ஹிதோபதேசம்
ஹிதோபதேச கதைகளில் போன பகுதியில் மயில் ராஜா சித்ரவர்ணா போர் தொடுக்க ரொம்ப ஆவலாக இருந்தது என்று பார்த்தோம். சித்ரவர்ணாவின் மந்திரி கழுகு உடனே போருக்குப் போவது புத்திசாலித்தனம் இல்லை என்று சொன்னதும் சித்ரவர்ணா பொறுமையை இழந்து கோபப்பட்டது. இந்த பகுதியில் கழுகு அதன் அறிவுரையைத் தொடர்ந்தது. ஓர் அரசன் போரில் கடைப்பிடிக்க வேண்டிய விதிகளையும் கடமைகளையும் எடுத்துச் சொன்னது. சித்ரவர்ணா என்ன தான் செய்யப்போகிறது என்று பார்க்கலாம் வாங்க.
பொறுமை இழந்த அரசன்
தூர்தர்ஷி சித்ரவர்ணாவிடம் “மகாராஜா! போரில் மிக முக்கியமானது நமக்கு விசுவாசமாகவும், நன்றியோடும் இருக்கும் அரசனையும், நாட்டையும் காப்பாற்றப் போராடும் வீரர்கள். படை மிகப் பெரிதாக இருக்கவேண்டும் என்று எண்ணக்கூடாது. படைப் பெரிதாக இருந்தாலும் படை வீரர்களிடம் விசுவாசம் இல்லை என்றால் அந்தப் படையால் எந்த பயனும் இல்லை. சிறிய படையாக இருந்தாலும் ராஜாவுக்கு விசுவாசமாகவும் தந்திரமாக ஏமாற்றாமல் இருந்தால் போதும். வெற்றி நிச்சயம். போர் நடக்கும் போது நடுவில் போர் செய்ய விருப்பமில்லாதவர்கள் ஓடிவிட்டால் தைரியமாகச் சண்டைபோடுபவர்களுக்கும் போரில் விருப்பமில்லாமல் போய்விடும்”.
“உங்கள் வெற்றி படைவீரர்களுடைய திறமையில் தான் உள்ளது. அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் பாராட்டுங்கள். அவர்களை மரியாதையுடன் நடத்துங்கள். அவர்களுக்குச் சேரவேண்டியதைத் தாமதிக்காமல் கொடுத்து விடுங்கள்.அவர்கள் வீரத்தைப் போற்றுங்கள். நல்ல உணவும் தேவையான ஓய்வும் வீரர்களுக்கு மிக அவசியம். இல்லை என்றால் வீரர்களுக்குப் போர் செய்வதில் நாட்டமும் இருக்காது. பொறுமையையும் இழந்து விடுவார்கள். எதிரியைத் தாக்கும்முன் வீரர்கள் நன்றாக ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். ஓய்வு கிடைக்காமல் சோர்வாக இருந்தால் பலமாக எதிரியைத் தாக்க முடியாது”.
“எதிரியின் பகைவன் நண்பனாகக் கிடைத்தால் அதைவிடச் சிறந்தது எதுவும் இல்லை. எதிரியின் குடும்பத்தைப் பற்றிய விவரங்களை ஒற்றர்களை அனுப்பிச் சேகரிக்க வேண்டும். நமக்கு சமயத்தில் அது உதவும். எதிரி நாட்டில் வேறு யாருக்காவது அரசனாக வேண்டும் என்று ஆசை இருந்தால் நிறையக் கட்டுக் கதைகளைப் பரப்பவேண்டும்.அதிலும் முக்கியமாக எதிரிக்கு உதவுபவர்களைப் பற்றியும் பரப்ப வேண்டும். அப்போதுதான் ஒருவரை ஒருவர் நம்பமாட்டார்கள். அது நமக்கு உதவியாக இருக்கும்”.
“போரில் வென்றதும் எதிரி நாட்டில் இருக்கும் மக்களை உங்கள் நாட்டில் வந்து வாழ அவர்களைத் தயார் செய்யவேண்டும். அந்த மக்கள் அவர்களிடம் உள்ள திறமையாலும் அறிவாலும் உங்களுடைய நாட்டை உயர்த்துவார்கள்”. கழுகின் இந்த நீள அறிவுரைகளைக் கேட்ட சித்ரவர்ணாவிற்கு எரிச்சல் அதிகமானது.
சித்ரவர்ணாவோ உடனே போர் செய்யத் துடித்தது. “சும்மா இப்படி நீளமாகப் பேசிக்கொண்டே இருந்தால் காலம்தான் விரயம் ஆகும். சண்டையில் ஒருத்தருக்கு வெற்றி கிடைக்கும் மற்றவர்க்குத் தோல்வி கிடைக்கும்” எரிச்சலோடு சித்ரவர்ணா சொன்னது. கழுகுக்கு சித்ரவர்ணா போரில் வெல்வது மிகச் சுலபம் என்று நினைத்தது புரிந்தது. அதிகாரம் மட்டும் இருந்தால் போதாது புத்திசாலித்தனத்துடன் தந்திரமாக யோசிக்கவும் தெரிய வேண்டும் என்று சித்ரவர்ணாவிற்கு புரியவில்லை என்று நினைத்தது. கழுகு சொன்னதைக் கொஞ்சமும் கேட்காமல் பொறுமையை இழந்து படைகளுடன் போருக்குக் கிளம்பியது.
