ஹிதோபதேசம்
இந்த ஹிதோபதேசக் கதைகள் பிடித்திருக்கிறதா உங்களுக்கு? விலங்குகள் வழியா சொல்லப்படும் கதைகள் சுவாரசியமா இருக்கிறது இல்லையா? போன வாரம் சொன்ன கதையில் தமனக்காவும், கரட்டக்காவும் சிங்கத்துக்கு உதவலாமா? வேண்டாமா? என்று விவாதம் செய்து கொண்டிருந்தார்கள்.. யமுனை நதியில் தண்ணீர் குடிக்கப்போன சிங்கராஜா பிங்கலிகா, தண்ணீர் குடிக்காமலே ஒரு காளைமாட்டின் எக்காளத்தைக் கேட்டுப் பயந்து திரும்பி வந்துவிட்டது. தமனக்கா சிங்கராஜாவோட பயத்தின் காரணத்தைக் கண்டுபிடித்து உதவ நினைத்தது.கரட்டாக்காவுக்கு அதில் விருப்பமில்லை. தமனக்கா எப்படி பிங்கலிகாவோட பயத்துக்கான காரணத்தை கண்டுபிடித்து என்ன செய்யப்போகிறது என்று இந்த பகுதியில் பார்ப்போமா!
பிங்கலகாவின் பயம்
“சிங்கராஜா தண்ணீர் குடிக்கப் போனபோது ஏதோ நடந்திருக்கு! ராஜாவுக்கே பயம் வந்து மறைஞ்சிருக்கு பார்! தமனக்கா சொல்லா ” அப்பா !போதும் உன் கற்பனை.!என்ன ஏதுனு உனக்குச் சுத்தமா தெரியாது. ஆனாலும் ஏதேதோ சொல்கிறாய்” கரட்டக்கா குரலில் ஒரே கேலி.
“சொன்னால்தான் தெரியுமா என்ன! ஒருத்தரடோ நடை ,உடை, பாவனை, முகத்திலிருந்தே என்னால் சொல்ல முடியும். பார்த்துட்டே இரு. எப்படி சிங்கத்தை வார்த்தைகளால் மயக்கி உண்மையை கண்டுபிடிக்கிறேன் என்று” தமனக்கா ஆணித்தரமா சொன்னது.
அதை நம்பமுடியாமல் கரட்டாக்கா “பைத்தியமா நீ? நேரா ராஜாவிடம் போய் பேசமுடியுமா உன்னால்? ராஜாவைப் பார்த்துப் பேச நிறைய நிபந்தனைகள் இருக்கிறது. ஒன்றும் தெரியாது உனக்கு. உன்னைத் தண்டிக்காமல் போக விட்டால் அதுவே பெரிய விஷயம்” பதட்டத்தோடு சொன்னது.
“ரொம்ப பயப்படாதே! எனக்குத் தெரியும் எப்படி ராஜாவிடம் பேசவேண்டும் என்று. ராஜா மனசுக்குப் பிடித்த மாதிரி தந்திரமா பேசினால் எல்லாமே நடக்கும். ராஜா எது சொன்னாலும் செய்யத் தயாரா இருந்தால் அதுவே போதும் ராஜாவுக்கு.”தமனக்கா சகோதரனைச் சமாதானப்படுத்தியது.
“அதுசரி! நீ பாட்டுக்குக் கூப்பிடாமலே அவர் முன்னாடி போய் நின்னா கோபம் வந்தால் என்ன செய்வாய்?” கரட்டக்காவுக்கு ஒரே பயம். “சும்மா பயமுறுத்தாதே! பயம் பயமென்று எதுவுமே செய்யாமல் இருக்க முடியுமா? ஆபத்து இருக்கும் என்று சும்மா இருக்க முடியாது . சாப்பிட்டால் கூட வயிறு வலிக்கும். அதற்காகச் சாப்பிடாமல் இருக்கின்றோமா! தோல்வி, வெற்றி எல்லாம் கலந்துதான் இருக்கும். அதிகாரம் உள்ளவர்களுக்குச் சொல்வதைச் செய்யும் ஆட்கள் தேவை. அவர் என்ன சொல்கிறாரோ அதை மட்டும் செய்தால் போதும். எந்த பிரச்சனையும் வராது” தமனக்கா சொன்னது ஆச்சரியமா இருந்தது கரட்டாக்காவுக்கு.
