ஹிதோபதேசம்.
இது ஹிதோபதேசத்தின் போர் தொடுத்தல் பகுதியின் இரண்டாவது கதை. போன கதையில் தீர்க்கமுகா என்ற கொக்கு விந்திய மலைப்பகுதியில் பறந்து போகும்போது மயில்களுடன் நடந்த விவாதத்தைப் பற்றி அன்னப் பறவைகளின் ராஜாவான ஹிரண்யகர்பாவிடம் சொன்னதைப் பார்த்தோம்.
கொக்கு அதன் நடத்தையைப் பற்றிக் கவலைப்படாமல் திமிரா பேச ஹிரண்யகர்பா யாரையும் திமிரா துச்சமா பேசக்கூடாது என்று சொல்லிவிட்டு அதற்கு எடுத்துக்காட்டாகப் புலித்தோல் போர்த்திய கழுதையின் கதையைச் சொன்னது.
ஹிரண்யகர்பா சொன்ன அந்த புலித்தோல் போர்த்திய கழுதையின் கதை என்ன என்று பார்க்கலாமா!
புலித்தோல் போர்த்திய கழுதை
ஹஸ்தினாபுரம் என்ற ஊரில் விலாசா என்ன தையல்காரன் இருந்தான். அவனிடம் ஒரு கழுதையும் இருந்தது. அந்தக் குதிரையின் மீதுதான் அவன் தைக்க வேண்டிய துணிகளை வைத்து எடுத்துக்கொண்டு வருவான். அந்த கழுதைக்கு நிறைய வயசாகிவிட்டது. தெம்பும் குறைந்துவிட்டது.
முன்பு போல நிறையத் துணிகளை அதனால் சுமக்க முடியவில்லை. விலாசாவுக்கு அந்த கழுதைக்குத் தேவையான சத்தான உணவைக் கொடுக்கவும் மனசு வரவில்லை. மாகா கஞ்சன் அவன். பணம் செலவழிக்காமல் அந்த கழுதைக்கு எப்படி சாப்பாடு கொடுக்கலாமென்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான்.
அந்த கழுதையைக் கூட்டிக்கொண்டு காட்டுவழியாக வயல்கள் இருக்கும் இடத்துக்குப் பக்கத்தில் வந்தான். சுத்திப் பாரத்துக் கழுதைக்குச் சாப்பிட நிறையக் கிடைக்கும் என்று தெரிந்ததும் புலித்தோலை ஒன்றை எடுத்து அந்த கழுதைமேல் போட்டு அதை அப்படியே மேய விட்டுவிட்டு ஊருக்குத் திரும்பிப் போய்விட்டான்.
இந்த தந்திரத்துக்குப் பலன் நன்றாகவே கிடைத்தது. அந்த பக்கத்திலிருந்த விவசாயிகள் கழுதையைப் புலி என்று நினைத்து அதன் பக்கத்தில் வரவே இல்லை. எந்தத் தடையும் இல்லாமல் கழுதை சாப்பிட்டுச் சாப்பிட்டு கொழுகொழு என்று பருத்துவிட்டது. நாட்கள் இப்படியே போய்விட்டது. விலாசா கொஞ்ச நாட்களில் அந்தக் கழுதையைத் திருப்பிக் கூட்டிக்கொண்டு போயிருந்தால் பிரச்சனையே இருந்திருக்காது. அவனுக்கோ அந்தக் கழுதைக்குச் செலவு செய்ய மனமில்லை. பேராசை வேறு.