அதற்குள் ஹிரண்யகர்பாவின் ஒற்றன் கற்பூரத்தீவுக்கு வந்து சித்ரவர்ணா படையுடன் அங்கே வருவதைச் சொன்னது. “மன்னா! அந்த சித்ரவர்ணாவின் ஒற்றன் இங்கு ஊடுருவியிருப்பதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. அந்த கழுகுக்குத் தெரிந்தவர்கள் மூலம் எனக்கு இந்த தகவல் கிடைத்தது” அந்த ஒற்றன் விஷயத்தை அவசர அவசரமாகச் சொன்னது.
“நினைத்தேன். அந்த காகமாகத்தான் இருக்க வேண்டும்”.சர்வாங்யா படபடப்போடு சொன்னது. “அவசரப்படாதே சர்வாங்யா. அந்த காகம் கிளியைக் கொல்ல தயாராயிருந்ததை மறந்துவிட்டாயா? அது ஒற்றனாக இருந்தால் அப்படிச் சொல்லியிருக்குமா?” ஹிரண்யகர்பா இடைமறித்தது.
“ஆனாலும் அரசே! காகமோ நமக்கு அறிமுகமில்லாதது. அறிமுகம் இல்லாதவர்களிடம் நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்”. சர்வாங்யா எச்சரித்தது.” எல்லோரும் அப்படி இல்லை. நமக்கு அறிமுகமில்லாதவர்களும் நமக்கு உதவலாம்”. ஹிரணயகர்பா மறுத்துப் பேசியது.
“மன்னா! ஒரு விசுவாசமான மந்திரி மன்னருக்கு நன்மையை மட்டும்தான் நினைப்பான். ராஜா ஏதாவது தவறு செய்தால் அந்த தவற்றின் விளைவுகள் ராஜாவைத்தான் பாதிக்கும். அதைத் தடுப்பது மந்திரியின் கடமை. அதனால் தான் மறுபடியும் மறுபடியும் நான் உங்களை அந்த காகத்திடம் எச்சரிக்கையாக இருக்கச் சொல்கிறேன்” சர்வாங்யா அழுத்தத்துடன் சொன்னது.
ஹிரண்யகர்பா “இந்தவிஷயத்தில் இரண்டு பேரும் ஒத்துப் போகமாட்டோம். சரி! இப்போது அடுத்தது என்ன செய்யவேண்டும் என்று பார்க்கவேண்டும். சித்ரவர்ணாவின் படை நம் நாட்டிற்குப் பக்கத்தில் வந்துவிட்டது என்று கேள்விப்பட்டேன். மந்திரியே நாம் இப்போது செய்யவேண்டியது என்ன?” என்று கேட்டது.
“மன்னன் சித்ரவர்ணா அதன் மந்திரி கழுகின் அறிவுரையை அலட்சியம் செய்துவிட்டு வந்ததாக நம் ஒற்றனிடம் இருந்து செய்தி வந்திருக்கிறது. இதிலிருந்தே தெரிகிறது சித்ரவர்ணா சரியான முட்டாள் என்று. அது ஒரு திமிர் பிடித்த, பொறுமை இல்லாத, சிந்திக்கும் திறனில்லாத அரசனாகத்தான் இருக்க வேண்டும். அதைத் தோற்கடிப்பது சுலபமாகத்தான் இருக்கும்”.
“முதலில் சித்ரவர்ணா நம்மை நெருங்க முடியாமல் வாயில் கதவுகளை மூடவேண்டும். சரஸ் பெருங்கொக்குகளை சித்ரவர்ணாவின் படையை மலைகளையும் ஆறுகளையும் கடக்கும்போது தாக்க உத்தரவிட வேண்டும். அப்போது தான் நம் படைகள் தாக்கும் போது அவர்களிடம் திரும்பித் தாக்க வேண்டிய சக்தியும் இருக்காது ” சரவாங்யா விவரித்தது.
ஹிரண்யகர்பாவின் படைகளும் சர்வாங்யா சொன்னதை அப்படியே செய்தது. சித்ரவர்ணாவின் படைவீரர்களும் தளபதிகளும் அந்தப் போரில் உயிர் இழந்தார்கள். தன் தவற்றை உணர்ந்த சித்ரவர்ணா மந்திரி கழுகிடம் “ஏன் நீ ஒன்றும் சொல்லாமல் இருக்கிறாய்? நான் தவறு செய்துவிட்டேனா? இப்போது என்ன செய்வது?” கெஞ்சியது.
