ஹிதோபதேசக் கதை
போன பகுதியில் சித்ரக்ரீவா சொன்ன ஒற்றுமையே பலம் என்ற கதையைப் பார்த்தோம். இந்த கதை ஹிதோபதேசத்தில் நண்பர்களைக் கவர்வது எப்படி என்று சொல்லும் பகுதியில் வருகிறது. இந்த பகுதியில் மான், காகம், ஒரு குள்ளநரி இந்த மூன்றையும் பற்றிய கதையை நீங்கள் கேட்கப்போகிறீர்கள். போன பகுதியில் காகம் லகுபட்னகா, எலிராஜா ஹிரண்யகாவோட நட்புக்கு ஆசைப்பட்டு, ஹிரண்யாகாவிடம் போய் அதன் ஆசையை சொன்னது. ஆனால் ஹிரண்யகாவோ ரொம்ப தயங்கியது. காகமோ எலியைப் பிடித்துத் தின்னும் பறவை. இயற்கையான எதிரி. அதை அந்த காகத்துக்குப் புரியவைக்க எலிராஜா ஒரு மான், காகம் ஒரு குள்ளநரி இந்த மூன்றுக்கும் நடந்த கதையைச் சொல்ல ஆரம்பித்தது.
மான்,காகம்,குள்ளநரி
மகத ராஜ்யத்தில் “சம்பகாவதி” என்ற அடர்ந்த காடு ஒன்று இருந்தது. அந்த காட்டில் இரண்டு நல்ல நண்பர்கள் இருந்தார்கள். அந்த இரண்டும் வேறு யாருமில்லை. ஒரு காகமும் ஒரு மானும்தான்.அந்த காடோ ரொம்ப செழிப்பானது. பெரிய மரங்கள் என்ன! காய்கள் கனிகள் என்ன! விலங்குகள் சாப்பிட ஏராளமா இருந்தது. மானுக்கு சாப்பிடத் தேவையானதெல்லாம் நிறையவே இருந்தது. மானும் எப்போதும் வயிறு நிறையத்தான் சாப்பிடும். நல்லா சாப்பிட்டுச் சாப்பிட்டுக் கொழு கொழுனு இருந்தது. அதே காட்டில் ஒரு குள்ளநரியும் இருந்தது.
ஒரு நாள் மான் சாப்பிட அந்த காட்டில் அலையும் போது குள்ளநரி அதைப் பார்த்துவிட்டது. “அஹா! இந்த மானை அடித்துச் சாப்பிட்டால் எவ்வளவு ருசியா இருக்கும்” குள்ளநரி இப்படி நினைக்கும்போதே அதன் வாயில் எச்சில் ஊற ஆரம்பித்துவிட்டது.அதை அடித்துக் கொல்லலாமென்று ஓர் அடி முன்னாடி எடுத்து வைத்தது. உடனே அடித்துக் கொல்ல வேண்டாம். நான் வரும் சத்தத்தைக் கேட்டுப் பயந்து ஓடிடும். அதைப் பயமுறுத்தாமல் அதோடு நட்பாகப் பேசி முதலில் என்னை நம்ப வைக்கலாம். அதுதான் நல்லது.அப்பத்தான் நிதானமா அதை ருசித்துச் சாப்பிடமுடியும். மெதுவா சத்தம் போடாமல் அந்த மானைப் பார்க்காத மாதிரியே அதன் பக்கத்தில் போனது. திடீரென்று அந்தமானை எதிர்ப்பாக்காத மாதிரி” ஓ! நீயா! உன்னை இங்க எதிர் பார்க்கவே இல்லையே? எப்படி இருக்கே? நல்லா இருக்கியா?” அந்த மானுக்கு சந்தேகம் வராத மாதிரி அதோடு பேச ஆரம்பித்தது.
எதிர்பார்க்காமல் அந்த மானோடு அந்த குள்ளநரி பேச ஆரம்பித்ததும் மான் அங்க இருந்து போய்விடலாமென்று போக நினைத்தது. ஆனால் “அந்த குள்ள நரி நட்பாதான பேசினது? என்னோடு பேச ஆசைப் பட்டுதான் வந்திருக்கு. பயப்படாமல் அதோடு பேசலாமே” மானும் அந்த குள்ள நரியைப் பார்த்து” ஆமா! யார் நீ ?இதற்கு முன் உன்னைப் பார்த்ததில்லையே?” கேட்டது.
