இது வரை திருக்குறளிலிருந்து 26 அதிகாரங்களைப் பார்த்தோம். இந்த பகுதியில் திருக்குறளின் 27வது அதிகாரமான தவத்திலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பார்க்கலாம்.
தவம் என்பது உடலையும் மனதையும் ஒருங்கிணைத்து பற்றை நீக்கி நோன்பு இருப்பது. முயற்சி, கடமை இந்த இரண்டையும் தவம் என்கிறார் வள்ளுவர்.
தவம் 1
- முதல் குறள்.
“உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு”.
இதில்
‘உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே‘
இதன் பொருள்
தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதும் மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருப்பதே ஆகும்.
அடுத்து
‘தவத்திற்கு உரு‘
இதன் பொருள்
தவத்தின் வடிவம் என்பது.
அதாவது
தவத்தின் வடிவம் என்பது தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதும் மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருப்பதே ஆகும்.
தவம் அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது“.
இதில்
‘தவமும் தவமுடையார்க்கு ஆகும்‘
இதன் பொருள்
முற்பிறப்பில் தவத் தன்மை இருந்தவர்களுக்கே தவத்தை இப்பிறவியில் மேற்கொள்ள முடியும்.
அடுத்து
‘அவம்அதனை அஃதிலார் மேற்கொள் வது‘
இதன் பொருள்
அத்தவப் பிறவி இல்லாதவர்கள் தவம் செய்ய முயல்வது வீண் முயற்சி ஆகும்.
அதாவது
முற்பிறப்பில் தவத் தன்மை இருந்தவர்களுக்கே தவத்தை இப்பிறவியில் மேற்கொள்ள முடியும். அத்தவப் பிறவி இல்லாதவர்கள் தவம் செய்ய முயல்வது வீண் முயற்சி ஆகும்.
தவம் அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.
- மூன்றாவது குறள்.
“துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்“.
இதில்
‘துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி தவம் மறந்தார்கொல்‘
இதன் பொருள்
துறந்தோர்க்கு உணவு முதலியவை கொடுத்து உதவ விரும்பி தவம் செய்வதை மறந்தார்கள் போலும்.
அடுத்து
‘மற்றையவர்கள்’
இல்லறத்தினை மேற்கொண்டவர்கள்.
அதாவது
இல்லறத்தினை மேற்கொண்டவர்கள் துறந்தோர்க்கு உணவு முதலியவை கொடுத்து உதவ விரும்பி தவம் செய்வதை மறந்தார்கள் போலும்.
தவம் அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.
- நான்காவது குறள்.
“ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்“.
இதில்
‘ஒன்னார்த் தெறலும்’
இதன் பொருள்
அறத்திற்கு எதிராக இருக்கும் பகைவரை அழித்தலும்.
அடுத்து
‘உவந்தாரை ஆக்கலும்‘
இதன் பொருள்
நன்மை செய்யும் நல்லவர்களை உயர்த்துவதும்.
அடுத்து
‘எண்ணின் தவத்தான் வரும்’
நினைத்தவுடன் தவத்தின் வலிமையால் செய்ய முடியும்.
அதாவது
அறத்திற்கு எதிராக இருக்கும் பகைவரை அழித்தலும், நன்மை செய்யும் நல்லவர்களை உயர்த்துவதும் நினைத்தவுடன் தவத்தின் வலிமையால் செய்ய முடியும்.
தவம் அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள்.
“வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்“.
இதில்
‘வேண்டிய வேண்டியாங் கெய்தலால்‘
இதன் பொருள்
விரும்பிய பயன்களை விரும்பிய படியே பெறலாம். அதனால்
அடுத்து
‘செய்தவம் ஈண்டு முயலப் படும்‘
இப்பிறப்பிலும் தவம் முயன்று செய்யப்படும்.
அதாவது
விரும்பிய பயன்களை விரும்பிய படியே பெறலாம். அதனால் இப்பிறப்பிலும் தவம் முயன்று செய்யப்படும்.
தவம் அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு இந்த பகுதி முடிந்தது. அடுத்து உள்ள ஐந்து குறள்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
நன்றி! வணக்கம்!