ஹிதோபதேசம்
இதற்கு முன் தமனக்கா சொன்ன காகம் பாம்பு கதையைக் கேட்டிருப்பீர்கள். நண்பர்களான சிங்கம், காளை மாடு இந்த இரண்டையும் தந்திரமாகப் பிரிக்கச் சரியான திட்டம் போட்டால் சுலபமாகச் செய்யமுடியும் என்று தமனக்கா சொன்னது. இந்த பகுதியில் தமனக்கா எப்படி தந்திரமாகச் சிங்கத்திடம் பேசி அதன் மனதை மாற்றுகிறதென்று பார்ப்போம்.
நட்பைப் பிரித்தல்
நல்லா யோசனை செய்து ஒரு முடிவெடுத்து தமனக்கா சிங்கராஜா பிங்கலிகாவுக்கு
முன் போய் குனிந்து வணங்கி ராஜா மேல் வைத்திருக்கும் மரியாதையைச் சிங்கத்துக்குக் காட்டியது.
“மகாராஜா! எனக்கு ஒரு முக்கியமான செய்தி கிடைத்தது. உங்களுக்கு அதைத் தெரியப் படுத்தத்தான் இப்போது இங்கே வந்திருக்கிறேன். இதை உங்களிடம் சொல்லாமல் இருக்க முடியாது. உங்களுடைய நன்மைக்காக இதைச் சொல்லித்தான் ஆகவேண்டும். சொல்லாமல் இருந்தால் நான் உங்களுக்குத் துரோகம் செய்த மாதிரி இருக்கும்” தமனக்கா சொன்னதை பிங்கலிகா உன்னிப்பாக கேட்டது.
எல்லாம் உங்கள் நன்மைக்குத்தான் சொல்கிறேன் ராஜா. உங்களுக்கேத் தெரியாமல் உங்களுடைய செயல்கள் உங்களுக்கு ஆபத்தைத் தரலாம். இல்லை சரியான சமயத்தில் சரியான முடிவெடுக்காமல் இருக்கலாம். நீங்களோ அதிகாரம் உள்ள ராஜா. என்ன முடிவு வேண்டுமானாலும் நீங்க எடுக்கலாம். ஆனால் நாங்களோ மந்திரிகள். எங்களுடைய முடிவுகள் எங்கள் உயிரே போனாலும் உங்கள் பாதுகாப்பைச் சுற்றித்தான் இருக்கும். நான் உங்களிடம் இப்போது சொல்லப்போவதால் எனக்கு ஆபத்தும் வரலாம். என்னை மந்திரிப் பதவியிலிருந்து நீக்கினாலும் உங்களிடம் இந்த விஷயத்தைச் சொல்வது என் கடமை” தமனக்கா சொல்லச் சொல்ல பிங்கலிகா யோசிக்க ஆரம்பித்தது.
அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்தானே. பிங்கலிகா தமனக்கவை உள்ளே கூப்பிட்டுப் “பயப்படாதே! என்ன நடந்தது அப்படி? நீ என்ன கேள்விப்பட்டாய்?நிதானமாகச் சொல்” என்றது. “ராஜா! நான் சொல்லப்போவதெல்லாம் என் காதில் விழுந்ததுதான். நானே சொல்லவில்லை. எப்படி உங்களிடம் சொல்வதென்று தெரியலை. ராஜா! காடு முழுவதும் சஞ்ஜீவாகாவைப் பற்றித்தான் பேசிக்கொள்கிறார்கள். அது உங்கள் முதுகுக்குப் பின்னாடி நிறைய வேலைகள் செய்வதாகப் பேசிக்கொள்கிறார்கள். உங்களைத் துரத்தி விட்டு அதுவே ராஜாவாக முயற்சி செய்கிறதாம்” தமனக்கா சொல்லும்போது ஒரு தடவை பிங்கலிகாவை நோட்டம் விட்டது.
