வணக்கம். இதற்கு முந்தைய பகுதியில் அறன் வலியுறுத்தல் அதிகாரத்தைப் பார்த்தோம். இந்த பகுதியில் இடம் பெறும் அதிகாரம் இல்வாழ்க்கை. இந்த அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை பார்க்கப்போகிறோம்.
இல்வாழ்க்கை என்றால் குடும்பத்தோடு வாழ்ந்து இல்லற அறத்தை மேற்கொள்வது. தனக்கு மட்டும் வாழாமல், தனனைச் சுற்றி இருக்கும் சொந்தங்களுக்காக வாழும் அறவாழ்வே இல்லறம் ஆகும். பொறுமை, சகிப்புத்தன்மை, விருந்தோம்பல், பொறுப்புகள் இது போன்ற நெறிகளுடன் வாழ்வதே சிறந்த இல்வாழ்க்கை. இல்லற வாழ்வில் சராசரி மனிதன் நிறைய கற்கலாம். இல்லற வாழ்க்கையில் அறநெறி தவறாமல் பிறர் பழிக்காதபடி வாழ்ந்தால் தெய்வமாகவும் ஆகலாம்.
இல்வாழ்க்கை
- முதல் குறள்:
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
இதில்
“இல்வாழ்வான் என்பான்”
இதன் பொருள்: இல்லறத்தில் வாழ்பவன் என்று சொல்லப்படுகின்றவன்
அடுத்து
“இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை”
இதன் பொருள்: இயல்பாகவே தன்னை சார்ந்திருக்கும் பெற்றோர், பிள்ளைகள் மற்றும் உறவினர் இந்த மூவர்க்கும் நல்வழியில் நின்ற துணையாவான்.
அதாவது
இல்லறத்தில் வாழ்பவன் என்று சொல்லப்படுகின்றவன், இயல்பாகவே தன்னை சார்ந்திருக்கும் பெற்றோர் , பிள்ளைகள் மற்றும் உறவினர் இந்த மூவர்க்கும் நல்வழியில் நின்ற துணையாவான்.
இது இந்த அதிகாரத்தின் முதல் குறளின் பொருள்.
- இரண்டாவது குறள்
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
இதில்
“துறந்தார்க்கும் “
இதன் பொருள்: ஆசைகளைத் துறந்தவர்களுக்கும்
“துவ்வாதவர்க்கும்“
இதன் பொருள்: உணவில்லாமல் பசியால் வாடுவோர்க்கும்
“இறந்தார்க்கும்“
இதன் பொருள்: இறந்தவர்களுக்கும்
அடுத்து
“இல்வாழ்வான் என்பான் துணை“
இதன் பொருள்: இல்வாழ்வில் இருப்பவன் துணையாவான்.
அதாவது
ஆசைகளைத் துறந்தவர்களுக்கும், உணவில்லாமல் பசியால் வாடுவோர்க்கும், இறந்தவர்களுக்கும் இல்வாழ்வில் இருப்பவன் துணையாவான்.
இது அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள்.
- மூன்றாவது குறள்.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான்என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
இதில்
“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான்என்றாங்கு“
இதன் பொருள்: தென்புலத்தார் என்றால் இறந்து தென்திசையில் வாழ்பவர்
இறந்து தென்திசையில் வாழ்பவர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட
அடுத்து
“ஐம்புலத்தார் ஓம்பல் தலை“
இதன் பொருள்: ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியைத் தவறாமல் செய்வது இல்வாழ்க்கையின் கடமையாகும்.
அதாவது
இறந்து தென்திசையில் வாழ்பவர், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்று சொல்லப்பட்ட ஐந்து இடத்தும் செய்யும் அறநெறியைத் தவறாமல் செய்வது, இல்வாழ்க்கையின் கடமையாகும்.
இது இந்த அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள்.
- நான்காவது குறள்.
பழியஞ்சிப் பாத்தூன் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
இதில்
“பழியஞ்சி பாத்தூன் உடைத்தாயின் வாழ்க்கை“
இதன் பொருள்: பாவத்திற்கு அஞ்சி பொருளைத்தேடி, அப்படிச் சேர்த்த பொருளைப் பகிர்ந்து உண்பதை மேற்கொண்டால்
“வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்“
இதன்பொருள்: ஒருவனது இல்வாழ்க்கையில் அவனது சந்ததி எப்போதும் நிலைத்து இருக்கும்.
அதாவது
பாவத்திற்கு அஞ்சி பொருளைத்தேடி, அப்படிச் சேர்த்த பொருளைப் பகிர்ந்து உண்பதை மேற்கொண்டால்,ஒருவனது இல்வாழ்க்கையில் அவனது சந்ததி எப்போதும் நிலைத்து இருக்கும்.
இது இந்த அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள்.
- ஐந்தாவது குறள்.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வவாழ்க்கை
பண்பும் பயனும் அது.
இதில்
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை”
இதன் பொருள்: ஒருவனது இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடையதாக இருந்தால்
அடுத்து
“பண்பும் பயனும் அது”
இதன் பொருள்: இல்வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.
அதாவது
ஒருவனது இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடையதாக இருந்தால், இல்வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.
இது இந்த அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள்.
இந்தக் குறளோடு இந்த பகுதி முடிந்தது. அடுத்து உள்ள ஐந்து குரல்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம். மறக்காமல் வந்து கேளுங்கள். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி! வணக்கம்!
திருக்குறளின் மற்ற அத்தியாயங்களைக் கேட்க இங்கே கிளிக் செய்யவும்: