போன பகுதியில் பயனில சொல்லாமையிலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பார்த்தோம். பயனற்ற வீண் சொற்களைப் பேசுவதால் வரும் தீமைகளையும் வீண் சொற்களைப் பேசாமல் இருப்பதால் வரும் நன்மைகளையும் இந்த அதிகாரம் கூறுகிறது. அறத்தை விரும்பும் பெரியோர்கள் பயனில்லாத சொற்களைக் கூறமாட்டார் என்று இந்த அதிகாரம் சொல்கிறது.
பயனில சொல்லாமை 2
- ஆறாவது குறள்.
“பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்“.
இதில்
‘பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்‘
இதன் பொருள்
பயனில்லாத சொற்களைப் பலமுறை பேசுபவனை மனிதன் என்று சொல்ல வேண்டாம்.
அடுத்து
‘மக்கட் பதடி யெனல்‘
இதன் பொருள்
மனிதருள் பதர் என்றே சொல்ல வேண்டும்.
அதாவது
பயனில்லாத சொற்களைப் பலமுறை பேசுபவனை மனிதன் என்று சொல்ல வேண்டாம். மனிதருள் பதர் என்றே சொல்ல வேண்டும்.
பயனில சொல்லாமை அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்.
“நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று“.
இதில்
‘நயனில சொல்லினும் சொல்லுக‘
இதன் பொருள்
அறமற்ற சொற்களைச் சொன்னாலும் சொல்லலாம்.
அடுத்து
‘சான்றோர் பயனில சொல்லாமை நன்று‘
இதன் பொருள்
சான்றோர்கள் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது நன்று.
அதாவது
அறமற்ற சொற்களைச் சொன்னாலும் சொல்லலாம்.
சான்றோர்கள் பயனற்ற சொற்களைச் சொல்லாமல் இருப்பது நன்று.
பயனில சொல்லாமை அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்“.
இதில்
‘அரும்பயன் ஆயும் அறிவினார்‘
இதன் பொருள்
அரிய பயன்களை ஆராயும் அறிவுடையவர்கள்
அடுத்து
‘சொல்லார் பெரும்பயன் இல்லாத சொல்‘
கப் பயனில்லாத சொற்களைச் சொல்ல மாட்டார்கள்.
அதாவது
அரிய பயன்களை ஆராயும் அறிவுடையவர்கள் மிகப் பயனில்லாத சொற்களைச் சொல்ல மாட்டார்கள்.
பயனில சொல்லாமை அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்
“பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்“.
இதில்
‘பொருள்தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார்‘
இதன் பொருள்
பயனற்ற சொற்களை மறந்தும் சொல்ல மாட்டார்
அடுத்து
‘மருள்தீர்ந்த மாசறு காட்சி யவர்‘
இதன் பொருள்
மயக்கமற்ற தூய அறிவுடைய பெரியோர்கள்
அதாவது
மயக்கமற்ற தூய அறிவுடைய பெரியோர்கள் பயனற்ற சொற்களை மறந்தும் சொல்ல மாட்டார்.
பயனில சொல்லாமை அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்
“சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்“.
இதில்
‘சொல்லுக சொல்லிற் பயனுடைய‘
இதன் பொருள்
சொற்கள் பலவற்றிலும் பயனுடைய சொற்களை மட்டும் சொல்ல வேண்டும்
அடுத்து
‘சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்’
இதன் விளக்கம்
பயனற்ற சொற்களைச் சொல்ல வேண்டாம்.
அதாவது
சொற்கள் பலவற்றிலும் பயனுடைய சொற்களை மட்டும் சொல்ல வேண்டும். பயனற்ற சொற்களைச் சொல்ல வேண்டாம்.
பயனில சொல்லாமை அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு பயனில சொல்லாமை முடிவடைந்தது. அடுத்த பகுதியில் நாம் பாரக்கப் போகும் அதிகாரம் தீவினையச்சம்.
நன்றி! வணக்கம்!