“மந்திரிகளான எங்களை எல்லாம் வேலையை விட்டு அனுப்பிவிட்டு சஞ்ஜீவிகாவை மட்டும் உங்கள் பக்கத்தில் நம்பிக்கையா வைத்திருக்கிறீர்கள்.. உங்களுக்கு இணையாகவும் வைத்திருக்கிறீர்கள். ஆனால் இந்த காட்டுக்கு ஒரு ராஜாதானே இருக்க முடியும். உங்கள் இரண்டு பேருக்குள் யார் ராஜானு குழப்பம் வராதா? சஞ்ஜீவிகா போல் ஒருவரை மந்திரியாக்கி தலைக்கு மேல் தூக்கி வைத்துக்கொண்டால் என்ன நடக்கும்? அந்த மந்திரி ஏதோ தனக்கு மட்டும்தான் எல்லா பொறுப்பும் மரியாதையும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கமாட்டான்? கொஞ்சக் கொஞ்சமா உங்களிடம் இருந்து பொறுப்புகளைப் பிடுங்க மாட்டானா என்ன?”
“இவ்வளவு செய்த சஞ்ஜீவிகா உங்களைத் துரத்தி விட்டு அதுவே ராஜாவாக முயலாதா என்ன? நம் முன்னோர்கள் ஒன்று சொல்வார்கள். கெட்டுப்போன உணவு, சொத்தையான பல், நம்பிக்கை துரோகம் செய்த மந்திரி இந்த மூன்றையும் கையோடு பிடுங்கி ஒழிக்கவேண்டும். அப்படியில்லாமல் எல்லாம் தெரிந்தும் இந்த மூன்றையும் நம்மிடம் வைத்துக்கொண்டால் வலியும் வேதனையும்தான் மிஞ்சும்.”
“எல்லாப் பொறுப்புகளையும் சஞ்ஜீவிகாவுக்கே கொடுத்துவிட்டீர்கள். சஞ்ஜீவிகாவுக்கு ஏதாவது நடந்தால் உங்களால் என்ன செய்யமுடியும்? தனியாக யாரும் துணையில்லாமல் திண்டாடுவீர்கள். ராஜா உங்களுக்குத் தெரியுமா? சஞ்ஜீவிகா அது என்ன நினைக்கிறதோ அதை மட்டும் தான் செய்யும். நீங்கச் சொல்வதைக் கூட அலட்சியம் செய்யும். இதெல்லாம் உங்களிடம் சொல்வது என்னுடைய கடமை. இனி என்ன நடக்க வேண்டுமோ நீங்கதான் முடிவெடுக்கவேண்டும். நீங்கள் தானே ராஜா!” தமனக்கா எச்சரிக்கையோடு சொன்னது.
பிங்கலிகாவுக்கு குழப்பம் ஏமாற்றம். “நான் ஏமாந்துவிட்டேனோ! தமனக்கா! நீ என்னுடைய நல்லதுக்குத்தான் சொல்கிறாய் என்று புரிகிறது எனககு. நானும் சஞ்ஜீவிகாவும் நல்ல நண்பர்கள். ஒருவேளை எனக்குத் தெரியாமல் ஏதாவது செய்திருந்தால்கூட என்னால் அவனை விட்டுப் பிரிய முடியாது. நாங்கள் எப்படிப் பழகியிருக்கிறோம் தெரியுமா? எவ்வளவு இனிமையான நாட்கள் அவை தெரியுமா? ஏதோ தெரியாமல் செய்துவிட்டான். மன்னித்து விட்டுவிட வேண்டியதுதான்.”
“உடம்பில் எங்கேயாவது பிரச்சனை வந்தால் அந்த பாகத்தை வெட்டிப் போடுகிறோமா என்ன? நமக்குப் பிடித்தவர்கள் தப்பு செய்யும்போது மன்னித்து விட்டுவிடனும். நெருப்பு வீட்டை எரித்திடுமென்று அதை உபயோகப்படுத்தாமல் இருக்கிறோமா என்ன?”