“நானா! என் பெயர் ஷுத்ரபுத்தி” என்ற குள்ளநரி “இந்தக் காட்டில் தான் நானும் தனியா இருக்கிறேன். யாரும் இல்லை எனக்கு. அந்தக் கடவுள் தான் நம் இரண்டு பேரையும் சந்திக்க வைத்திருக்கிறார். இனிமே நாம் இருவரும் நல்ல நண்பர்கள். உனக்கு என்ன தேவையோ என்னிடம் சொல். நான் செய்கிறேன் உனக்கு எல்லாம்” அந்த மானை மயக்கும் விதத்தில் பேசியது. பாவம் அந்த மான் குள்ள நரி சொன்னதை நம்பிவிட்டது. நரி சொன்னதில் அதுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை.
இது தான் வெளுத்ததெல்லாம் பாலென்று நம்பும் வகையோ என்னவோ. இல்லை, வெளி உலகம் எப்படி இருக்குமென்று தெரியாமலும் இருக்கலாம். மக்கு மாதிரி அந்த குள்ள நரியை அதன் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டுபோனது. மானும் குள்ளநரியும் மானுடைய வீட்டுக்குப் பக்கத்திலிருந்த போது சுபுத்தி என்ற காக்கா அந்த இரண்டையும் பார்த்தது. சுபுத்தியும் அந்த மானும் நல்ல நண்பர்கள். மானையும் நரியையும் சேர்ந்து பார்த்தபோது அதால் நம்ப முடியவில்லை.” ஐயோ! இந்த மான் அந்த நரியோடு ஏன் சேர்ந்து போகிறது? மானுடைய வீட்டிற்கு வேற கூட்டிக்கொண்டு போகிறது. முதலில் இங்க என்ன நடக்குதுனு அந்த மானைக் கேட்க வேண்டும்” முடிவு பண்ணி “ஹே! யார் இது? புதிதாக இருக்கிறதே/” காக்கா கேட்டது.
“ஓ! இது குள்ளநரி. இந்த காட்டில் தான் இருக்கிறது. பாவம் அதுக்கு இங்க யாருமே இல்லை. நம்முடன் நட்பா இருக்க ஆசைப்படுகிறது” மான் சொன்னது. “என்ன குள்ளநரி நம்மோடு நட்பா இருக்க ஆசைப் படுகிறதா? உனக்குப் புரியலையா ஏன் அது நம்மோடு நட்பா இருக்க ஆசைப்படுகிறதென்று? முன் பின் தெரியாதவர்களோடு நட்பா பழகுவது ஆபத்தில் முடியுமென்று தெரியாதா உனக்கு? உனக்கு அந்த நரியை இதற்கு முன் தெரியாது. அதன் குணம் என்ன எப்படி என்றும் தெரியாது. இப்படி எதுவுமே தெரியாமல் இருக்கும் போது ஏன் அந்த நரியை உன்னுடைய வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போகிறாய்? ஒரு கதை சொல்வார்கள். அந்தக் கதையில் ஒரு கழுகு ஒரு பூனையை அதன் வீட்டிற்குள் வர அனுமதித்ததாம். அதனாலேயே அந்தக் கழுகுடைய உயிர் போய்விட்டதாம். அந்த மாதிரி நடந்தால் நீ தான் ஆபத்தில் மாட்டிக் கொள்வாய்” காகம் எச்சரித்ததும் மான், அந்த குள்ள நரி இரண்டுக்குமே அந்த கதையைக் கேட்க ஆவல் வந்துவிட்டது.
“கழுகு செத்துப்போச்சா? எந்தக் கழுகு? எப்படிச் செத்துப்போனது? என்ன நடந்தது அப்படி?” மானும் குள்ளநரியும் ஒரே சமயத்தில் கேட்டார்கள். “ம்ம் அந்த கதையைச் சொல்கிறேன். நல்ல கேளுங்கள்”. காகம், கழுகு, பூனை அப்புறம் கழுகோடு இருந்த பறவைகளுடைய கதையைச் சொல்ல ஆரம்பித்தது.