அந்தக் கழுதைக்குத் தெரியுமா அதற்கு வரப்போகும் ஆபத்தைப் பற்றி. அந்த தவிர்க்க முடியாத ஆபத்தும் நடந்தது. அங்க இருந்த ஒரு விவசாயிக்கு அந்த விலங்கின் மேல் சந்தேகம் வந்துவிட்டது. “அந்த புலி ஏன் காட்டுக்குள்ள போய் வேட்டையாடாமல் இந்த வயல்களையே சுத்தி வருகிறது” என்று நினைத்தான். “இந்த புலியிடம் ஏதோ வித்தியாசம் தெரிகிறதே? என்ன கரணமோ தெரியவில்லையே ? அது என்ன? என்று கண்டுபிடித்தே ஆகவேண்டுமே’ என்று நினைத்த ஒரு வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொண்டு ஒரு கழுதையின் தோலையும் மேலே போர்த்திக்கொண்டு மெதுவா வயலுக்குள் நடந்து போனான்.
கழுதையின் கண்ணுக்கு அவன் கழுதையாகத்தான் தெரிந்தான். இன்னொரு கழுதையைப் பார்த்த சந்தோஷத்தில் ஹீ ஹா ஹீ ஹா என்று கத்த ஆரம்பித்தது. அதைக் கேட்ட விவசாயி அந்தக் கழுதையை அம்பால் அடித்துக் கொன்றுவிட்டான். “அதனால் தான் எதிரிகளின் இடத்தில் நிறைய நாட்கள் இருக்கக் கூடாது” ஹிரண்யகர்பா சொல்லி முடித்தது.
இந்த கதையைக் கேட்ட பின்பும் தீர்க்கமுகாவுக்கு புத்தி வரவில்லை. செவிடன் காதில் ஊதிய சங்கு போலத்தான். சொன்னதையே திரும்பித் திரும்பிச் சொன்னது. “அந்த மயில்கள் என்னைக் கேவலமா பேசிட்டாங்க. நிறையத் திமிர் உனக்கு. கொஞ்சமும் வெக்கமே இல்லை உனக்கு. எங்கள் நாட்டுக்குள்ள வந்து எங்கள் ராஜாவையே மரியாதை இல்லாமல் பேசுகிறாய். என்ன கொழுப்பு உனக்கு! நீ எங்கள் ராஜாவைப் பற்றிப் பேசுவதைக் கேட்டு நாங்கள் சும்மா இருப்போம் என்று நினைத்தாயா?. இப்படிக் கத்தி பேசிக்கொண்டே என்னைச் சுற்று நின்று கொண்டு அலகால் கொத்த ஆரம்பித்தார்கள்”.
“முட்டாள் கொக்கே! உன்னுடைய ராஜாவால் ஆயுதம் கூட தூக்க முடியாது. எப்படித்தான் உங்கள் நாட்டைக் காப்பாற்றுவாரோ? நீ ஒரு கிணற்றுத் தவளை. உன் நாட்டுக்குள் நடப்பதை மட்டும்தான் உனக்குத் தெரியும். வெளி உலகத்தில் நடப்பது ஒன்றும் தெரியாது உனக்கு. க்கும். வெளி உலகத்தைப் பற்றித் தெரிந்திருந்தால் உன்னுடைய ராஜாஅன்னப்பறவைக்கு ஒன்றும் தெரியாது என்று எப்போதோ புரிந்திருக்குமே உனக்கு. எங்களையும் உன்னுடைய நாட்டுக்கு வரச் சொல்லிக் கூப்பிடமாட்டாய்.”
பழங்களையும் நிழலையும் கொடுக்கும் மரங்களைப் பார்த்திருக்கின்றாயா நீ?ஜனங்களுக்கு அந்த மரங்களை ஏன் பிடிக்கும் தெரியுமா? மரத்தில் பழம் இல்லை என்றாலும் கூட அந்த மரம் தரும் நிழலை நினைத்து அந்த மரத்தை எல்லோரும் மதிப்பார்கள். நான்தான் ராஜா என்று தகுதியே இல்லாதவர்கள் சொன்னாலும் அவர்களுக்குச் சேவகம் செய்யக்கூடாது. யாருக்கு ராஜாவாகத் தகுதி இருக்கிறதோ அவர்களுக்கு மட்டும்தான் அடி பணியவேண்டும். நாட்டில் மதிப்புள்ளவர்களின் நட்பும் செல்வாக்கு உள்ளவர்களின் தொடர்பும் இருந்தால் எதையும் சாதிக்கலாம். உனக்கும் பாதுகாப்பு இருக்கும். மக்களும் உன்னை மதித்து உதவியும் செய்வார்கள்.”