“ஆமா ராஜாவைப் பார்த்து என்ன கேட்கப்போகிற நீ?” கேள்வி கேட்டது. “முட்டாள் மாதிரி ஒன்றும் உளரமாட்டேன். முதலில் ராஜாவுக்கு என்னை பிடிச்சிருக்கானு பார்ப்பேன்”தமனக்கா சொல்ல “அப்படியா !அதை எப்படி செய்யப்போகிறாய்?” கரட்டக்கா கேட்டது. தமனக்கா எல்லாம் யோசித்து திட்டம் போட்டு வைத்திருந்தது பாவம் கரட்டாக்காவுக்கு தெரியாதே !
“அதெல்லாம் சுலபமா செய்யமுடியும். நம்மைப்பார்த்து நட்பா சிரித்துப் பேசி, நலம் விசாரித்து, நம்மைப் பற்றி நான்குபேரிடம் நல்லவிதமா சொல்வது, தப்பு செய்தால் மன்னித்து விடுவது இந்த மாதிரி நம்மை பிடித்திருந்தால்தான் செய்வார்கள். அதே சமயம் நம்மைப் பற்றிக் கவலைப்படாமல் அலட்சியம் செய்தால் அவர்களுக்கு நம்மைப் பிடிக்கவில்லை என்று புரியும். கவலைப்படாதே நான் ராஜாவிடம் எச்சரிக்கையாகத்தான் பேசுவேன்”தமனக்காவின் தைரியமான பேச்சில் கரட்டக்காவுக்கு தமனக்காவை தடுக்கமுடியாதென்று புரிந்தது.
“எதற்கும் ரொம்ப ஜாக்கிரதையா இரு. ஒரே ஒரு தப்பில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்” கரட்டக்கா மறுபடியும் எச்சரித்தது. ‘நான் பார்த்துத்தான் பேசுவேன். பேச வேண்டிய சமயத்தில் பேசாமல் இருப்பது பெரிய தவறு. நாளை நான் ஒரு நல்ல மந்திரியாக வரவேண்டும் என்றால் நல்ல அறிவுரைகளை சொல்ல இப்போதே தயாராகவேண்டும். நான் சொல்வது சரிதானே?’ தமனக்கா சொன்னதும் கரட்டக்கா “சரி! நீ மனசு வெச்சிட்டே! ஜாக்கிரதையா போய் பேசு” கவலையோடு சொன்னது.
தமனக்கா ரொம்ப பவ்யமா ராஜா முன்னாடி போய் நின்னு மரியாதையா குனிந்து வணக்கம் சொன்னது. அதைப் பார்த்ததும் சிங்கம் தலையைத் தூக்கி “கொஞ்ச நாளா கண்ணில் படவில்லையே! எங்கே போனாய்?”அதட்டலாகக் கேட்டது. “ராஜா! என்னுடைய உதவி இவ்வளவு நாட்களாக தங்களுக்குத் தேவை இல்லாமல் இருந்தது. ஆனால் இப்போது உங்களுக்கு என்னுடைய உதவி தேவைப்படுமென்று எனக்கு உதித்தது. அதுதான் இப்போது இங்கே வந்தேன்” தமனக்கா சின்ன குரலில் சொன்னது. “உங்களுக்கு நிறைய மந்திரிகள் இருக்கிறார்கள். ராமருக்கு அணில் உதவி செஞ்ச மாதிரி என்னால் உங்களுக்குச் சின்ன உதவியாவது செய்ய முடியும்”
“அப்படியா! நீ உதவி செய்யப்போகிறாயா?” ராஜா ஒரு கர்ஜனையோடு கேட்டது. “என்னால் முடியும் ராஜா. முத்து ரத்தினங்கள் பதித்த நகை கவர்ச்சியா இல்லாததுக்குக் காரணம் முத்து ரத்தினங்களுடைய குறை இல்லை. அதைச் சாதாரண தகரத்தில் பதித்திருந்தால் அதோடு மதிப்பு வெளியில் தெரியாது. கண்ணாடி பளபளனுதான் இருக்கும். ஆனால் அதற்கு மதிப்பே இல்லை. முத்து வைரம் இதற்கெல்லாம் மதிப்பு அதிகம். அதே மாதிரிதான் மகாராஜா! நீங்கள் புத்திசாலிகளையும் புத்தி இல்லாதவர்களையும் ஓரே மாதிரி நடத்துவது. புத்திசாலிகளின் மதிப்பு சரியாக யாருக்கும் தெரிவதில்லை.
