இந்தப் பகுதியில் திருக்குறளின் 54வது அதிகாரமான பொச்சாவாமையிலிருந்து முதல் ஐந்து குறள்களை பார்க்கப்போகிறோம்.
பொச்சாப்பு என்றால் மறதியைக் குறிக்கும். பொச்சாவாமை என்றால் எதிலும் மறதி இல்லாமல் விழிப்புடன் இருப்பதைக் குறிக்கும். மறதியால் கடமையைச் செய்யாமல் அலட்சியமாக இருப்பது புகழை அழித்துவிடும். எந்தச் சூழ்நிலையிலும் சோர்வு இல்லாமல் கவனத்துடன் செயல்பட வேண்டும். செல்வம், பதவி, அதிகாரம் இவைகள் மனிதனுக்கு செருக்கைக் கொடுக்கும். இன்பம், துன்பம் எதிலும் சமநிலையோடு செயல்பட வேண்டும். அதிக உணர்ச்சிப் பெருக்கால் ஏற்படும் மனச்சோர்வு அதிக கோபத்தைவிட துன்பத்தைத் தரும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.
பொச்சாவாமை – 1
- முதல் குறள்.
“இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு”.
இதில்
‘இறந்த வெகுளியின் தீதே’
இதன் விளக்கம்
அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் தீமையானது ஆகும்.
அடுத்து
‘சிறந்த உவகை மகிழ்ச்சியின் சோர்வு’
இதன் விளக்கம்
மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும்போது மறதியால் வரும் சோர்வு.
அதாவது
மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும்போது மறதியால் வரும் சோர்வு,
அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் தீமையானது ஆகும்.
பொச்சாவாமை அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு“.
இதில்
‘பொச்சாப்புக் கொல்லும் புகழை‘
இதன் விளக்கம்
ஒருவனுடைய புகழை அவன் மறதி கெடுக்கும்.
அடுத்து
‘அறிவினை நிச்ச நிரப்புக்கொன் றாங்கு‘
இதன் விளக்கம்
நாள்தோறும் விடாது வரும் வருமை அறிவைக் கொல்வது போல்
அதாவது
நாள்தோறும் விடாது வரும் வருமை அறிவைக் கொல்வது போல், ஒருவனுடைய புகழை அவன் மறதி கெடுக்கும்.
பொச்சாவாமை அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.
- மூன்றாவது குறள்.
“பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.“
இதில்
‘பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை‘
இதன் விளக்கம்
மறதியுடன் வாழ்பவர்க்கு புகழுடன் வாழும் தன்மை இல்லை.
அடுத்து
‘அதுஉலகத்து எப்பால்நூ லோர்க்கும் துணிவு‘
இதன் விளக்கம்
அது எல்லாத் துறைகளிலும் கற்றுணர்ந்த சான்றோர்களின் கருத்தாகும்.
அதாவது
மறதியுடன் வாழ்பவர்க்கு புகழுடன் வாழும் தன்மை இல்லை. அது எல்லாத் துறைகளிலும் கற்றுணர்ந்த சான்றோர்களின் கருத்தாகும்.
பொச்சாவாமை அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.
- நான்காவது குறள்.
“அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு”.
இதில்
‘அச்ச முடையார்க்கு அரணில்லை‘
இதன் விளக்கம்
மனதில் அச்சம் உடையவர்க்கு பாதுகாப்பான அரண் இருந்தும் பயனில்லை.
அடுத்து
‘ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு’
இதன் விளக்கம்
அதுபோல மறதி இருந்தால் நல்ல நிலைவாய்த்தும் ஒரு பயனும் இல்லை.
அதாவது
மனதில் அச்சம் உடையவர்க்கு பாதுகாப்பான அரண் இருந்தும் பயனில்லை. அதுபோல மறதி இருந்தால் நல்ல நிலை வாய்த்தும் ஒரு பயனும் இல்லை.
பொச்சாவாமை அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள்.
“முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்”.
இதில்
‘முன்னுறக் காவாது இழுக்கியான்’
இதன் விளக்கம்
தனக்கு வரும் துன்பங்களை முன்னே அறிந்து காக்காமல் மறந்து சோர்ந்தவன்.
அடுத்து
‘தன்பிழை பின்னூறு இரங்கி விடும்‘
இதன் விளக்கம்
அவை வந்தபின்பு தடுக்க முடியாமல் பிழையை எண்ணி வருந்துவான்.
அதாவது
தனக்கு வரும் துன்பங்களை முன்னே அறிந்து காக்காமல் மறந்து சோர்ந்தவன் அவை வந்தபின்பு தடுக்க முடியாமல் பிழையை எண்ணி வருந்துவான்.
பொச்சாவாமை அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது. இந்தக் குறளோடு இந்தப் பகுதி முடிவடந்தது. பொச்சாவாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்துவரை உள்ள குறள்களை அடுத்த பகுதியில்பாரப்போம்.