“முயல் ஒன்று வானத்தில் உள்ள நிலாவை எப்படிப் பயன்படுத்தியது என்று தெரிந்தால் நாங்கள் சொல்வது உனக்குப்புரியும்” மயில்கள் சொல்லி முடித்தது. எனக்கு அந்த கதையைக் கேட்க ரொம்ப ஆர்வம் இருந்தது. “நிலாவுக்கும் முயலுக்கும் என்ன அப்படி ஒரு சம்பந்தம். எங்கே அந்த கதையை எனக்குச் சொல்லுங்கள்” என்று மயில்களிடம் கேட்டேன். மயில்களும் கதையை ஆரம்பித்தன.
முயலும் யானைகளும்.
ஒரு சமயத்தில் மழையே பெய்யாமல் அந்த காட்டில் ஒரே வறட்சி. மழை இல்லாததால் அந்த காட்டில் உள்ள ஏரிகள், குளங்கள், ஆறுகள் எல்லாம் வறண்டுவிட்டது. காட்டு விலங்குகள் தண்ணீர் இல்லாமல் தவித்தன. அந்த காட்டிலிருந்த யானைக் கூட்டம் ஒன்று தாகத்தை அடக்க முடியாமல் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தன.
கூட்டத்தி தலைவியிடம் சென்று “எங்கேயும் தண்ணீரில்லையே? என்ன செய்யப் போகிறோம்? சுத்தி சுத்தி வருகிறோம். எங்கேயும் தண்ணீர் கிடைக்கவில்லை. சின்ன சின்ன விலங்குகளைக்கூடத் தண்ணீர் போதாது. நமக்கு எப்படி போதும்? எல்லா ஏரிகளும் குளங்களும் வற்றி நிலத்தில் அங்கங்கே பிளவுகளும் ஏற்பட்டிருக்கிறது. இப்படியே எத்தனை நாட்கள் தள்ள முடியும்? எப்படித்தான் நம்மைக் காப்பாற்றிக்கொள்வது?”புலம்பின.
அந்தக் கூட்டத்தினத் தலைவி பொறுமையாக மீதி யானைகளின் புலம்பலைக் கேட்டது. அந்த காட்டுக்குள் மரங்களுக்கு நடுவில் குளம் ஒன்று கண்ணில் படாமல் இருக்கிறது என்று அந்த தலைவிக்குத் தெரியும். யானைகளை அந்த அழகான குளத்துக்குக் கூட்டிக்கொண்டு போனது. அந்த குளத்து தண்ணீரைப் பார்த்ததும் யானைகளுக்கு மகிழ்ச்சியை அடக்க முடிவில்லை. தடதடனு வேகமா குளத்தை நோக்கி ஓடின. அந்த குளத்துக்குப் பக்கத்திலேயே இருக்க முடிவும் செய்தன.
இந்த முடிவு அந்த குளத்தைச் சுற்றி வசித்த முயல்களுக்குப் பிரச்சனை ஆனது. தண்ணீர் குடிக்க யானைகள் போகும் போது அந்த முயல்கள் யானைகளின் பிரமாண்டமான கால்களில் அடி பட்டு நசுங்கின. இப்படி அடிக்கடி நடக்கவும் முயல்களுக்குக் கவலையும் பயமும் அதிகமாகி விட்டது. ஷில்லிமுகா என்ற முயல் “நம் குடும்பமே அழிந்துவிடும் போல இருக்கிறதே” என்று அழ ஆரம்பித்தது.
விஜயா என்ற வயதான முயல் இதைப் பாரத்து “அழாதே! அப்படி நடக்க விடக்கூடாது. நான் எதையாவது செய்து இந்த யானைக் கூட்டத்தை இங்கே இருந்து விரட்டிவிடுவேன்” சொன்னது. விஜயா முயலும் எப்படி இந்த யானைகளை விரட்டலாம் என்று யோசித்துக்கொண்டே இருந்தது.