மூன்றுவிதமான சேவகர்களை நீங்கள் பார்க்கலாம். மிகவும் புத்திசாலிகள், புத்தியே இல்லாத முட்டாள்கள், இந்த இரண்டுக்கும் நடுவில் இருக்கும் சராசரி சேவகர்கள். இவர்களுடைய தகுதிக்கு ஏற்ற மாதிரிதான் அவர்களுக்கு வேலை கொடுக்கவேண்டும். தலையில் வைக்கும் கிரீடத்தைக் காலில் போட்டுக்கொள்ள முடியாது. அதேபோல்தான் கால் கொலுசை தலையில் வைத்துக்கொள்ள முடியாது.வைரத்தைத் தங்கத்தில் பதித்து வைத்தால்தான் அதன் மதிப்பு வெளியில் தெரியும். தகரத்தில் வைத்தால் அது கொல்லனின் தவறாகும்.
அதே போல் தான் ஒரு ராஜாவும் யாரிடம் அறிவுரை கேட்கவேண்டும், யாரைப் பக்கத்தில் வைக்கவேண்டும், யாரை கண்காணிக்கவேண்டும் எல்லாவற்றையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். விசுவாசமான சேவகனை அருகில் வரவிட்டால்தானே அவனால் உங்களுக்கு உதவமுடியும்!தெரியாமல் எதிரியை அருகில் வர அனுமதித்தால் எவ்வளவு பெரிய அபாயம்! என்னைப் பாருங்கள். என்னால் நல்ல அறிவுரைகளையும் கொடுக்க முடியும், உங்களுக்குச் சேவகம் செய்யவும் முடியும். நீங்க ஏன் என்னை உங்களுக்கு உதவப் பயண்படுத்தக்கூடாது? நல்ல அறிவுரை கொடுப்பவர்கள் இருந்தால்தானே உங்களால் இந்த காட்டை சரியாக ஆளமுடியும்! உங்களுக்குப் பிடித்தவர்களை எல்லோருக்கும் பிடிக்கும். உங்களுக்கு பிடிக்காதவர்களை எல்லோரும் கேலி செய்வார்கள்.நல்ல அறிவுரையை யார் சொன்னாலும் நியமான ராஜா கேட்பார். இருட்டில் விளக்கு உதவுவது போல நீங்கள் என்னை உங்களுக்கு உதவ அனுமதிக்கவேண்டும்”ராஜதந்திரமா தமனக்கா பேசியது.
பிங்கலிகா இந்த வார்த்தைகளைக் கேட்டு “தமனக்கா! நான் எப்போது நீ சொல்லும் அறிவுரையைக் கேட்க விருப்பமில்லை என்று சொன்னேன்? நீயோ என்னுடைய முதன் மந்திரியின் பிள்ளை. யாரும் உன்னை தடுத்ததில்லையே !உன்னுடைய கேள்வி என்ன? என்ன தெரியவேண்டும் உனக்கு ?” அதிகாரமாகச் சிங்கம் கேட்டது.
“மகாராஜா எனக்கு ஒன்றே ஒன்றுதான் புரியலை! தண்ணீர் குடிக்கப் போனீர்கள். ஆனால் தண்ணீர் குடிக்காமலே திரும்பி வந்துட்டவிட்டீர்கள். இங்க வந்து பார்த்தால் ஏதோ பிரமை பிடித்தவர் போல் வெறித்து எங்கேயோ பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்” தமனக்கா சொன்னதைக் கேட்ட பிங்கலிகா ஆச்சரியத்தோடு எழுந்து” ஓ !தமனக்கா! நீ கேட்டது சரிதான். யாரிடம் போய் கேட்கனும்னு புரியலை. நீ கேட்டது நல்லதா போச்சு” ஒரு தடவை சுத்திப் பார்த்துவிட்டு “நல்லவேளை! யாரும் பக்கத்தில் இல்லை. இதுவரை யாரும் பார்க்காத ஏதோ ஒரு அமானுஷ்யமான விலங்கு புதுசாக இந்த காட்டுக்கு வந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு வேளை நாம் எல்லாருமே இந்த காட்டைவிட்டு வேற இடத்துக்குப் போகவேண்டியது கூட இருக்கும். அதுதான் ஒரே யோசனை எனக்கு. நீங்க இரண்டுபேரும்கூட அந்த விசித்திரமான சத்தத்தைக் கேட்டிருப்பீர்களே. இடிமாதிரி சத்தம் போட்ட அந்த விலங்கு பெரிய ராட்ஷச விலங்காகத்தான் இருக்கவேண்டும்”படபடனு பேசியது.
