இந்த பகுதியில் நாம் பார்க்க போவது திருக்குறளின் ஒன்பதாவது அதிகாரமான விருந்தோம்பல்.
அதிகார விளக்கம்
இந்த அதிகாரத்தில் விருந்தோம்பலின் சிறப்பு, பயன்கள், முறைகள் இவற்றைப் பார்க்கலாம். இல்வாழ்க்கையின் கடமைகளில் விருந்தோம்பலும் ஒன்று என்று திருக்குறள் கூறுகிறது. பிறரின் பசி தீர்க்கும் சிறந்த அறன் விருந்தோம்பல் ஆகும். விருந்தோம்பல் அறத்தைக் கடைப்பிடிக்காமலிருந்தால் அதனால் வரும் பழியையும் இந்த அதிகாரம் சொல்கிறது. உயிரை வாழவைப்பதே உணவாகும். அந்த உணவளிக்கும் விருந்து மிகவும் மேன்மையானது.
விருந்தோம்பல்-1
- முதல் குறள்.
“இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு“.
இதில்
“இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம்“
இதன் பொருள்
இல்வாழ்க்கையில் இருந்து பொருள்களைக் காத்து வாழ்வதெல்லாம்
அடுத்து
“வி்ருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு“
இதன் பொருள்
விருந்தினரைப் போற்றி அவர்களுக்கு உதவி செய்வதற்கே ஆகும்.
அதாவது
இல்வாழ்க்கையில் இருந்து பொருள்களைக் காத்து வாழ்வதெல்லாம், விருந்தினரைப் போற்றி அவர்களுக்கு உதவி செய்வதற்கே ஆகும்.
விருந்தோம்பல் அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று“.
இதில்
“விருந்து புறத்ததாத் தானுண்டல்“
இதன் பொருள்
விருந்தினராக வந்தவர் இல்லத்திற்கு புறத்தே இருக்க
அடுத்து
“சாவா மருந்தெனினும்“
இதன் பொருள்
உண்ணப்படும் உணவு சாவா மருந்தாகிய அமிழ்தமே ஆனாலும்
அடுத்து
“வேண்டற்பாற் றன்று“
விரும்பத்தக்கது அன்று.
அதாவது
விருந்தினராக வந்தவர் இல்லத்திற்கு புறத்தே இருக்க, உண்ணப்படும் உணவு சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் விரும்பத்தக்கது அன்று.
விருந்தோம்பல் அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.
- மூன்றாவது குறள்.
“வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று“
இதில்
“வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை“
இதன் பொருள்
நாள்தோரும் வரும் விருந்தினரைப் போற்றுபவனின் இல்வாழ்க்கை
அடுத்து
“பருவந்து பாழ்படுதல் இன்று“
இதன் பொருள்
வறுமையால் துன்புற்று கெடுவது இல்லை.
அதாவது
நாள்தோறும் வரும் விருந்தினரைப் போற்றுபவனின் இல்வாழ்க்கை, வறுமையால் துன்புற்றுக் கெடுவது இல்லை.
விருந்தோம்பல் அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.
- நான்காவது குறள்.
“அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்“
இதில்
“அகனமர்ந்து செய்யாள் உறையும்“
இதன் பொருள்
திருமகள் மனமகிழ்ந்து குடியிருப்பாள்.
அடுத்து
“முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்“
முகமலர்ச்சியுடன் தன் வீட்டிற்கு வரும் விருந்தினரைப் போற்றுபவனுடைய இல்லத்தில்
அதாவது
முகமலர்ச்சியுடன் தன் வீட்டிற்கு வரும் விருந்தினரைப் போற்றுபவனுடைய இல்லத்தில், திருமகள் மனமகிழ்ந்து குடியிருப்பாள்.
விருந்தோம்பல் அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள்.
“வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்“
இதில்
“வித்தும் இடல்வேண்டும் கொல்லோ“
இதன் பொருள்
விதை விதைக்கவும் வேண்டுமோ? தானே விளையாதோ?
அடுத்து
“விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்“
இதன் பொருள்
தன் வீட்டிற்கு வரும் விருந்தினரைப் போற்றி முன்னே உணவளித்து மிஞ்சிய உணவை
உண்டு வாழ்கிறவனுடைய நிலத்தில்
அதாவது
தன் வீட்டிற்கு வரும் விருந்தினரைப் போற்றி முன்னே உணவளித்து மிஞ்சிய உணவை
உண்டு வாழ்கிறவனுடைய நிலத்தில், விதை விதைக்கவும் வேண்டுமோ? தானே விளையாதோ?
விருந்தோம்பல் அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.
இந்த பகுதி இதோடு முடிவடைந்தது. மீதி உள்ள ஐந்து குறள்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
நன்றி! வணக்கம்!
“