இதுவரை திருக்குறளின் பத்து அதிகாரங்களைப் பொருளுடன் பார்த்தோம். திருக்குறளின் 11வது அதிகாரமான செய்ந்நன்றி அறிதலிலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியால் பார்க்கலாம்.
அதிகார விளக்கம்
பிறர் செய்த உதவியை மறக்காமல் நன்றியோடு இருப்பது செய்ந்நன்றி ஆகும். ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்வது என்பது இந்த உலகத்தில் நடக்கும் செயல். வாழ்க்கையில் எதிர்பாராமல் நடக்கும் நிகழ்வுகளுக்கு உதவி தேவைப்படும். பிறர் உதவி இல்லாமல் நம்மால் சில துன்பங்களிலிருந்து வெளிவருவது கடினம். எதையும் எதிர்பாராமல் செய்வதே சிறந்த உதவி ஆகும். அப்படி செய்த உதவியை மறக்காமல் நன்றியுடன் இருக்க வேண்டும் என்று இந்த அதிகாரம் கூறுகிறது. நன்றி மறப்பது அறம் இல்லை என்றும் இந்த அதிகாரம் சொல்கிறது.
செய்ந்நன்றி அறிதல்-1
- முதல் குறள்.
“செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.”
இதில்
“செய்யாமல் செய்த உதவிக்கு“
இதன் பொருள்
எந்த உதவியும் ஒருவர்க்கு நாம் செய்யாதபோதும் அவர் நமக்கு உதவினால்
அடுத்து
“வையகமும் வானகமும் ஆற்றல் அரிது“
இதன் பொருள்
இந்த உலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடாகாது.
அதாவது
எந்த உதவியும் ஒருவர்க்கு நாம் செய்யாதபோதும் அவர் நமக்கு உதவினால் இந்த உலகத்தையும் வின்னுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடாகாது.
செய்ந்நன்றி அறிதல் அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.”
இதில்
“காலத்தி னாற்செய்த நன்றி“
இதன் பொருள்
உற்ற காலத்தில் செய்த உதவி
அடுத்து
“சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது“
இதன் பொருள்
சிறிதாக இருந்தாலும் அதன் தன்மையை ஆராய்ந்தால் இவ்வுலகத்தைவிட பெரியது.
அதாவது
உற்ற காலத்தில் செய்த உதவி சிறிதாக இருந்தாலும் அதன் தன்மையை ஆராய்ந்தால் இவ்வுலகத்தைவிட பெரியது.
செய்ந்நன்றி அறிதல் அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.
- மூன்றாவது குறள்.
“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.”
இதில்
“பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்“
இதன் பொருள்
எந்த பலனையும் எதிர்பார்க்காமல் செய்த உதவியை ஆராய்ந்து பார்த்தால்
அடுத்து
“நன்மை கடலின் பெரிது“
அந்த உதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்.
அதாவது
எந்த பலனையும் எதிர்பார்க்காமல் செய்த உதவியை ஆராய்ந்து பார்த்தால் அந்த உதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்.
செய்ந்நன்றி அறிதல் அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.
- நான்காவது குறள்.
“தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.”
இதில்
“தினைத்துணை நன்றி செயினும்“
இதன் பொருள்
ஒருவர் தினையளவு உதவி செய்திருந்தாலும்
அடுத்து
“பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்“
இதன் பொருள்
அந்த உதவியின் பயனை ஆராய்கின்றவர் அதைப் பனையளவு பெரிய உதவியாகக் கருதுவர்
அதாவது
ஒருவர் தினையளவு உதவி செய்திருந்தாலும் அந்த உதவியின் பயனை ஆராய்கின்றவர் அதைப் பனையளவு பெரிய உதவியாகக் கருதுவர்
செய்ந்நன்றி அறிதல் அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள்.
“உதவி வரைத்தன்று உதவி: உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.”
இதில்
“உதவி வரைத்தன்று உதவி“
இதன் பொருள்
ஒருவர்க்குக் கைமாறாகச் செய்யும் உதவி அவர் முன்பு செய்த உதவியின் அளவைப் பொறுத்ததன்று.
அடுத்து
“உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து“
இதன் பொருள்
அந்த உதவி செய்தவரின் பண்பின் அளவைப் பொறுத்தே ஆகும்.
அதாவது
ஒருவர்க்குக் கைமாறாகச் செய்யும் உதவி அவர் முன்பு செய்த உதவியின் அளவைப் பொறுத்ததன்று. அந்த உதவி செய்தவரின் பண்பின் அளவைப் பொறுத்தே ஆகும்.
இந்த குறளோடு இன்றைய பகுதி முடிந்தது. செய்ந்நன்றி அறிதல் அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்துவரை உள்ள குறள்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
நன்றி! வணக்கம்!