திருக்குறளின் புகழ் அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களைப் போன பகுதியில் பார்த்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் நீங்கள் கேட்கலாம். ஒருவன் இறந்த பின்னும் மறையாமல் இருப்பது புகழ் ஒன்றுதான். புகழ் இல்லாமல் வாழ்கின்றவர்கள் உயிரோடு இருந்தாலும் வாழாதவர்கள் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.
புகழ் 2
- ஆறாவது குறள்.
“தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று“.
இதில்
‘தோன்றின் புகழொடு தோன்றுக‘
இதன் பொருள்
பிறந்தால் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க வேண்டும்.
அடுத்து
‘அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று‘
இதன் பொருள்
அந்த குணமில்லாதவர்கள் பிறக்காமல் இருத்தலே நன்று.
அதாவது
பிறந்தால் புகழுக்கு ஏதுவாகிய குணத்தோடு பிறக்க வேண்டும்.
அந்த குணமில்லாதவர்கள் பிறக்காமல் இருத்தலே நன்று.
புகழ் அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்.
“புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்“.
இதில்
‘புகழ்பட வாழாதார்’
இதன் பொருள்
தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர்கள்
அடுத்து
‘தந்நோவார்‘
இதன் பொருள்
அதற்குக் காரணம் தாமே என்று வருந்தாமல்
அடுத்து
‘தம்மை இகழ்வாரை நோவது எவன்‘
இதன் பொருள்
தம்மை இகழ்வாரை நொந்து கொள்வது ஏன்?
அதாவது
தமக்குப் புகழ் உண்டாகுமாறு வாழமுடியாதவர்கள் அதற்குக் காரணம் தாமே என்று வருந்தாமல் தம்மை இகழ்வாரை நொந்து கொள்வது ஏன்?
புகழ் அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்“.
இதில்
‘வசையென்ப வையத்தார்க் கெல்லாம்‘
இதன் பொருள்
அந்த வாழ்க்கையே பழி என்று உலகத்தார் கூறுவர்.
அடுத்து
‘இசையென்னும் எச்சம் பெறாஅ விடின்‘
இதன் பொருள்
புகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாவிட்டால்
அதாவது
புகழ் என்னும் பெரும் செல்வத்தைப் பெறாவிட்டால் அந்த வாழ்க்கையே பழி என்று உலகத்தார் கூறுவர்.
புகழ் அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்.
“வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்“
இதில்
‘வசையிலா வண்பயன் குன்றும்‘
இதன் பொருள்
வசையற்ற வளமான விளைச்சல் இல்லாமல் குன்றும்.
அடுத்து
‘இசையிலா யாக்கை பொறுத்த நிலம்‘
இதன் பொருள்
புகழ் இல்லாத உடம்பை சுமந்த நிலம்
அதாவது
புகழ் இல்லாத உடம்பை சுமந்த நிலம் வசையற்ற வளமான விளைச்சல் இல்லாமல் குன்றும்.
புகழ் அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்”.
இதில்
‘வசையொழிய வாழ்வாரே வாழ்வார்’
இதன் பொருள்
தம் மீது வசை இல்லாமல் புகழோடு வாழ்பவரே உயிர் வாழ்கின்றவர்.
அடுத்து
‘இசையொழிய வாழ்வாரே வாழா தவர்‘
இதன் பொருள்
புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் உயிர் இருந்தும் உயிர் இல்லாதவரே.
அதாவது
தம் மீது வசை இல்லாமல் புகழோடு வாழ்பவரே உயிர் வாழ்கின்றவர். புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் உயிர் இருந்தும் உயிர் இல்லாதவரே.
புகழ் அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு இந்த அதிகாரம் முடிவடைந்தது. அடுத்த பகுதியில் இடம் பெறும் அதிகாரம் அருளுடைமை.
நன்றி! வணக்கம்!