை. “இதோ பார்! என்னுடைய பசிக்கு நீ போதவே போதாது. உன்னைக் கொன்று என் பசியை அடக்க முடியாது. எதிரியாய் இருந்தாலும் நம்பிக்கையோடு இருந்தால் நல்ல நண்பர்களாக முடியும். நீ சித்ரக்ரீவாவுக்கு உதவி செய்ததைப் பாரத்து உன்னைவிட எனக்கு மனமில்லை. எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் நல்ல நண்பர்களின் நட்பு உடையாது. இதுவே பலவீனமான நட்பு, ஒரு சின்ன பிரச்சனையிலும் உடைந்துவிடும். நல்ல நண்பர்கள் நடுவில் கருத்து வேறுபாடுகள் வரலாம். அந்த சமயத்திலும் அவர்கள் ஒருவருக்கொருவர் பிரச்சனைகளை உண்டுபண்ணுவதில்லை. மரியாதையும் அன்பும் என்றும் குறையாது”. லகுபட்னகா விடாமல் அதன் எண்ணத்தைச் சொன்னது.
எலிராஜாவுக்கு லகுபட்னகா மேல் ஒரு மரியாதை வந்தது. ” நீ ரொம்ப நல்லாவே பேசுகிறாய். நீ சொல்லும் வார்த்தைகளில் உண்மை தெரிகிறது. நாம் நண்பர்களாக இருப்போம்” எலிராஜாவும் லகுபட்னகாவும் நல்ல நண்பர்களாக மாறினார்கள். இரண்டு பேரும் அடிக்கடி சந்தித்து வம்படிப்பார்கள். அப்படி இருக்கும்போது ஒரு நாள் லகுபட்னகா அதன் திட்டத்தை எலிராஜாகிட்ட சொன்னது. “இந்த இடத்தில் உணவு சரியாகக் கிடைக்கவில்லை. நான் இங்கிருந்து வேறு இடத்துக்குப் போகலாம் என்று நினைக்கிறேன்,” லகுபட்னகா சொல்ல எலிராஜா வியப்பா” என்ன! எங்கே போகப்போகிறாய்?” குழப்பத்தோட கேட்டது.
இதோடு கழுகும் பூனையும் கதை முடிந்தது.
லகுபட்னகா எங்கே போகப்போகிறது? ஹிரணயகா என்ன செய்யப்போகிறது என்பதை அடுத்த பகுதியில் மறக்காமல் வந்து கேளுங்கள்.
நன்றி! வணக்கம்!