சிங்கம் சொல்ல தமனக்கா அதை எதிர்பார்க்கவில்லை. சமாளித்துக்கொண்டு “ஓ ராஜா! அதுதானே பிரச்சனையே! ராஜாவுக்குப் பிடித்தவர்களிடம் தான் மகாலட்சுமியும் இருப்பாள். அது மகனோ, நண்பனோ இல்லை வெளியில் உள்ளவரோ யாராயிருந்தாலும் சரி. உங்கள் நன்மைக்கும் பாதுகாப்புக்கும் நான் சொல்வதைக் கேளுங்கள் ராஜா. நான் சொல்வது உங்களுக்குப் பிடிக்காமலும் போகலாம். உங்களுக்கு நம்பிக்கையா வேலைசெய்தவர்களை எல்லாம் அனுப்பிவிட்டீர்கள். அந்த இடத்தில் புதிதாக வெளியிலிருந்து வந்த மாட்டை எல்லா அதிகாரமும் கொடுத்து வைத்திருக்கிறீர்கள். இதற்குப் பின் பிரச்சனைகள் வராதென்று எப்படி நம்புகிறீர்கள்?” தமனக்கா சொன்னது
“சஞ்ஜீவீகா எப்போது இவ்வளவு சுயநலமாக மாறியது? எப்படி எனக்கு அதனால் துரோகம் செய்ய முடியும்? என்னால் நம்பமுடியலை! நான் அவனைத் தாக்கமாட்டேன் என்று சொல்லியிருக்கிறேனே! அவனுக்கு வேண்டிய பாதுகாப்பும் கொடுக்கிறேனே! அப்படியிருந்துமா இப்படிச் செய்கிறான்?” பிங்கலிகா ஏமாற்றத்தோட சொன்னதைக் கேட்ட தமனக்காவுக்கு அதனுடைய முயற்சி வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது, எப்படியாவது நண்பர்களைப் பிரிக்க முடியுமென்று நம்பிக்கையும் வந்தது.
“என்ன செய்யமுடியும் சொல்லுங்கள் ராஜா! தீய எண்ணம் உடையவர்களை மாற்றுவது கஷ்டம். என்னதான் நாம் அவர்களை மரியாதையோடும் மதிப்போடும் நடத்தினாலும் அவர்களுடைய உண்மையான குணத்தை மாற்றமுடியுமா? நாய் வாலை நிமிர்த்த முடியுமா? ம்ஹும் அது நடக்காதே?”
“அதுமாதிரி தான் சில பேரை என்னதான் உயர்த்தி வைத்தாலும் அவர்கள் பிறவிக் குணம் மாறவே மாறாது. விஷச்செடிக்கு தண்ணீரில் அமிழ்தத்தைக் கலந்து ஊத்தினால் அந்த விஷச்செடி இனிமையான பழங்களையா கொடுக்கும்? இல்லையே? வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்றால் சில கசப்பான உண்மைகளைச் சொல்லத்தான் வேண்டும்.”
“நல்ல எண்ணம் கொண்டவர்கள் அதைத்தான் செய்வார்கள். மனதில் தீய எண்ணம் உள்ளவர்கள் உண்மைகளை வெளியில் வரவிடமாட்டார்கள்.உங்களுக்கு நல்லது நினைக்கிறவர்கள்தான் எது நடந்தாலும் உண்மை கசப்பாக இருந்தாலும் தைரியமாக எடுத்துச் சொல்வார்கள். நானும் உங்களுக்கு வரும் ஆபத்தைச் சொல்லத்தான் உங்கள் முன்னாடி வந்து பேசுகிறேன். உங்களை சஞ்ஜீவிகாவிடம் இருந்து நீங்கதான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.”
“என்னுடைய கடமை நான் சொல்லிவிட்டேன். இதைக் கேட்டு உங்களுக்குக் கோபம் வரலாம். நான் ஏன் பொய் சொல்லவேண்டும்? உங்கள் இரண்டு பேரையும் பிரித்தால் எனக்கு என்ன நன்மை? மந்திரிகளின் அறிவுரைகளைக் கேட்காமல் தன்னிச்சையாகச் செயல்படும் ராஜா அவனுடைய முடிவை அவனே தேடிக்கொள்வான். அப்புறம் சுத்தி உள்ளவர்களைப் பழி சொல்ல ஆரம்பிப்பான்” தமனக்கா சொல்லிவிட்டு மறுபடியும் பிங்கலிகாவை நோட்டம் விட்டது.