“ஒர் அரசன் போர் செய்வதைப் பற்றியோ, நாட்டை ஆள்வது எப்படி என்றோ முழுமையாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்றில்லை. மந்திரிகளும், புத்திசாலி அறிஞர்களும் இதைப் பற்றி அரசனுக்கு எடுத்துச் சொல்வார்கள்.அது அவர்களுடைய கடமை. தன் மனம் போன போக்கில் நடக்காமல் அந்த அறிவுரைகளை ஒரு நல்ல அரசன் கேட்டு நடக்க வேண்டும்”.
“ஆனால் நீங்கள் என்ன செய்தீர்கள்? போருக்கு முன் ஒரு நல்ல திட்டமிடல் வேண்டும் என்று எத்தனை தடவை சொன்னேன் நான். அதை அலட்சியம் செய்துவிட்டுச் சிந்திக்காமல் அவசர அவசரமாகப் போருக்குப் போனீர்கள். எந்த ஒரு முன்னேற்பாடும் இல்லாமல் வெற்றி கிடைக்கும் என்று எப்படி நினைத்தீர்கள். ஓ! நம்மிடம் மிகப் பெரிய படை இருக்கிறது. அதனால் வெற்றி நிச்சயம் என்று நினைத்தீர்களோ?”
“போருக்குப் போகுமென் நன்றாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்று நான் சொன்னதையும் கேட்கவில்லை. இந்த தோல்வி உங்கள் அவசரப் புத்தியால் வந்தது. குருடனுக்கு இருட்டில் விளக்கு எரிந்தாலும் அவனுக்கு அது உபயோகமில்லை. நீங்கள் நினைத்தது தான் நடக்க வேண்டும் என்று நினைத்ததால் நான் சொல்வதை நீங்கள் கேட்க மாட்டீர்கள் என்று எனக்குப் புரிந்தது. அதனாலேயே நான் எதுவும் கூறாமல் ஒதுங்கிவிட்டேன்”.
நான் சொல்வதால் உங்களுக்குக் கோபம் தான் வரும். நம் இரண்டுபேருக்கும் இடையில் பிரச்சனைகள்தான் உருவாகும். ஆனால் என்ன நடந்தது இப்போது? உங்கள் அவசரப்புத்தியால் வந்த விளைவுகள் உங்களைப் பாதிக்கின்றது. இதிலிருந்து வெளிவர என் உதவி உங்களுக்குத் தேவைப் படுகிறது”. கழுகு சித்ரவர்ணாவின் தவறுகளைச் சுட்டிக்காட்டியது.
அதைக்கேட்ட சித்ரவர்ணாவிற்கு அது செய்த தவறு புரிந்தது. ஒரு வித விரக்தியுடன் சோகமாக “ஆமாம். எல்லாம் என் தவறுதான். உயிருடன் இருக்கும் போர் வீரர்களைக் கூட்டிக்கொண்டு விந்திய மலைக்கே திரும்பிப் போவதுதான் சிறந்தது” சொன்னது.
கழுகு சித்ரவர்ணாவைப் பாரத்து பரிதாபப்பட்டு “இந்த முடிவு இப்போது எடுக்க வேண்டாம். அரசனுக்குப் பிரச்சனை என்றால் அரசனின் மந்திரிகள் தான் அந்தப் பிரச்சனையிலிருந்து அரசனைக் காப்பாற்ற வேண்டும்.எதிரியின் கோட்டையைக் கைப்பற்றிய பின்பு தான் நம் படைகளுடன் திரும்பி விந்திய மலைக்குச் செல்ல வேண்டும்.அதற்கு முன் நாம் திரும்பக் கூடாது” என்றது.
“அது எப்படி முடியும்? நிறையப் படை வீரர்களை இழந்து விட்டோமே?” சித்ரவர்ணா குழப்பத்தோடு கேட்டது.” அதைப்பற்றி கவலைப் படவேண்டாம் அரசே!” கழுகின் முகத்தில் தந்திரம் தெரிந்தது.
“இப்பொழுதாவது நான் சொல்வதைக் கேளுங்கள். எதிரியின் கோட்டையின் கதவுகளை உடனே வீரர்களை விட்டு மூடச்சொல்லுங்கள்” கழுகு சொன்னது.கோட்டையின் கதவுகளை சித்ரவர்ணாவின் படைகள் மூடியதும் ஹிரண்யகர்பாவிற்கு விஷயம் தெரிந்தது. ஹிரண்யகர்பா மந்திரியின் ஆலோசனைக்குக் காத்திருந்தது.
இதோடு இந்த பகுதி முடிந்தது. சித்ரவர்ணாவுக்கு போரில் வெற்றி கிடைக்குமா? காகம் மேகவர்ணா என்ன செய்தது என்று அடுத்த பகுதியில் மறக்காமல் வந்து கேளுங்கள்.
நன்றி! வணக்கம்!