வணக்கம். இதுவரை திருக்குறளின் ஆறு அதிகாரங்களை விளக்கத்துடன் பார்த்தோம்.
இன்று திருக்குறளின் ஏழாவது அதிகாரமான புதல்வரைப் பெறுதல் அதிகாரத்திலிருந்து, முதல் ஐந்து குறள்களைப் பொருளுடன் பார்ப்போம்.
பிள்ளை வளர்ப்பு, குழந்தைகளால் வரும் இன்பம், பயன் மற்றும் சிறப்பு இவற்றைக் கூறும் அதிகாரம் இது. குழந்தைகளை அறிவுள்ளவர்களாக, பண்புள்ளவர்களாகப் பிறரை எதிர்பார்க்காமல் உழைத்து தன் கால்களில் நிற்பவர்களாக வளர்க்க வேண்டும் என்று இந்த அதிகாரம் சொல்கிறது. குழந்தைகளின் மழலைச் சொற்களும் அவர்கள் செய்கின்ற சின்ன சின்ன செயல்கள் மிகுந்த இன்பத்தைக் கொடுக்கும். பிள்ளைகளின் வளர்ப்பில் தந்தையின் கடமையையும் சொல்கிறது. நல்ல குணமுள்ள பிள்ளைகளால் தாய்க்கு ஏற்படும் மகிழ்ச்சியையும் இந்த அதிகாரம் கூறுகிறது.
புதல்வரைப் பெறுதல்-1
- முதல் குறள்.
“பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற”.
இதில்
”பெறுமவற்றுள் “
இதன் பொருள் பெற தகுந்த பேறுகளில்
“அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற“
இதன் பொருள்
அறிவில் சிறந்த நன்மக்களைப் பெறுவதைத் தவிர மற்றவற்றை
“யாமறிவது இல்லை”
இதன் பொருள்
யாம் மதிப்பதில்லை.
அதாவது
பெற தகுந்த பேறுகளில் அறிவில் சிறந்த நன்மக்களைப் பெறுவதைத் தவிர மற்றவற்றை யாம் மதிப்பதில்லை.
இது புதல்வரைப் பெறுதல் அதிகாரத்தின் முதல் குறளின் பொருள்.
- இரண்டாவது குறள்
”எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்”
இதில்
“எழுபிறப்பும் தீயவை தீண்டா”
இதன் விளக்கம்
ஒருவனுக்கு ஏழுபிறப்பிலும் தீவினைப் பயன்களால் வரும் துன்பம் வந்து சேராது.
“பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்”
இதன் விளக்கம்
பிறரால் பழிக்கப்படாத நல்ல குணங்களையுடைய புதல்வர்களைப் பெற்றால்.
அதாவது
பிறரால் பழிக்கப்படாத நல்ல குணங்களையுடைய புதல்வர்களைப் பெற்றால், ஒருவனுக்கு ஏழுபிறப்பிலும் தீவினைப் பயன்களால் வரும் துன்பம் வந்து சேராது.
இது புதல்வரைப் பெறுதல் அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள்.
- மூன்றாவது குறள்.
“தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்”.
இதில்
“தம்பொருள் என்பதம் மக்கள்”
என்பதன் விளக்கம்
தம்முடைய பிள்ளைகளே தம் பொருள் என்று அறிஞர் கூறுவர்.
“அவர்பொருள் தம்தம் வினையான் வரும்”.
இதன் விளக்கம்
பிள்ளைகளாகிய பொருள் அவரவர் வினைப்பயனால் அமையும்
அதாவது
தம்முடைய பிள்ளைகளே தம் பொருள் என்று அறிஞர் கூறுவர்.
பிள்ளைகளாகிய பொருள் அவரவர் வினைப்பயனால் அமையும்
புதல்வரைப் பெறுதல் அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.
- நான்காவது குறள்.
“அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்”.
“அமிழ்தினும் ஆற்ற இனிதே”
இதன் விளக்கம்
சுவையான அமிர்தத்தைவிட மிக இனிமையானது.
அடுத்து
“தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்”.
இதன் விளக்கம்
தம்மக்களின் சிறு பிஞ்சு கரத்தால் அளாவிய உணவு.
அதாவது
தம்மக்களின் சிறு பிஞ்சு கரத்தால் அளாவிய உணவு,
சுவையான அமிர்தத்தைவிட மிக இனிமையானது
புதல்வரைப் பெறுதல் அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள்.
“மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு”.
இதில்
“மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம்”
இதன் விளக்கம்
தம் பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம்.
“மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு”.
இதன் விளக்கம்
அவர்களது மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம்.
அதாவது
தம் பிள்ளைகளின் உடலைத் தழுவுவது உடலுக்கு இன்பம்.
அவர்களது மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம்.
இந்த அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.
புதல்வரைப் பெறுதல்-1 இதோடு முடிவடைந்தது. மீதி உள்ள ஐந்து குறள்களை அடுத்த பகுதியில் பார்ப்போம். நன்றி! வணக்கம்!