ஹிதோபதேசக் கதை
போன வாரம் எலி ராஜா ஹிரண்யகா, கழுகும் பூனையும் கதையைச் சொல்லி முடித்தது. அந்தக் கதையை கேட்டதுக்கு அப்புறம் லகுபட்னகா இயற்கை எதிரிகளான எலியும் காகமும் நண்பர்களாக இருக்கமுடியாதென்று புரிந்து கொள்ளும் என்று நினைத்தது. ஆனால் லகுபட்னகா அவர்கள் இரண்டு பேரும் நல்ல நண்பர்களாக இருக்க முடியுமென்று எலிராஜாவுக்கு எடுத்துச் சொன்னதும், இரண்டுபேரும் நல்ல நண்பர்களாக மாறிட்டாங்க. இப்படி இருக்கும் போது அந்தக் காட்டில் லகுபட்னகாவுக்கு உணவு கிடைப்பது அரிதாக இருந்ததால், லகுபட்னகா அங்கே இருந்து வேறு இடத்துக்குப் போக முடிவெடுத்தது. அதன் திட்டத்தை எலிராஜாவிடம் சொன்னதும் எலிராஜாவுக்கு நண்பனை விட்டுப் பிரிய மனசில்லை. இனிமேல் இந்தக் கதையில் என்ன நடந்ததென்று இப்போது பார்க்கலாம்.
ஹிரண்யகாவின் கதை
“எனக்கு மந்த்ரானு ஒரு நண்பன் இருக்கிறான். கர்பூர்கர் நகரில் ஏரி ஒன்றில் ஆனந்தமா வசிக்கிறான். அங்க எனக்கு நிறையவே உணவு கிடைக்கும். மந்த்ராவும் எனக்கு உதவுவான்” லகுபட்னகா அது போகும் இடத்தைப் பற்றி ஹிரண்யாகாகிட்ட சொல்ல, ஹிரண்யாகாவுக்கு வருத்தம் அதிகமாயிடிச்சு. “என்னை மறந்திட்டியா? உன்னோடு நல்ல நெருக்கமா பழகிட்டேன். உன்னை விட்டுப் பிரிய மனசே இல்லை. தனியா நான் என்ன பண்ணுவேன் இங்க? நானும் உன்னோடு வரட்டுமா?” எலிராஜா சொல்ல லகுபட்னகா சந்தோஷத்தில் சிறகுகளை படபடனு அடித்தது. “வா! வா! வா! இதுவும் நல்லா இருக்கும்”. லகுபட்னகா, ஹிரண்யகா இரண்டு பேரும் கர்பூர்கருக்கு கிளம்பிட்டாங்கா.
மந்த்ரா லகுபட்னகா வருவதைப் பார்த்ததும் அதை வரவேற்க ஏரியிலிருந்து வெளியில் வந்தது. வந்தபின் அறிமுகம் எல்லாம் முடிந்ததும், மந்த்ரா எலிராஜாவைப் பார்த்து அதன் சந்தேகத்தைக் கேட்டது. “ஓ ராஜாவே! இந்த வனத்துக்கு நீங்க வந்தது எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது . கேட்டால் தப்பா எடுத்துக்கொள்ள மாட்டீங்கனு நினைக்கிறேன். ஆமா! நீங்க ஏன் காட்டில் வசிக்கிறீர்கள்? ஏதாவது காரணம் இருக்கா அதற்கு?” எலிராஜா சந்தேகத்தைக் கேட்டது. இந்த கேள்விக்குச் சரியான பதிலைச் சொல்லாமல் விட்டால் தன் மேல் சந்தேகம் வருமென்று ஹிரண்யாக அதன் கதையை ஒரு பெருமூச்சோடு சொல்ல ஆரம்பித்தது.