“நேரில் போய் யானைகளை இந்த இடத்திலிருந்து வேறு இடத்துக்குப் போங்கள் என்று விரட்ட முடியுமா? அதைக் கேட்டு யானைகளுக்குக் கோபம் வந்து எல்லாரையும் மிதித்து நசுக்கிவிட்டால் நிலைமை ரொம்ப மோசமாகிவிடுமே”.
விஜயாவோ விவேகமான முயல். ஒரு நல்ல பாதுகாப்பான திட்டம் போட்டுத் தான் விரட்ட முடியும் என்று அதற்குத் தெரியும். “இந்த பெரிய உருவம் கொண்ட விலங்கு சுலபமா சின்ன விலங்குகளான முயல்களைச் சுலபமா நசுக்க முடியும். எப்படி இவர்களை விரட்டுவது . பாம்பு எப்படி வாசனையால் இரையைப் பிடிக்குமோ, அரசன் எப்படிச் சிறப்பாக உபசரிப்பானோ அப்படி ஏதாவது செய்தால்தான் முடியும்.”
“ஆ! எனக்கு புரிந்தது என்ன செய்யவேண்டும் என்று” ஒரு குதி குதித்து பக்கத்தில் உள்ள சின்ன மலையின் மேல் ஏறிக் காத்திருந்தது.
கொஞ்ச நேரத்தில் அந்த மலையில் உள்ள மரங்கள் கிடுகிடு என்று ஆட ஆரம்பித்தது. பூமி நகர்வது போல் ஓரே சத்தம். ஒரு நூறு யானைகளின் பாதங்களால் அந்த மலையே அதிர்ந்தது. விஜயா தைரியமாக அந்த கூட்டத்தின் தலைவிக்கு முன்னால் போய் நிமிர்ந்து நின்றது.
யானைக்கூட்டத்தின் தலைவி குனிந்து முயலைப் பாரத்து “ஆமாம் நீ யார்? எங்கிருந்து வருகிறாய்?” ஒரு சின்ன முயல் பெரிய யானைக் கூட்டத்தை நிறுத்தியதை நம்ப முடியாமல் கேட்டது.
“நானா? நான் ஒரு முயல். என்னை அனுப்பியது அந்த கடவுளான சந்திரன்” விஜயா பதில் சொன்னது. “அப்படியா! என்ன வேண்டும் உனக்கு?” யானைத் தலைவி கேட்டது. “நான் ஒரு தூதன். உண்மையை மட்டும்தான் பேசுவேன். நான் தூதனாக வந்ததால் என்னைத் தாக்கக் கூடாது. அது தான் முறை. அந்த கடவுளான சந்திரன் சொன்னதை இப்போது உங்களிடம் சொல்கிறேன்”.
“இந்த குளத்தைச் சுற்றி வசிக்கும் முயல்களைக் குளத்தைப் பாதுகாக்க நான் தான் அனுப்பியிருக்கிறேன். உங்கள் கூட்டத்தில் உள்ள யானைகள் தண்ணீர் குடிக்க வரும் போது தரையில் இருக்கும் முயல்களைக் கவனிக்காமல் மிதித்து விடுகிறார்கள். அதனால் முயல்கள் இந்த இடத்தை விட்டு ஓடிப் போகிறார்கள். என்னுடைய கண்காணிப்பில்தான் இத்தனை நாட்களும் இருந்தார்கள். உங்களைப் பார்த்து பயம் வந்து இந்த குளத்தைப் பாதுகாக்க முடியாமல் தவிக்கிறார்கள்”
“என் பெயர் என்ன தெரியுமா? என்னுடைய உடம்பில் உள்ள குறியைப் பார். அதனால்தான் என் பெயர் ஷஷாங்கா. சந்திரனைக் குறிக்கும் பெயர்” சொல்லி முடித்தது.