இதைக் கேட்ட பிங்கலிகாவுக்கு கோபம் வந்தது. சஞ்ஜீவீகாவையும் கூப்பிட்டு ஏன் இப்படிச் செய்கிறது என்று கேட்கவேண்டும் முதலில். தமனக்கா சொன்னதை நம்பி அதைத் தண்டிக்க முடியாது. அது சரியுமில்லை. எது உண்மை என்று தெரியாமல் தண்டிக்க ஆரம்பித்தால் அது நாட்டுக்கு நல்லதில்லை.அது தர்மமும் இல்லை. பாம்பின் வாயில் கைவைத்தால் எவ்வளவு ஆபத்தோ அதேபோல்தான் இதுவும். தமனக்காவைப் பாரத்து ” நான் சஞ்ஜீவிகாவைக் கூப்பிட்டு இப்படி நம்பிக்கைத் துரோகம் செய்வது தப்பு என்று ஏன் சொல்லக்கூடாது?” என்று கேட்டது.
அதை விரும்பாத தமனக்கா அவசர அவசரமாக “வேண்டாம்! வேண்டாம்! அது நல்லதுக்கில்லை. சஞ்ஜீவிகாவுக்கு எல்லாம் புரிந்துவிடும் அப்புறம் அதற்கு ஒரு பதிலையும் தயார் செய்துவிடும். விதையை விதைக்காமலிருந்தால் அது மரமாக வளர்ந்து காய் கனிகள் தராது. சீக்கிரமாக இதற்கு நீங்க ஒரு நடவடிக்கை எடுத்தாகவேண்டும். எந்த ஒரு ரகசியத்தையும் நிறைய நாட்கள் வைத்துக்கொள்ளக்கூடாது. எப்படியோ! அது எல்லோருக்கும் ஒரு நாள் தெரிய வரும். வெளியில் தெரிந்தால் என்ன திட்டம் போட்டாலும் அதற்குப் பயன் இருக்காது. சஞ்ஜீவிகா செய்யும் துரோகமோ தெரிந்து விட்டதே. அதைப் பேசி சரி செய்து மறுபடியும் நட்பாக இருந்தால் அதுதான் பெரிய தவறு. துரோகிகளை நம்பவே கூடாது.பிரச்சனைகள்தான் வரும்.சஞ்ஜீவீகா உங்களைக் கொன்றாலும் கொன்றுவிடும்” தமனக்கா கவனமாகச் சிங்கத்தின் கோபத்தைத் தூண்டிவிட்டது.
ஆனாலும் சிங்கத்துக்குச் சந்தேகம் போகவில்லை. “அப்படி என்ன தான் சஞ்ஜீவிகாவால் செய்யமுடியும்” கேட்டது.
“அது என்ன செய்யுமென்று எதுவுமே செல்லமுடியாது.உங்கள் இரண்டு பேருக்குள் யாருக்கு பலம் அதிகமென்று சொல்ல முடியாதே? சஞ்ஜீவிகாவைப் பற்றி முழுவதும் தெரியாமல் அதன் பலத்தை எப்படி அறிவது? உருவத்தில் சிறியதாக இருக்கும் ஆட்காட்டிப் பறவை ஒரு பெரிய கடலையே அதனுடைய புத்தியால் திகைக்கவைத்தது தெரியுமா?” தமனக்கா சொல்ல பிங்கலிகாவுக்கு அது என்ன சொல்ல வருகிறது என்று புரியவில்லை.
“ஆட்காட்டிப் பறவையா? அது எப்படி கடலை வென்றது” சிங்கம் கேட்டது.
தமனக்கா ஆட்காட்டிப் பறவை, கடல் கதையைச் சொல்ல ஆரம்பித்தது.
தொடரின் இந்த பகுதி இதோடு முடிந்தது. அடுத்த பகுதியில் ஆள்காட்டிப் பறவை என்ன செய்தது என்று மறக்காமல் வந்து கேளுங்கள்.
நன்றி! வணக்கம்!