இந்த பகுதியில் தொடர்வது புலான்மறுத்தல் அதிகாரத்திலிருந்து ஆறு முதல் பத்து வரை உள்ள குறள்கள். புலான்மறுத்தல் அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை முந்தைய பகுதியில் பார்த்தோம்.
விலங்குகளுக்கும் உயிர் வாழும் உரிமை இருக்கிறது. ஓர் உயிரைக் கொன்று அதைத் தின்பது அறத்திற்கு எதிரானது. அதனால் அதைத் தவிர்க்க வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது. புலால் உண்பதில் உள்ள இழிவுகளையும் இந்த அதிகாரம் சொல்கிறது.
புலான் மறுத்தல் 2
- ஆறாவது குறள்.
“தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்“.
இதில்
‘தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின்‘
இதன் பொருள்
புலால் உண்பதற்காக ஓர் உயிரை உலகத்தார் கொல்லாதிருப்பின்
அடுத்து
‘யாரும் விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்’
இதன் பொருள்
பொருள் காரணமாக ஊன் விற்பவர்களும் உலகில் யாரும் இருக்க மாட்டார்.
அதாவது
புலால் உண்பதற்காக ஓர் உயிரை உலகத்தார் கொல்லாதிருப்பின், பொருள் காரணமாக ஊன் விற்பவர்களும் உலகில் யாரும் இருக்க மாட்டார்.
புலான்மறுத்தல் அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்.
“உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்“.
இதில்
‘புலாஅல் பிறிதொன்றன் புண்’
இதன் பொருள்
புலால் என்பது மற்றோர் உடம்பின் புண்ணாகும்.
அடுத்து
‘அது உணர்வார்ப் பெறின் உண்ணாமை வேண்டும்’
இதன் பொருள்
அதனால் புலால் உண்ணாதிருக்க வேண்டும்.
அதாவது
புலால் என்பது மற்றோர் உடம்பின் புண்ணாகும். அதனால் புலால் உண்ணாதிருக்க வேண்டும்.
புலான்மறுத்தல் அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்“.
இதில்
‘செயிரின் தலைப்பிரிந்த காட்சியார்‘
இதன் பொருள்
அஞ்ஞானமாகிய குற்றத்திலிருந்து நீங்கிய அறிவுடையவர்கள்
அடுத்து
‘உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன்‘
ஓர் உயிர் பிரிந்த ஊனை உண்ணமாட்டார்கள்.
அதாவது
அஞ்ஞானமாகிய குற்றத்திலிருந்து நீங்கிய அறிவுடையவர்கள் ஓர் உயிர் பிரிந்த ஊனை உண்ணமாட்டார்கள்.
புலான்மறுத்தல் அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்.
“அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று“.
இதில்
‘அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின்‘
இதன் பொருள்
நெய் முதலியவற்றை தீயீல் சேர்த்து ஆயிரம் வேள்விகளை செய்வதை விட
அடுத்து
‘ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று‘
இதன் பொருள்
ஒரு விலங்கினைக் கொன்று அதன் ஊனை உண்ணாமை நன்று.
அதாவது
நெய் முதலியவற்றை தீயீல் சேர்த்து ஆயிரம் வேள்விகளை செய்வதை விட ஒரு விலங்கினைக் கொன்று அதன் ஊனை உண்ணாமை நன்று.
புலான் மறுத்தல் அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்“.
இதில்
‘கொல்லான் புலாலை மறுத்தானை‘
இதன் பொருள்
எந்த உயிரையும் கொல்லாமல் புலாலும் உண்ணாதவனை
அடுத்து
‘கைகூப்பி எல்லா உயிருந் தொழும்‘
இதன் பொருள்
எல்லா உயிர்களும் கை கூப்பித்தொழும்.
அதாவது
எந்த உயிரையும் கொல்லாமல் புலாலும் உண்ணாதவனை எல்லா உயிர்களும் கை கூப்பித்தொழும்.
புலான்மறுத்தல் அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு இந்த பகுதி முடிவடைந்தது.
அடுத்த பகுதியில் நாம் பார்க்கப்போகும் அதிகாரம் தவம்.
நன்றி1 வணக்கம்!