சிறுகதை (short story in Tamil)
வணக்கம் நவராத்திரி கொண்டாடி முடிச்சிருப்பீங்க. இப்ப யானையுடைய அறிவையும் நரியுடைய தந்திர புத்தியையும் பத்தி ஒரு கதையை கேட்கப் போறீங்க.
தந்திரம் மிக நல்ல தந்திரம்
விடுமுறைக்கு வந்த தரன், சமன்யூ, ஜோதியோடு நல்ல விளையாடிட்டு வெளியில் போய் பொழுது போக்கிட்டிருந்தாங்க. அப்படி இருந்தும் ஒரு நாள் “பாட்டி நாங்க இன்னைக்கி எங்கேயும் போகலை. வீட்டிலேயே விளையாடிட்டு இருக்கிறோம். உங்களுக்கு ஏதாவது கதை தெரிந்தால் சொல்லுங்கள் அதுகூட எங்களுக்கு சுவாரசியமாக இருக்கும்” ஜோதியும் தரனும் சரஸ்வதி பாட்டியிடம் சொன்னார்கள். “அதுக்கென்ன, மதியம் சாப்பிட்டதுக்குப்புறம் வாங்க. நினைவில் உள்ள கதைகளை உங்களுக்குச் சொல்கிறேன்”. அவங்கள எப்படியாவது சாப்பிட வைக்கனும்னு பாட்டிக்கு ஆசை. கதை கேட்கப் போகிற ஆர்வத்தில் மடமடனு சாப்பிட்டு முடிச்சாங்கா. “பாட்டி நாங்க கதை கேட்கத் தயார்” தரன், சாமா, ஜோதி மூன்று பேரும் பாட்டிய சுத்தி உட்கார்ந்தார்கள்.
பாட்டி ஆரம்பிச்சாங்க!
“ஒரு பெரிய காட்டில், காட்டின் ராஜாவான சிங்கம் இருந்தது. வீரம், ஆற்றல் எல்லாம் அந்த சிங்கத்துக்கிட்ட இருந்தது. ஒர் அறிவுக்கூர்மை உள்ள யானைதான் அதோட மந்திரி. அந்த காட்டில் நல்ல அடர்ந்த மரங்கள், அருவிகள், கனிகள், பூக்கள் இருந்தன. நல்ல செழிப்பான காடு. அங்க உள்ள மிருகங்கள் அந்த சிங்க ராஜாவுக்குக் கப்பம் கட்டுகிற மாதிரி மாமிசங்களைக் கொண்டுவந்து தரும். ஒரு நாள் அந்த சிங்கம் ஒரு குன்று மேல் உட்கார்ந்து கொண்டு அதோட மந்திரி யானையை பத்து “இந்த காட்டிலேயே அறிவுள்ள விலங்கு எதுனு” கேட்டது. சிங்கராஜாவோட பரிவாரங்களான புலி, கரடி, காட்டுப்பன்றி, குரங்குகள் சுத்தி நின்று கவனமா கேட்டுக்கொண்டிருந்தன.
யானை சொன்னது “அரசே யானைக்குத்தான் அறிவு அதிகம் உண்டு. மனிதர்கள் காட்டில் யானையை வைத்து பல தொழில்கள் செய்து பயனடையாறாங்க. உலகத்தைத் தாங்கும் எட்டு திசைகளில் ஐராவதம் என்ற யானையும் உண்டு. ஒரு காரியம் செய்ய அறிவு வேண்டும். அறிவிருந்தால்தான் அந்த காரியத்தை தடங்கலின்றி செய்ய முடியும். அதனால்தான் கணபதிக்கு யானை முகம் இருக்கிறது. காரியம் செய்யப் புறப்படும் முன் விநாயகரை வணங்குவது அறிவை வணங்குவது போல்தான். காளஹஸ்தி, திருவானைக்காவல் புராணம், கஜேந்திரமோட்சம், கஜலக்ஷ்மி உருவங்கள் எல்லாம் யானையின் அறிவாற்றலைப் போற்றுகிறது. கஜமென்றால் யானை, லக்ஷமினா செல்வம். அறிவின் உதவியால் செல்வம் பெருகும்”.