‘”சம்பகா” இந்தப் பேரில் உள்ள ஊரைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? அதுதான் என்னுடைய ஊர். அந்த ஊரில் ஆசிரமம் ஒன்று இருக்கிறது. நிறையத் துறவிகள் அந்த ஆசிரமத்தில் வந்து தங்குவார்கள். சூடகர்ணாங்கிற இளம் துறவி அங்கே இரவு நேரத்தில் வந்து தங்குவான். இந்த துறவிகள் பூஜைகள் யாகங்கள் செய்வதிலும், அதைப் பற்றி நூல்கள் எழுதுவதுமாக இருப்பார்கள். அவங்களுக்குனு சொந்தமா எதுவும் இருக்காது. அதனால் சுத்தி இருக்கிறவர்கள் அவர்களுக்குச் சாப்பாடு கொடுப்பார்கள். ஒவ்வொரு ராத்திரியிலும் சூடகர்ணா அங்க வரும்போது அவனுடைய திருவோட்டை ஒரு அலமாரியில் வைத்துவிட்டு மீதி வேலைகளைப் பார்ப்பான். அவன் தூங்கப் போனவுடனே ஓரே குதி குதித்து அந்த திருவோட்டில் இருப்பதை மடமடனு சாப்பிட்டிடுவேன். எனக்கு சாப்பட்டுக்கு பஞ்சமே இல்லாமல் இருந்தது.
ஆனால் அது ரொம்ப நாள் நீடிக்கவில்லை. சூடகர்ணாவோட நண்பன் வினாகர்ணா ஒரு நாள் அங்கே வந்தான். எனக்கோ பசி வந்திடுச்சு. இந்த இரண்டுபேரும் தூங்காமல் இருந்ததைப் பற்றி கவலைப் படாமல் அந்த திருவோட்டில இருந்ததைச் சாப்பிட முயற்சி செய்தேன். ஒவ்வொரு தடவையும் பக்கத்தில் போகும்போது சூடகர்ணா கையிலிருந்த கம்பால் தரையை அடித்து என்னைத் துரத்துவான். சூடகர்ணா இப்படிப் பண்ணினது வினாகர்ணாவுக்கு எரிச்சலைத் தந்தது.
“ஏன்? நான் வந்தது உனக்கு பிடிக்கவில்லையா? நான் சொல்வது எதுவுமே கேட்க ஆர்வமில்லாமல் இருக்கிறாய்? இது என்ன எப்போது பார்த்தாலும் தரையைக் கம்பால் அடிச்சிக்கிட்டே இருக்கே? ஏதாவது புது வித்தை கத்துக்கிறயா?” கொஞ்சம் எரிச்சலோடு கேட்டான். “ஐய்யய்யா! அப்படி எல்லாம் இல்லை.நீ சொல்லும் விஷயங்கள் எல்லாமே சுவாரசியமா இருக்கிறது. இந்த எலி ஒன்னு இருக்கிறதே இங்கே! அதன் தொல்லைதான் தாங்க முடியவில்லை. இந்த திருவோட்டில் உள்ள சாப்பாட்டைச் சாப்பிட எப்படி வருகிறது பார். அதைத் துரத்தத்தான் இப்படி தரையில் அடிக்க வேண்டியிருக்கு”. சூடகர்ணா விவரமா சொன்னதும், வினாகர்ணா அந்த அறையைச் சுத்தி எலி எங்கே இருந்து வருதுனு ஆராய ஆரம்பித்தான்.
“இந்த திருவோடோ மேலே இருக்கிறது! இந்த எலி எப்படி குதித்து மேலே வருகிறது? இந்த இடத்தில் அந்த எலி வசிக்க வேறு ஏதாவது காரணம் இருக்கவேண்டும் .அது என்ன என்று பார்க்கவேண்டும்” சந்தேகம் வந்ததும் எல்லா சுவர்களையும் தட்டி தட்டி சோதித்துப் பார்த்தான். ஓர் இடத்தில் ஓட்டை ஒன்றைப் பார்த்ததும் மண்வெட்டியால் அந்த ஓட்டை இருந்த இடத்தை உடைத்ததும் நான் சேமித்து வைத்திருந்த எல்லா சாமான்களும் தொபுதொபுனு கீழே விழுந்துடுச்சு.
அவ்வளவுதான். என்னுடைய எல்லா சாமன்களையும் அவன் எடுத்துக்கொண்டான். என்னுடைய சேமிப்பெல்லாம் போனதும் என்னுடையது என்று சொல்லிக்கொள்ள ஒன்றுமே இல்லாமல் போயிடுச்சு. எல்லாம் போனதுக்கு அப்புறம் என்னுள் ஒரு மாற்றம் வந்தது. என்னுடைய எல்லா சேமிப்பையும் இழந்தது மட்டும் இல்லாமல், என் தன்நம்பிக்கையும் இழந்துவிட்டேன். எனக்கு எதிலும் நாட்டம் இல்லை. உணவிலிருந்த நாட்டமும் போயிடுச்சு. விரக்தியில் எதுவும் செய்யாமல், எதுவும் சாப்பிடாமல் இருந்ததால் சக்தியே இல்லாமல் போயிடுச்சு. உணவைத் தேடி சாப்பிடக்கூட முடியவில்லை. சூடக்ணாவவைப் பார்க்கும்போதெல்லாம் பயத்தில் எங்கேயாவது போய் ஒளிஞ்சிக்குவேன்.