தமனக்காவும் தலையை ஆட்டிக்கொண்டே “ஆமா! ஆமா! நான்கூட அந்த சத்தத்தைக் கேட்டேன். ஆனால் அது என்ன விலங்கு என்று கண்டுபிடித்துச் சண்டைபோடாமல் இங்கே இருந்து போவது சரியில்லை என்று தோணுது. இந்த மாதிரி சோதனைகள் வரும்போதுதான் உங்களைச் சுற்றி இருப்பவர்களுடைய மதிப்பு தெரியும்” தமனக்கா ஏதோ அது ஒரு மந்திரி மாதிரி அறிவுரை சொன்னது. “அதெல்லாம் சரி! நானோ பயத்தில் உறைந்து போயிருக்கிறேன். என்ன செய்யமுடியும்” பிங்கலிகா சொல்ல தமனக்காவுக்கு அதன் பயம் எப்போதோ தெரிந்து விட்டது. இனிமையா பேசி சிங்கத்தைச் சமாதானம் செய்தது. “மகாராஜா! பயமே வேண்டாம். நான்தான் இருக்கிறேனே. ஒரே ஒரு வேண்டுகோள்! கரட்டக்கா இன்னும் சிலரை ஒரு குழுவாக சேர்த்து எல்லைகளைக் கவனிக்கச் செய்தால் நல்லது” தமனக்காவின் வார்த்தைகள் சிங்கத்தின் பயத்தையும் குழப்பத்தையும் குறைத்தது.
தமனக்கா மேல் நம்பிக்கை வர அது சொல்வதெல்லாம் கேட்கத் தயாராகிவிட்டது. சிங்கம். அந்த குழுவில் உள்ளவர்களுக்கு அதிகாரமும் பரிசுகளும் கொடுத்தது. சகோதரர்கள் இரண்டுபேரும் அந்த புதிய விலங்கைக் கண்டுபிடிக்க காட்டுக்குள்ள போனார்கள்.
கரட்டாக்கா மெதுவாக தமனக்காவைப் பார்த்து “இந்த பரிசுகளை வாங்க ரொம்ப அவசரப்பட்டுவிட்டாயோ? அது என்ன அரக்கனோ தெரியாது! என்ன ஆபத்து இருக்குமோ அதுவும் தெரியாது! வேலையை முடிப்பதற்கு முன்பே அதற்குச் சம்பளம் வாங்குவதா? அது சரியில்லை. நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் என்ன நடக்கும் தெரியுமா? ராஜாவுக்கு வெற்றி கிடைத்தால் வெற்றியைக் கொண்டாடுவோம். அவர் சந்தோஷமா இருந்தால் பரிசு கிடைக்கும்.ஆனால் அவருக்குக் கோபம் வந்தால் என்ன நடக்குமோ தெரியாதே? நமக்குச் சங்குதான். இந்த ராஜாக்களுக்குக் கடவுள் போல் அதிகாரம் உண்டு.என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்” கேட்டது.
தமனக்காவோ பெரிதாகச் சிரிக்க ஆரம்பித்தது.”ஐயோ! ஐயோ! பயப்படாதே! நான் ஒன்றும் தெரியாமல் சொல்லலை. அது என்ன விலங்கு என்று எனக்கு எப்போதோ தெரியும். உனக்குத் தெரியுமா? அது வேறு எதுவும் இல்லை. ஒரு காளைமாடு. அதோடு எக்காளத்தை கேட்டுத் தான் சிங்கம் பயந்திடுச்சு”
கரட்டக்காவால் இதை நம்பவே முடியவில்லை. “என்ன? அப்படியா!” அதற்கும் சிரிப்பு வந்துவிட்டது. “நீ ராஜாவிடம் ஏன் சொல்லலை? அவருடைய பயமாவது போயிருக்கும்” கரட்டக்கா கேட்க” சொல்லி? இந்த பரிசுகள் கிடைக்காதே! ஏன் சொல்லவேண்டும்? அப்புறம் நம் தேவையே அவருக்கு இருக்காது. தடிகர்ணா என்ற பூனைக்கு நடந்ததுதான் அப்புறம் நமக்கும் நடக்கும். தமனக்கா சொன்னதும் “ம் !ஒரு பூனை சிங்கத்துக்குச் சேவகம் செய்ததா? அது எப்படி?” கரட்டக்கா குழப்பத்தோட கேட்டது.
தமனக்கா சொன்ன அந்த சிங்கம் பூனைக் கதையை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
நன்றி! வணக்கம்!