அப்போது சிங்கராஜா “ யானையே உன்பேச்சு ஆழ்ந்த அறிவோடு இருக்கிறது. யானை அறிவுள்ள விலங்குனு உன் சொல்லே உதாரணம். ஆனால் குள்ள நாரிதான் அறிவுள்ளதென்று சிலர் சொல்கிறார்களே” யானையை பார்த்துக் கேட்டது. மந்திரி யானை “ குள்ள நரி அறிவுள்ள விலங்கு இல்லை. அறிவுக்கு அடையாளம் அடக்கம். யானை அடக்கமாய் ஆண்டவன் முன் வீதியில் வரும். அரசனை அம்பாரியில் சுமக்கும். யானைப்படை என்று உண்டு. யானை அரசன் இல்லாத நாட்டில் அரசனைத் தேர்ந்தெடுக்கும். குள்ள நரிக்குத் தந்திரமும் குயுக்தியுமே உண்டு. அடக்கம் கிடையாது. எல்லா மிருகங்களையும் பழக்கி வித்தை காட்டும் சர்க்கஸில் கூட குள்ள நரியைப் பார்க்க முடியாது. தந்திரத்தில் பேர் போன குள்ள நரியை அறிவுள்ளதென்று சொல்லக்கூடாது” சொன்னது.
சிங்க ராஜாவுக்கு குள்ள நரியுடைய தந்திரத்தைக் கண்டறிய ஆசை வந்திடுச்சு. யானை, புலி, கரடி, முயல், எலி, ஓநாய், நரி, குரங்கு, காட்டெருமை இப்படி எல்லா மிருகங்களையும் ஓர் இடத்தில் கூட்டியது. சின்ன எலியை கையில் எடுத்து “ இது என்ன விலங்கு”னு கேட்டது. நரியைத்தவிர எல்லா விலங்குகளும் தனித்தனியாய் அது எலியென்று” சொன்னது. குள்ள நரிகள் மட்டும் “அதை எலியென்று சொல்வார்கள்” என்றன. ஒரு நரிகூட இது எலியென்று சொல்லாமல் மத்தவங்க சொல்கிறமாதிரி சொன்ன தந்திரத்தை சிங்கம் கவனித்தது. நரிகளுடைய தந்திரத்தை கவனித்து வியந்து ஒரு நரியைக் கூப்பிட்டு சிங்கம் சொன்னது “இந்த எலியை இத்தனை நாள் உனக்குத் தெரியவே தெரியாதா? கவனித்ததே இல்லையா? எலியென்று திட்டவட்டமா சொல்லாமல் ஜோதிடம் சொல்வது போல் சொல்கிறாயே. உனக்கு ஒரு மாதம் தவணை தருகிறேன். உன் இனத்தாரோடு ஆராய்ந்து இது என்ன விலங்குனு திட்டவட்டமா வந்து சொல்லு” கட்டளை போட்டது.
எல்லா நரிகளும் ஒரு வட்ட மேஜை கூட்டம் போட்டது. “ என்ன காரணத்துக்காக சிங்கராஜா கேட்கிறாரோ? அவருக்குத் தெரியாதா? நாம் ஏன் சிக்கிக்கனும்? பிறர் அதை எலியென்றுதான் சொல்றாங்கனு சொன்ன நாம பொறுப்பாகமாட்டோம் இல்லையா? அப்ப நமக்கு எந்த ஆபத்தும் வராது” இப்படி ஒவ்வொரு நரியும் யோசித்தது. வெறும் எலி என்று சொன்னால் என்ன ஆபத்த வருமோனு ஒரு மாதம் கழித்து நரி சிங்கத்தின் குகை தர்பாருக்கு வந்து “அரசே எல்லோரும் ஆலோசித்தோம். எலியென்று உங்க கிட்ட சொல்லச்சொன்னார்கள்” என்றது.
ஒரு மாதம் தவணை தந்தும் நரியின் தந்திரமான பதிலைக்கேட்டு நகைத்து யானை சொன்னது உண்மைதான் . நரி தந்திரசாலியே எண்ணி “அது சரி நீ என்ன நினைக்கிற முதலில் அதை சொல்லு” சிங்கம் கேட்டது. “அரசே தாங்கள் எப்படி நினைக்கிறீர்களோ அப்படியே இந்த அடியேனும் நினைக்கிறேன்” நரித் தந்திரமா பதில் சொன்னது. சிங்கம் அதன் குயுக்தி பார்த்து வியந்து “நீ போகலாம்” சொல்லி அதை அனுப்பிடிச்சு. தன் மந்திரி மதியூகி யானையின் அறிவையும் தெளிவையும் நினச்சு சந்தோசப்பட்டது.”
சரஸ்வதி பாட்டி கதையை முடித்துவிட்டு “கேட்டீர்களா யானையுடைய அறிவையும் நரியுடைய தந்திர புத்தியையும். விலங்குகளுக்கும் அறிவு ,தந்திரம், திறமை எல்லாம் உண்டு. விலங்குளோட நடவடிக்கைகளை உத்து கவனிங்க. நிறைய விஷயங்கள் தெரிய வரும்” அறிவுரையும் சொன்னார்கள்.
இந்த கதை இதோடு முடிந்தது. நன்றி! வணக்கம்!
“