இதற்குப் பின் அவனுடைய சாப்பாட்டை நான் எடுக்கிறதேயில்லை. சூடகர்ணா ஒரு நாள் என்னைப் பார்த்து “அந்த ஓட்டாண்டி எலியைப் பார்! எல்லா சேமிப்பும் போச்சா அதுக்கு! இனிமே என்ன இருக்கிறது அதனிடம்! சுயமரியாதையும், மதிப்பும் போயே போச்சு. ஒன்றுமே இல்லாத இந்த எலியை யாரும் திரும்பிக்கூடப் பார்க்க மாட்டார்கள். பணக்காரர்களுக்குத்தான் இங்க மதிப்பு. ஏழைக்கெல்லாம் என்ன மதிப்பு இருக்கிறது. இந்த எலியை யார் கவனிக்கப்போகிறார்கள் இனிமே எதற்கு இதைப் பற்றி கவலைப் படவேண்டும்” இளக்காரமா சொன்னதும் ஒரு மின்னல் தாக்கினால் எப்படி இருக்கும். அதே மாதிரிதான் அந்த உண்மை எனக்கு உரைத்தது.
அவன் சொன்னது என்னமோ உண்மை. இந்த உலகம் அப்படித்தானே இருக்கிறது. பணம் இருந்தால் எல்லாரும் நம்மை சுத்தி இருப்பார்கள். குடும்பம், நண்பர்கள், சுத்தி இருக்கிறவர்கள் எல்லாருமே மதிப்பும் மரியாதையும் கொடுப்பார்கள். தேவையானபோது உதவவும் செய்வார்கள்.ஆனால் எல்லாவற்றையும் இழந்து ஒன்றுமே இல்லாமல் நிற்கும்போது யாரும் கூட இருக்கமாட்டார்கள். தனிமை ஒன்றுதான் நமக்குக் கிடைக்கும். அந்த இடத்தில் அதற்கப்புறம் என்னால் இருக்க முடியவில்லை. அங்கே இருந்து கிளம்ப முடிவு பண்ணிவிட்டேன்.
எல்லாரிடமும் போய் என்னுடைய கஷ்டத்தைச் சொல்ல விருப்பமில்லை. என்னை பார்த்துப் பரிதாபப்படுவதையும் விரும்பவில்லை.. எதற்கு அதெல்லாம். சொந்த விஷயங்களை எல்லாரோடும் பகிர்ந்து கொள்வதும் சரி யாகப்படவில்லை எனக்கு. இந்த உலகம் வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும். சும்மா புலம்பிட்டே இருந்தாலும் கேட்பவர்களுக்கு எரிச்சல்தான் வரும். அதுக்கு அமைதியா, சுயமரியாதையோடு, கௌரவமா இருப்பதே நல்லது. நான் எப்போதுமே என் காலில் நின்றுதான் பழக்கம். யார்கிட்டயும் போய் உதவி கேட்க விருப்பமில்லை. ஏழைக்கு அவன் வாழக்கையை தேர்ந்தெடுக்க உரிமையா இருக்கிறது. ஏழைக்கு மரியாதையும் கிடைக்காது. நிறைய இழந்தும்விட்டேன். நிறைய மாறியும் விட்டேன். ஆனால் சுயமரியாதையையும் மதிப்பையும் இழக்க விரும்பவில்லை.
அப்படி இருந்தும் கடைசியா ஒரு தடவை சூடகர்ணாவோட திருவோட்டில் இருந்த சாப்பாட்டை எடுக்க முயற்சி செஞ்சப்போ சூடகர்ணாவோட நண்பன் அங்க இருந்த கம்பை என்மேல் தூக்கிப்போட்டு அடிக்கப் பார்த்தான். அப்போது என்னுடைய உயிரே போயிருக்கவேண்டும். தெய்வாதீனமா தப்பித்தேன். எப்பப் பார்த்தாலும் எல்லாம் வேண்டுமென்று ஆசைப்பட்டால் திருப்தியே கிடைக்காது. கிடைக்கக் கிடைக்க இன்னும் ஆசைதான் அதிகமாகும். இது வேண்டும், அது வேண்டும் என்று ஆசைக்கு முடிவே இல்லாமல் போகும். பட்டது போதும், எதுவும் வேண்டாமென்று புரிந்தது. காட்டுக்குப் போய் தெய்வ சிந்தனையோடு அமைதியா ஒரு துறவிபோல வாழலாமென்று காட்டுக்கு கிளம்பிட்டேன்.
