திருக்குறளின் வெஃகாமை அதிகாரத்தின் முதல் ஐந்து குறள்களைப் போன பகுதியில் பார்த்தோம். வெஃகாமை என்றால் பிறருடைய பொருட்களின் மேல் ஆசைப் படாமல் இருப்பது. நடுநிலைத் தவறி பிறர் பொருளை விரும்புதல் பெருங்குற்றம் ஆகும். பிறர் பொருளைக் கவர நினைப்பதை முளையிலேயே அகற்ற வேண்டும் என்று இந்த அதிகாரம் எடுத்துக் கூறுகிறது.
வெஃகாமை 2
- ஆறாவது குறள்.
“அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்“.
இதில்
‘அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான்‘
இதன் பொருள்
அருளாகிய அறத்தை விரும்பி நன்னெறியில் நின்றவன்
அடுத்து
‘பொருள்வெஃகிப் பொல்லாத சூழக் கெடும்‘
இதன் பொருள்
பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டு பொல்லாத குற்றங்களைச் செய்ய எண்ணினால் கெடுவான்.
அதாவது
அருளாகிய அறத்தை விரும்பி நன்னெறியில் நின்றவன் பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டு பொல்லாத குற்றங்களைச் செய்ய எண்ணினால் கெடுவான்.
வெஃகாமை அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்.
“வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்“.
இதில்
‘வேண்டற்க வெஃகியாம் ஆக்கம்‘
இதன் பொருள்
பிறர் பொருளைக் கவர்வதால் வரும் ஆக்கத்தினை விரும்பாதிருக்க வேண்டும்.
அடுத்து
‘விளைவயின் மாண்டற் கரிதாம் பயன்‘
அப்படிக் கவர்வதால் வரும் பயனை அனுபவிக்கும்போது அது நன்மையாக இருக்காது.
அதாவது
பிறர் பொருளைக் கவர்வதால் வரும் ஆக்கத்தினை விரும்பாதிருக்க வேண்டும். அப்படிக் கவர்வதால் வரும் பயனை அனுபவிக்கும்போது அது நன்மையாக இருக்காது.
வெஃகாமை அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்“.
இதில்
‘அஃகாமை செல்வத்திற்கு யாதெனின்‘
இதன் பொருள்
செல்வம் குறையாமல் இருப்பதற்குக் காரணம் எது என்று ஆராய்ந்தால்
அடுத்து
‘வெஃகாமை வேண்டும் பிறன்கைப் பொருள்‘
இதன் பொருள்
அது பிறருடைய பொருளை விரும்பாதிருத்தல் ஆகும்.
அதாவது
செல்வம் குறையாமல் இருப்பதற்குக் காரணம் எது என்று ஆராய்ந்தால், அது பிறருடைய பொருளை விரும்பாதிருத்தல் ஆகும்.
வெஃகாமை அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்.
“அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு“.
இதில்
‘அறனறிந்து வெஃகா அறிவுடையார்‘
இதன் பொருள்
அறன் இது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாதவரை
அடுத்து
‘சேரும் திறன்அறிந் தாங்கே திரு‘
இதன் பொருள்
தான் சேர வேண்டிய இடமென்று அறிந்து செல்வமாகிய திருமகள் அவர்களிடம் போய்ச் சேர்வாள்.
அதாவது
அறன் இது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாதவரைத் தான் சேர வேண்டிய இடமென்று அறிந்து செல்வமாகிய திருமகள் அவர்களிடம் போய்ச் சேர்வாள்.
வெஃகாமை அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு“.
இதில்
‘இறலீனும் எண்ணாது வெஃகின்‘
இதன் பொருள்
பின்விளைவுகளை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அது அழிவை உண்டாக்கும்.
அடுத்து
‘விறல்ஈனும் வேண்டாமை என்னுஞ் செருக்கு‘
இதன் பொருள்
பிறர் பொருளை விரும்பாமல் இருக்கும் பெருமை வெற்றியினைக் கொடுக்கும்.
அதாவது
பின்விளைவுகளை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அது அழிவை உண்டாக்கும். பிறர் பொருளை விரும்பாமல் இருக்கும் பெருமை வெற்றியினைக் கொடுக்கும்.
வெஃகாமை அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு இந்த அதிகாரம் முடிவடைந்தது. அடுத்து வரும் அதிகாரம் புறங்கூறாமை.
நன்றி! வணக்கம்!