இந்த பகுதியில், நாம் பார்க்கப்போவது புதல்வரைப் பெறுதல் அல்லது மக்கட் பேறு அதிகாரத்திலிருந்து 6ல் இருந்து 10வரை உள்ள குறள்கள். முதல் ஐந்து குறள்களைப் போன பகுதியில் பார்த்தோம். இந்த அதிகாரம் பிள்ளை வளர்ப்பு, தாய் தந்தையரின் கடமை, பிள்ளைகளின் பொறுப்பு இவற்றைப் பற்றிக் கூறுகிறது.
புதல்வரைப் பெறுதல்-2
- ஆறாவது குறள்.
“குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்“.
இதில்
“குழல்இனிது யாழ்இனிது என்ப“
இதன் பொருள்
குழல் இசையும் யாழிசையும் இனிது என்று சொல்லுவர்
அடுத்து
“தம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர்”
தம் குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்டறியாதவர்.
அதாவது
தம் குழந்தைகளின் மழலைச் சொற்களைக் கேட்டறியாதவர், குழல் இசையும், யாழிசையும் இனிது என்று சொல்லுவர்.
இது புதல்வரைப் பெறுதல் அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள்.
- ஏழாவது குறள்.
“தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்“.
இதில்
“தந்தை மகற்காற்றும் நன்றி“
இதன் பொருள்
தந்தை தன் மகனுக்குச் செய்யும் நன்மையானது
அடுத்து
“அவையத்து முந்தி இருப்பச் செயல்“
கற்றவர் நிறைந்த சபையில் முதன்மை பெறும்படி கல்வி உடையவானகச் செய்தல்.
அதாவது
தந்தை தன் மகனுக்குச் செய்யும் நன்மையானது, கற்றவர் நிறைந்த சபையில் முதன்மை பெறும்படி கல்வி உடையவனாகச் செய்தல்
புதல்வரைப் பெறுதல் அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது“.
இதில்
“தம்மின்தம் மக்கள் அறிவுடைமை“
இதன் பொருள்
தம் மக்களின் அறிவுடைமை தம்மைக் காட்டிலும்
அடுத்து
“மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது“
இதன் பொருள்
உலகத்து உயிர்க்கெல்லாம் இனிதாகும்.
அதாவது
தம் மக்களின் அறிவுடைமை தம்மைக் காட்டிலும், உலகத்து உயிர்க்கெல்லாம் இனிதாகும்
புதல்வரைப் பெறுதல் அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்.
“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்“.
இதில்
“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும்“
இதன் பொருள்
தாயானவள் பெற்ற காலத்தில் அடைந்த மகிழ்ச்சியைவிடப் பெருமகிழ்ச்சி அடைவாள்,
அடுத்து
“தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்“
இதன் பொருள்
தன் மகனைக் கல்வி கேள்விகளில் சிறந்தவன் என்று சான்றோர் சொல்லக் கேட்க.
அதாவது
தன் மகனைக் கல்வி கேள்விகளில் சிறந்தவன் என்று சான்றோர் சொல்லக் கேட்கத் தாயானவள் பெற்ற காலத்தில் அடைந்த மகிழ்ச்சியைவிடப் பெருமகிழ்ச்சி அடைவாள்.
புதல்வரைப் பெறுதல் அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்“.
இதில்
“மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி“
இதன் பொருள்
கல்வி அறிவு தந்த தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு
அடுத்து
“இவன்தந்தை என்நோற்றான் கொல்எனும் சொல்“
இதன் பொருள்
இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ
என்ற சொல்லை பெற்றுத் தருவதே.
அதாவது
கல்வி அறிவு தந்த தந்தைக்கு மகன் செய்யும் கைம்மாறு, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்ற சொல்லை பெற்றுத் தருவதே.
இந்த பகுதியின் கடைசி குறளின் பொருள் இது.
இந்தக் குறளோடு புதல்வரைப் பெறுதல் அல்லது மக்கட்பேறு அதிகாரம் முடிவடைந்தது. அடுத்ததாக வரும் அதிகாரம், அன்புடைமை. அடுத்த பகுதியில் மறக்காமல் வந்து கேளுங்கள்.நன்றி! வணக்கம்!