தெய்வநம்பிக்கை இருந்தால் எல்லாரையும் கனிவா நடத்தவேண்டும் இல்லையா!மனசும், உடம்பும் ஆரோக்கியமா இருப்பதுதானே உண்மையான வாழ்க்கை. அந்த வாழ்க்கை கிடைக்க சரியான பாதையைத் தேர்ந்தெடுக்கவேண்டும். எப்பப் பார்த்தாலும் பணத்துக்குப் பின்னும் ஆடம்பர வாழ்க்கைக்குப் பின்னும் அலைவது எனக்கு ஒத்துவராதென்று தெரிந்தது. அந்த ஆடம்பர வாழ்க்கையை விட்டுவிட்டு காட்டுக்கு வந்துவிட்டேன். அப்பத்தான் லகுபட்னகாவைப் பார்த்தேன். இப்போது இதோ !மந்த்ரா! நீயும் எனக்கு நண்பனாகக்கிடைச்சுட்டே. உங்களை போல் நண்பர்கள் கிடைத்ததால் இப்போது எனக்கு ஒரு நிறைந்த வாழ்க்கை கிடைத்திருக்கிறது” ஹிரண்யகா நட்பா அதன் கதையை மந்த்ராவுக்கு சொன்னது.
ஆமை அமைதியா கதையைக் கேட்டுவிட்டு மெதுவா தலையைத்தூக்கி
“ஓ! ராஜா! நீங்க நிறைய சேமித்து அதை உங்களுக்கு மட்டும் வச்சிக்கிட்டீங்க. அதுதான் இங்க பிரச்சனையே. நம்மிடம் இருப்பதை எல்லாருக்கும் பகிர்ந்து கொடுக்கும் போது நமக்குக் கிடைப்பதும் அதிகமாகும். நமக்குப் பாதுகாப்பும் கிடைக்கும். ஒரு பெரிய தொட்டியில் தண்ணீர் அதிகமாகும் போது தண்ணீரை வெளியில் விட்டால்தானே தண்ணீர் மேலே தளும்பி வெளியில் வராது. பணத்தை சேத்துவச்சு சேத்துவச்சு யாருக்கும் பகிர்ந்து கொடுக்காமல் வாழ்வதனால் அந்த பணக்காரன் வாழ்க்கையை அமைதியாகப் பயமில்லாமல் வாழமுடியுமா? எப்போதும் பணத்தை பாதுகாப்பதைப்பற்றியே வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? பணம் பணமென்று பணத்தின் பின்னாடி ஓடிக்கொண்டே இருந்தால் அந்தப் பணத்துக்கு அடிமையாகத்தான் இருக்க முடியும். அந்த வாழ்க்கையில் என்ன சுகம் இருக்கிறது?
ஆபத்துக்குத்தான் சேமித்து வைத்துக்கொள்ளவேண்டும். அதுவும் முக்கியம்தான். ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை. அந்த பணத்தை உபயோகமாகப் பிறர்க்குப் பகிர்ந்து கொடுக்கும்போது ஆத்மார்த்தமான நிறைவு கிடைக்கும். இல்லை என்றால் ஒரு நரிக்கு ஏற்பட்ட நிலைதான் நமக்கும் கிடைக்கும். அது வேண்டும், இது வேண்டுமென்று பறந்து பறந்து சேத்து வச்சது. கடைசியில் என்ன ஆயிற்று? ஓர் அம்பின் நுனியால் அதன் உயிர்தான் போச்சு”. ஆமை நரியை உவமை சொன்னது. “யார் அந்த நரி? என்ன நடந்தது? எப்படி அதன் உயிர் போச்சு? எலிராஜாவும், காகமும் கதை கேட்க ஆர்வமா மந்த்ராவைப் பார்த்துக் கேட்டார்கள்.
உங்களுக்கும் நரியுடைய கதையைக் கேட்க ஆர்வமா இருக்கிறதா? அடுத்த பகுதியில் மறக்காமல் அந்த கதையை வந்து கேளுங்கள். நன்றி! வணக்கம்!