கங்கை நதிக்கரையில் நிறைய அடர்ந்த காடுகளை பார்க்கலாம். அப்படி ஒரு காட்டில் ஒரு பெரிய அத்தி மரம் இருந்தது. அந்த அத்திமரத்தில் ஒரு பெரிய பொந்து இருந்தது. அந்தப் பொந்து ஒரு வயசான கழுகுடைய வீடு. அந்த மரத்தில் கழுகு மட்டும் வசிக்கவில்லை. இன்னும் சில பறவைகள் அந்த மரத்தில் கூடு கட்டி குஞ்சுகளோடு வசித்தன. அந்த கழுகுக்கு ரொம்பவே வயசாகிவிட்டது. கண் பார்வையும் குறைந்து விட்டது. முன்பு மாதிரி பறந்து பறந்து இரையைத் தேடவும் முடியவில்லை. அந்த மரத்திலிருந்த மற்ற பறவைகள் அந்த கழுகு மேல் இறக்கப்பட்டு அவர்களிடம் மீதி இருந்த உணவை அதற்குக் கொடுப்பார்கள். கண்பார்வையும் குறைந்து, இரையையும் தேட முடியாமல் போனதால் நடப்பது என்ன என்று தெரியாமல் யார் எது சொன்னாலும் நம்ப ஆரம்பித்தது.
ஒரு நாள் ஒரு பூனை அந்த அத்திமரத்திற்குப் பக்கத்தில் வந்து அந்த மரத்தில் உள்ள கூடுகளைப் பார்த்து “அம்மடியோவ்! எத்தனை கூடுகள்! அதில் நிறையக் குஞ்சுகள் இருக்குமே! எனக்கு சாப்பாட்டிற்குப் பஞ்சமே இருக்காதே!” ஆசையோடு அந்த இடத்தின் பக்கத்தில் காத்திருந்தது. குஞ்சுகளைக் கூட்டில் விட்டுவிட்டு பறவைகள் இரையத்தேடிப் பறந்துபோன பின்பு அந்தப் பூனை மெல்ல அந்த மரத்தின் ஒரு கிளை மீது தாவியது. அந்த குஞ்சுகள் பூனையை இதற்கு முன்னாடி பார்த்தது இல்லை. இந்த பூனையால் நமக்கு ஆபத்து வருமென்று மட்டும் தெரிந்தது. பயத்தில் கீச்கீச் என்று சத்தம் போட ஆரம்பிச்சிட்டாங்க.
இந்த சத்தம் பொந்துக்குள்ள இருந்த கழுகு காதில் விழுந்தது. பொந்துக்கு வெளியில்
தலையை நீட்டி “யார் அங்க? என்ன சத்தம்?” அதட்டலா கேட்டது. ஓ !கழுகு இந்த மரத்தில் இருக்கா! அதை எதிர்பார்க்காத பூனை பயத்தில் உடம்பு நடுங்க” இந்த கழுகு வந்து என்னைப் பிடிக்கும் முன் கீழ் மடமடனு இறங்கிப் போய்விடலாம்” என்று நினைத்தது. “மரத்துமேல வந்தாயிற்று. ஆபத்தும் எதிரில் இருக்கிறது . அதோடு மோதிதான் பார்க்கலாமே. இனிமையா பேசி இந்த கழுகை ஏமாற்ற முடியுமா என்று பார்க்கலாம்” மனதை மாற்றிக்கொண்டு கழுகுக்கு முன் நின்று “ஐயா! என் தாழ்ந்த வணக்கம்!உங்களைப் பார்த்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி”பணிவா சொன்னது.
அந்தக் கழுகிடம் யாரும் இப்படிப் பேசியதில்லை. கொஞ்சம் எரிச்சலோடு “யார் நீ?” என்று கேட்டது.” நானா! நான் ஒரு பூனை”பூனை பதில் சொன்னது. “பூனையா! மரியாதையா இந்த மரத்தை விட்டுப் போய்விடு” கழுகு அதை எச்சரித்தது. “போரேன், போரேன். அதுக்கு முன் என்னை கொஞ்சம் பேச விடுங்கள். நான் சொல்ல வந்தது கேட்ட பின்னும் என்னைப் போகச்சொன்னால் நான் போகிறேன்” பூனை ரொம்ப நல்லவன் போல் பேசியது. பூனை இப்படிப் பேசியதும் இந்த பூனை ஏன் இப்படிப் பேசுகிறது? என்னதான் சொல்ல வருகிறது? என்று கழுகுக்குக் குழப்பம்.
