இந்த பகுதியில் நாம் பார்க்கப் போவது திருக்குறளின் பத்தொன்பதாவது அதிகாரமான புறங்கூறாமை. புறங்கூறாமை என்றால் ஒருவரைப்பற்றி அவர் இல்லாத சமயத்தில் அவரை இழிவாகவும், தவறாகவும் பேசுவது ஆகும். மனதில் நேர்மை இல்லாதவரும், தைரியம் இல்லாதவரும் தான் பிறரைப் பற்றி அவருக்குத் தெரியாமல் பின்னால் இழிவாகப் பேசுவர். தன்னால் அடைய முடியாததைப் பிறர் அடையும் போது பொறாமையில் சுயநலமாக, வஞ்சகமாகப் பிறரைப் பற்றிப் புறங்கூறுவார்கள். பிறரைத் தாழ்த்தி கூறி தன்னை உயர்வாக வெளியில் காட்டிக்கொள்வார்கள். புறங்கூறாமல் இருப்பதால் உண்டாகும் நன்மைகளையும் புறங்கூறுவதால் உண்டாகும் துன்பங்களையும் இந்த அதிகாரம் சொல்கிறது.
புறங்கூறாமை-1
- முதல் குறள்.
“அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது“.
இதில்
‘அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்‘
இதன் பொருள்
ஒருவன் அறத்தினை செய்யாமல் தீயவற்றைச் செய்தாலும் கூட
அடுத்து
‘புறங்கூறான் என்றல் இனிது‘
இதன் பொருள்
பிறரைப் பற்றிப் புறங்கூறாதவன் என்று சொல்லப்படுவது அவனுக்கு நல்லதாகும்.
அதாவது
ஒருவன் அறத்தினை செய்யாமல் தீயவற்றைச் செய்தாலும் கூட பிறரைப் பற்றிப் புறங்கூறாதவன் என்று சொல்லப்படுவது அவனுக்கு நல்லதாகும்.
புறங்கூறாமை அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை”.
இதில்
‘அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே‘
இதன் பொருள்
அறம் இல்லை என அழித்துப் பேசித் தீமைகளைச் செய்வதை விடத் தீமையானதாகும்.
அடுத்து
‘புறனழீஇப் பொய்த்து நகை‘
இதன் பொருள்
ஒருவரைக் காணாதபோது இகழ்ந்து பேசி நேரில் பார்க்கும் போது முகம் மலரப் பேசுவது
அதாவது
ஒருவரைக் காணாதபோது இகழ்ந்து பேசி நேரில் பார்க்கும் போது முகம் மலரப் பேசுவது அறம் இல்லை என அழித்துப் பேசித் தீமைகளைச் செய்வதை விடத் தீமையானதாகும்.
புறங்கூறாமை அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.
- மூன்றாவது குறள்.
“புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்“.
இதில்
‘புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின்‘
இதன் பொருள்
புறம் பேசிப் பொய்யான வாழ்க்கை வாழ்வதைவிட
அடுத்து
‘சாதல் அறங்கூற்றும் ஆக்கத் தரும்’
இதன் பொருள்
அவ்வாறு செய்யாமல் வறுமையில் இறந்து விடுவது அறநூல்கள் கூறும் உயர்வைத் தரும்.
அதாவது
புறம் பேசிப் பொய்யான வாழ்க்கை வாழ்வதைவிட, அவ்வாறு செய்யாமல் வறுமையில் இறந்து விடுவது அறநூல்கள் கூறும் உயர்வைத் தரும்.
புறங்கூறாமை அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.
- நான்காவது குறள்.
“கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்“.
இதில்
‘கண்ணின்று கண்ணறச் சொல்லினும்‘
இதன் பொருள்
ஒருவன் முகத்திற்கு எதிரே நின்று தாட்சணியம் இல்லாமல் கடுமையாச் சொன்னாலும் சொல்லலாம்.
அடுத்து
‘சொல்லற்க முன்னின்று பின்நோக்காச் சொல்‘
இதன் பொருள்
அவன் எதிரில் இல்லாத பொழுது பின்விளைவுகளை எண்ணாது அவனைப் பற்றிப் புறங்கூற வேண்டாம்.
அதாவது
ஒருவன் முகத்திற்கு எதிரே நின்று தாட்சணியம் இல்லாமல் கடுமையாச் சொன்னாலும் சொல்லலாம். அவன் எதிரில் இல்லாத பொழுது பின்விளைவுகளை எண்ணாது அவனைப் பற்றிப் புறங்கூற வேண்டாம்.
புறங்கூறாமை அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள்.
“அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்“.
இதில்
‘அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை‘
இதன் பொருள்
அறத்தை நல்லதென்று சொல்லும் ஒருவன் மனத்தில் அறம் இல்லாதிருப்பதை
அடுத்து
‘புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும்’
அவன் பிறரைப் பற்றிப் புறங்கூறும் இழிவினைக் கொண்டு கண்டு கொள்ளலாம்.
அதாவது
அறத்தை நல்லதென்று சொல்லும் ஒருவன் மனத்தில் அறம் இல்லாதிருப்பதை அவன் பிறரைப் பற்றிப் புறங்கூறும் இழிவினைக் கொண்டு கண்டு கொள்ளலாம்.
புறங்கூறாமை அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு இந்த பகுதி முடிவடைந்தது. புறங்கூறாமை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
நன்றி! வணக்கம்!