போன பகுதியில் திருக்குறளின் ஒன்பதாவது அதிகாரமான விருந்தோம்பலிலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பார்த்தோம். விருந்தோம்பலின் சிறப்பை இந்த அதிகாரம் கூறுகிறது. உயிரை வாழவைக்கும் உணவை அளிக்கும் விருந்தோம்பல் இல்வாழ்க்கையின் கடமைகளில் ஒன்று.
விருந்தோம்பல் 2
- ஆறாவது குறள்
“செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு”.
இதில்
“செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்“
இதன் பொருள்
தன் வீட்டிற்கு வந்த விருந்தினரைப் போற்றி உபசரித்து, வருகின்ற விருந்தினரை எதிர்பார்த்து இருப்பவன்.
அடுத்து
“நல்விருந்து வானத் தவர்க்கு“
இதன் பொருள்
மறுபிறப்பில் வானுலகத்தில் உள்ள தேவர்களுக்கும் நல்விருந்தாவான்.
அதாவது
வந்த விருந்தினரைப் போற்றி உபசரித்து, வருகின்ற விருந்தினரை எதிர்பார்த்து இருப்பவன் மறுபிறப்பில் வானுலகத்தில் உள்ள தேவர்களுக்கும் நல்விருந்தாவான்.
விருந்தோம்பல் அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்
“இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்“.
இதில்
“வேள்விப் பயன் இனைத்துணைத் தென்பதொன் றில்லை“
இதன் பொருள்
விருந்தோம்பல் என்ற வேள்வியின் பயன் இவ்வளவுதான் என்று அளவிடமுடியாது.
அடுத்து
“விருந்தின் துணைத்துணை“
இதன் பொருள்
அது விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவானது ஆகும்.
அதாவது
விருந்தோம்பல் என்ற வேள்வியின் பயன் இவ்வளவுதான் என்று அளவிடமுடியாது. அது விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவானது ஆகும்.
விருந்தோம்பல் அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்
“பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்“
இதில்
“பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர்“
இதன் பொருள்
நிலையில்லாதப் பொருளை வருந்திக் காத்து பின் அதனை இழந்து விட்டோமே என்று வருந்துவர்.
அடுத்து
“விருந்தோம்பி வேள்வி தலைப்படா தார்”
நல்ல விருந்தினரைப் போற்றி அவ்வேள்விப் பயனை அடையாதவர்கள்.
அதாவது
நல்ல விருந்தினரைப் போற்றி அவ்வேள்விப் பயனை அடையாதவர்கள் நிலையில்லாதப் பொருளை வருந்திக் காத்து பின் அதனை இழந்து விட்டோமே என்று வருந்துவர்.
விருந்தோம்பல் அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்
“உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு“
இதில்
“உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா மடமை“
இதன் பொருள்
செல்வம் உள்ளவர்களிடம் உள்ள வறுமை என்பது விருந்தினரைப் போற்றாதிருக்கும் மடமையாகும்.
அடுத்து
“மடவார்கண் உண்டு“
அது அறிவில்லாத மூடர்களிடம் இருக்கும்.
அதாவது
செல்வம் உள்ளவர்களிடம் உள்ள வறுமை என்பது விருந்தினரைப் போற்றாதிருக்கும் மடமையாகும். அது அறிவில்லாத மூடர்களிடம் இருக்கும்.
விருந்தோம்பல் அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்
“மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து“
இதில்
“மோப்பக் குழையும் அனிச்சம்“
இதன் பொருள்
அனிச்சப்பூ முகர்ந்து பார்த்தவுடன் வாடிவிடும்.
அடுத்து
“முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து“
இதன் பொருள்
அதேபோல் விருந்தினரை முகம் மலராமல் வேறுபட்டுப் பார்த்தால் வாடிவிடுவர்.
அதாவது
அனிச்சப்பூ முகர்ந்து பார்த்தவுடன் வாடிவிடும். அதேபோல் விருந்தினரை முகம் மலராமல் வேறுபட்டுப் பார்த்தால் வாடிவிடுவர்.
இந்த குறளோடு விருந்தோம்பல் அதிகாரம் முடிவடைந்தது. அடுத்து வருவது திருக்குறளின் பத்தாவது அதிகாரமான இனியவை கூறல். மறக்காமல் வந்து கேளுங்கள்.
நன்றி! வணக்கம்!