“நீ என்ன சொல்ல வருகிறாய்? என்ன சொல்லனுமோ அதை மடமட என்று சொல்லு” கழுகு அவசரப்படுத்தியது. “ஐயா! நான் ஒரு பூனைதான். ஆனால் கங்கைக்கரை ஓரத்தில் நான் முற்றும் துறந்த முனிவர் போல் தான் வாழ்ந்தேன். தினமும் கங்கையில் குளித்துவிட்டு என்னுடைய பூஜையை ஆரம்பிப்பேன். நான் மாமிசம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். இன்னும் நான் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. இந்த மரத்தில் உள்ள மீதிப் பறவைகள் உங்களைப் பற்றி பெருமையாகப் பேசுவதைக் கேட்டேன். நீங்கள் நேர்மையான, பொறுமையான பெரியவர் என்று சொல்கிறார்கள். உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டதிலிருந்து உங்களை பார்க்க வேண்டும் என்று ஒரே ஆவல். நீங்கள்தான் எனக்கு குரு. என்னை உங்கள் சீடனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்” மனதை மயக்கும்படி பூனை பேசியது.
“இதைக் கேட்கத்தான் நான் இங்கே வந்தேன். ஆனால் நீங்களோ என்னைக் கொல்லப்போகிறேன் என்று சொல்கிறீர்கள். வீட்டுக்கு வந்த விருந்தாளியை யாராவது கொல்வார்களா? உங்களை போன்ற பெரியவர்கள் விருந்தாளி எதிரியாகவே இருந்தாலும் கனிவுடன்தானே நடத்துவார்கள்.ஐயா! எனக்கு உங்களிடம் இருந்து எதுவும் வேண்டாம்.நீங்கள் பணக்காரரோ இல்லை ஏழையோ எனக்குத் தெரியாது. உங்களுடன் தங்க இடம் கொடுத்தால் மட்டும் போதும். கொஞ்சம் குடிக்கத் தண்ணீர், கனிவான வார்த்தைகள் இது மட்டும் போதும். இது ஒன்றும் கடினமானது இல்லையே !வீட்டுக்கு வந்தவர்கள் ஏழையோ,பணக்காரனோ, வயதானவரோ இல்லை இளைஞனோ, பூனையோ, வேறு ஏதாவதோ விருந்தாளிக்கு மரியாதை கொடுப்பது தானே நம் பண்பாடு. விருந்தாளியை மரியாதை இல்லாமல் நடத்தினால் உங்கள் மனம் அதை ஒத்துக்கொள்ளுமா? அப்படி நீங்கள் என்னை மரியாதை இல்லாமல் அனுப்பிவிட்டால் அந்த பாவம் உங்களைத்தானே வந்து சேரும்.ஏன் அந்த பாவ கர்மா உங்களுக்கு?விருந்தினரை தெய்வம் போல் அல்லவா நடத்த வேண்டும்”இப்படி விடாமல் பேசி முடித்தது.
கழுகும் யாரும் இப்படிப் பேசி கேட்டதில்லை. “நீ என்ன எதிர்பார்க்கிறாய்? நீ ஒரு பூனை. பூனைகள் பறவைகளைத் தின்னும். இங்க நிறையப் பறவைகள் இருக்கிறது. அதனாலேயே உன்னை நான் துரத்தித்தான் ஆகவேண்டும்” கழுகு மறுபடியும் அந்த பூனையை அங்கே இருந்து போகச்சொன்னது. பூனை மெதுவா தலையை ஒரு கிளைமேல் வைத்துக்கொண்டு அப்பாவி மாதரி “ஐயா! நான் நிறைய ஆன்மிகம் பற்றி படித்திருக்கிறேன். ஆன்மீகம் எந்த உயிரையும் இம்சை செய்வதை எதிர்க்கிறது.அகிம்சையை போதிக்கிறது. நானும் அகிம்சையைப் பின்பற்றுகிறேன்” நிறுத்தாமல் சொல்லிக்கொண்டே இருந்தது. பூனையுடைய இந்தப் பேச்சினாலோ அல்லது அந்த கழுகுடைய தனிமையாலோ கழுகு அந்த பூனையை அதன் பொந்துக்குள் இருக்க சம்மதித்தது.
இப்படி கழுகு அந்த பூனையை அனுமதித்ததால் பூனை என்ன செய்தது ? கழுகு சந்தித்தது என்ன? என்று அடுத்த பகுதியில் பார்ப்போமா? நன்றி! வணக்கம்!