தெரிந்து வினையாடல் அதிகாரத்தின் முதல்ஐந்து குறள்களை இதற்கு முந்தைய பகுதியில் பாரத்தோம். இந்தப் பகுதியில் தெரிந்துவினையாடல் அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களைப் பாரக்கப்போகிறோம்.
செய்யும் செயல்களின் நன்மை தீமைகளை ஆறாய்ந்து செய்ய வேண்டும். அடைய வேண்டிய இலக்கை அறிந்து செயல்களைச் செய்யவேண்டும. செயல்களைச் செய்பவர்க்கு முழு உரிமை அளிக்க வேண்டும். செயல்கள் செய்யும்போது சிலர் தடம் மாறுவதும் உண்டு. இப்படி இந்த அதிகாரம் அறிவுறைகளை சொல்கிறது.
தெரிந்து வினையாடல் – 2
- ஆறாவது குறள்.
“செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.”
இதில்
‘செய்வானை நாடி’
இதன் பொருள்
ஒரு செயலைச் செய்பவனின் தகுதியை ஆராய்ந்து.
அடுத்து
‘வினைநாடி’
இதன் பொருள்
பின் செய்யும் செயலின் தன்மையையும் ஆராய்ந்து.
அடுத்து
‘காலத்தோடு எய்த உணர்ந்து செயல்’
இதன் பொருள்
தக்கக் காலத்தோடு பொருந்துமாறு செய்ய வேண்டும்.
அதாவது
ஒரு செயலைச் செய்பவனின் தகுதியை ஆராய்ந்து பின் செய்யும் செயலின் தன்மையையும் ஆராய்ந்து தக்கக் காலத்தோடு பொருந்துமாறு செய்ய வேண்டும்.
தெரிந்து வினையாடல் அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்.
“இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.“
இதில்
‘இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து‘
இதன் பொருள்
ஒரு செயலை ஒருவனால் எப்படி செய்து முடிக்கும் வல்லமை உள்ளவன் என்று ஆராய்ந்து.
அடுத்து
‘அதனை அவன்கண் விடல்‘
இதன் பொருள்
அந்தச் செயலை அவனிடத்தில் ஒப்படைக்க வேண்டும்.
அதாவது
ஒரு செயலை ஒருவனால் எப்படி செய்து முடிக்கும் வல்லமை உள்ளவன் என்று ஆராய்ந்து அந்தச் செயலை அவனிடத்தில் ஒப்படைக்க வேண்டும்.
தெரிந்து வினையாடல் அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.“
இதில்
‘வினைக்குரிமை நாடிய பின்றை’
இதன் பொருள்
இந்தச் செயலைச் செயவதற்கு இவன் உரியவன் என்று ஆராய்ந்த பின்பு.
அடுத்து
‘அவனை அதற்குரிய னாகச் செயல்’
இதன் பொருள்
அவனை அச்செயலுக்கு உரியவனாக நியமிக்க வேண்டும்.
அதாவது
இந்தச் செயலைச் செயவதற்கு இவன் உரியவன் என்று ஆராய்ந்த பின்பு அவனை அச்செயலுக்கு உரியவனாக நியமிக்க வேண்டும்.
தெரிந்து வினையாடல் அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்.
“வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு.”
இதில்
‘வினைக்கண் வினையுடையான் கேண்மை’
இதன் பொருள்
எப்பொழுதும் தான் செய்யும் தொழிலில் முயற்சி உடையவனின் உறவை.
அடுத்து
‘வேறாக நினைப்பானை நீங்கும் திரு‘
இதன் பொருள்
பிறர் சொல் கேட்டுத் தவறாகத் தலைவன் நினைத்தால் செல்வத் திருமகள் அவனை விட்டு நீங்குவாள்.
அதாவது
எப்பொழுதும் தான் செய்யும் தொழிலில் முயற்சி உடையவனின் உறவைப் பிறர் சொல் கேட்டுத் தவறாகத் தலைவன் நினைத்தால் செல்வத் திருமகள் அவனை விட்டு நீங்குவாள்.
தெரிந்து வினையாடல் அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.”
இதில்
‘நாடோறும் நாடுக மன்னன்’
இதன் பொருள்
அதனால் மன்னன் நாள்தோறும் அவன் செயலை ஆராய வேண்டும்.
அடுத்து
‘வினைசெய்வான் கோடாமை கோடா துலகு’
இதன் பொருள்
தொழில் செய்பவர்கள் நேர்மையாகத் தவறு செய்யாமல் இருக்கும் வரையில் உலகம் கெடாது.
அதாவது
தொழில் செய்பவர்கள் நேர்மையாகத் தவறு செய்யாமல் இருக்கும் வரையில் உலகம் கெடாது. அதனால் மன்னன் நாள்தோறும் அவன் செயலை ஆராய வேண்டும்.
தெரிந்து வினையாடல் அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.
இந்தக் குறளோடு இந்த அதிகாரம் முடிவடைந்தது. அடுத்த பகுதியில் இடம் பெறும் அதிகாரம் சுற்றந்தழால்.
நன்றி! வணக்கம்!



