சுற்றந்தழால் அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களை முந்தைய பகுதியில் பார்த்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில் நீங்கள் கேட்கலாம்.
சுற்றந்தழால் என்பதற்குப் பொருள் நம்மைச் சுற்றி உள்ளவர்களோடு இணைந்து ஆதரவோடு நடந்து கொள்வது ஆகும். நல்லது கெட்டது என்று எது நடந்தாலும் நமக்குத் துணையாக இருப்போர்களே சிறந்த சுற்றம் ஆவார்கள். சுற்றத்தின் தேவையையும் அதன் சிறப்பையும் இந்த அதிகாரம் சொல்கிறது.
சுற்றந்தழால் – 2
- ஆறாவது குறள்.
“பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்.“
இதில்
‘பெருங்கொடையான் பேணான் வெகுளி‘
இதன் பொருள்
ஒருவன் பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் இருந்தால்.
அடுத்து
‘அவனின் மருங்குடையார் மாநிலத்து இல்‘
இதன் பொருள்
அவனைப் போலச் சுற்றத்தாரை உடையவர் உலகில் யாரும் இல்லை.
அதாவது
ஒருவன் பெரிய கொடையாளியாகவும், சினமற்றவனாகவும் இருந்தால் அவனைப் போலச் சுற்றத்தாரை உடையவர் உலகில் யாரும் இல்லை.
சுற்றந்தழால் அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்.
“காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.”
இதில்
‘காக்கை கரவா கரைந்துண்ணும்’
இதன் பொருள்
காக்கை தனக்குக் கிடைத்ததை மறைத்து வைக்காமல் தன் இனத்தைக் கூவி அழைத்து உண்ணும்.
அடுத்து
‘ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள’
இதன் பொருள்
செல்வமும் அத்தகைய குணம் உடையவர்க்கே உண்டு.
அதாவது
காக்கை தனக்குக் கிடைத்ததை மறைத்து வைக்காமல் தன் இனத்தைக் கூவி அழைத்து உண்ணும். செல்வமும் அத்தகைய குணம் உடையவர்க்கே உண்டு.
சுற்றந்தழால் அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.”
இதில்
‘பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்‘
இதன் பொருள்
அரசன் எல்லோரையும் பொதுவாகப் பார்க்காமல் அவரவர் தகுதிக்கேற்ப நோக்கினால்.
அடுத்து
‘அதுநோக்கி வாழ்வார் பலர்‘
இதன் பொருள்
அந்தச் சிறப்பை விரும்பிப் பலர் சுற்றமாக வாழ்வார்கள்.
அதாவது
அரசன் எல்லோரையும் பொதுவாகப் பார்க்காமல் அவரவர் தகுதிக்கேற்ப நோக்கினால், அந்த சிறப்பை விரும்பிப் பலர் சுற்றமாக வாழ்வார்கள்.
சுற்றந்தழால் அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது,
- ஒன்பதாவது குறள்.
“தமராகிக் தன்துறந்தார் சுற்றம் அமராமைக்
காரணமின்றி வரும்.”
இதில்
‘தமராகிக் தன்துறந்தார் சுற்றம்’
இதன் பொருள்
சுற்றமாகி இருந்து பின் ஏதோ ஒரு காரணத்தால் பிரிந்து சென்றவர்கள்.
அடுத்து
‘அமராமைக் காரணமின்றி வரும்‘
அந்தக் காரணம் நீங்கியபின் மீண்டும் தானே வந்து சேர்வார்கள்.
அதாவது
சுற்றமாகி இருந்து பின் ஏதோ ஒரு காரணத்தால் பிரிந்து சென்றவர்கள், அந்தக் காரணம் நீங்கியபின் மீண்டும் தானே வந்து சேர்வார்கள்.
சுற்றந்தழால் அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்.”
இதில்
‘உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்’
இதன் பொருள்
தன்னிடமிருந்து பிரிந்து சென்றபின் ஏதோ ஒரு காரணத்தால் திரும்பி வந்தவனை.
அடுத்து
‘இழைத்திருந்து எண்ணிக் கொளல்’
இதன் பொருள்
அரசன் அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்த பின் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அதாவது
தன்னிடமிருந்து பிரிந்து சென்றபின் ஏதோ ஒரு காரணத்தால் திரும்பி வந்தவனை, அரசன் அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்த பின் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சுற்றந்தழால் அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.
இந்தக் குறளோடு இந்த அத்தியாயம் முடிவடைந்தது.
அடுத்த பகுதியில் நாம் பார்க்கப்போகும் அதிகாரம் பொச்சாவாமை.
நன்றி! வணக்கம்!