விஜயா சொன்னதைக் கேட்ட யானைக் கூட்டத்தின் தலைவிக்கு மனதில் ஒரே கலக்கம். கடவுளின் கோபத்திற்கு ஆளாக விருப்பமில்லை. அதனால் யானைக் கூட்டத்திற்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயமும் வந்தது. “என்னை மன்னித்துவிடுங்கள். கடவுளின் ஆணை எனக்குத் தெரியாது. நாங்கள் வேண்டும் என்று தவறு செய்யவில்லை. நாங்கள் விஜயா சொன்னதைக் கேட்ட யானைக் கூட்டத்தின் தலைவிக்கு மனதில் ஒரே கலக்கம். கடவுளின் கோபத்திற்கு ஆளாக விருப்பமில்லை. அதனால் யானைக் கூட்டத்திற்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பயமும் வந்தது.என்னை மன்னித்துவிடுங்கள். கடவுளின் ஆணை எனக்குத் தெரியாது. நாங்கள் வேண்டும் என்று தவறு செய்யவில்லை. நாங்கள் மீண்டும் இந்த குளத்திற்குத் தண்ணீர் குடிக்க வரமாட்டோம்” தலைவி பதில் சொன்னது.
இந்த யானைகளை மறுபடியும் திரும்பி வரவிடாமல் செய்ய முயல் ஒரு யோசனை செய்தது. “நீங்கள் எதற்கும் இன்று இரவு குளத்திற்கு வந்து கோபத்தில் உள்ள கடவுளிடம் பேசி மன்னிப்பு கேட்டுவிட்டு அதற்குப் பின் இந்த இடத்திலிருந்து கிளம்புங்கள். திரும்பி வரவே வேண்டாம். அதுதான் உங்களுக்கு நல்லது” தந்திரமாகப் பேசியது.
அதுபோலவே தலைவி ராத்திரியில் அந்த குளத்திற்கு வந்தது. விஜாயாவும் அங்கே வந்து யானைக்குப் பக்கத்தில் நின்றது.அந்த குளத்தில் சந்திரனின் பிம்பம் தெரிந்தது. அப்போது வந்த மெல்லிய காற்றால் நீரில் சின்ன சின்ன அலைகள் உண்டானது.அதைப் பார்த்ததும் சந்திரன் கோபத்தில் இருப்பதாக யானைத்தலைவி நினைத்தது.
யானை குனிந்து வணங்கி மரியாதை செய்தது. உடனே முயல் “சுவாமி! இந்த யானைகள் முயல்களை வேண்டும் என்றே மிதிக்க வில்லை. தெரியாமல் தான் செய்துவிட்டார்கள்.அது ஒரு விபத்து தான். இனிமேல் கவனமாக இருப்பதாகச் சொல்லிவிட்டார்கள். நீங்கள் அவர்களை மன்னித்து விடவேண்டும்” கெஞ்சுவது போல் நடித்தது.
யானைகளுக்கு முயல் சொன்னதைக் கேட்டதும் பயம் நீங்கி நிம்மதி வந்தது. முயலுக்கு நன்றி சொல்லிவிட்டு அந்தக் காட்டைவிட்டு வேகவேகமாக வெளியேறினார்கள்.
“பார்த்தாயா! செல்வாக்குள்ளவர்களின் பெயருக்கே எவ்வளவு மதிப்பு மரியாதை.பெரிய ஆபத்திலிருந்து எப்படி சுலபமாகத் தப்பிக்க முடிகிறது” மயில்கள் ஒரு வித மிரட்டலுடன் கதையை முடித்தன.
மயில்கள் கொக்குக்குச் சவால் விட்டிருக்கின்றன. அந்த கொக்கு எப்படி அதைச் சமாளிக்கப் போகிறது? மறுபடியும் எதையாவது உளறி ஆபத்தில் மாட்டிக்கொள்ளப் போகிறதா?
இதை எல்லாம் அடுத்த பகுதியில் பார்ப்போம்.
நன்றி!வணக்கம்!