ஹிதோபதேசம்
போன வாரம் சொன்ன கதையில் சிங்கராஜா தண்ணீர் குடிக்கப் போனபோது ஒரு பலமான சத்தத்தைக் கேட்டுப் பயந்து போய்விட்டது என்று தமனக்கா சந்தேகப்பட்டது. பாவம்! சிங்கத்துக்கு அந்த சத்தம் எருமைமாட்டுடைய எக்காளமென்று தெரியாது. தமனக்கா அப்படி சத்தம் போட்டது யார் என்று கண்டுபிடித்து, அதற்கு ஒரு தீர்வும் கிடைக்க உதவி செய்ய முடியுமென்று சிங்கத்துக்கு ஆலோசனை சொன்னது.
சிங்கமும் பூனையும்
கரட்டக்காவுக்கு தமனக்கா ஆபத்தில் மாட்டிக்கொள்ளுமோ என்று பயம் வந்தது. தமனக்கா எருமை மாட்டின் எக்காளம்தான் அந்த சத்தம் என்றும் எந்த அரக்கனும் அங்கே இல்லை என்றும் குறும்பா சிரித்துக்கொண்டே சொன்னது. அதைச் சிங்கத்திடம் சொல்லாமல் சிங்கத்துக்கு உதவுவது போல் நடித்தால் சிங்கம் எப்போதும் அவர்களை நம்பி சலுகைகள் கொடுக்கும் என்று தமனக்கா சொன்னது.
உண்மையைச் சொன்னால் சிங்கத்துக்கு அவர்களுடைய உதவி தேவைப்படாது. அதனால் அவர்களுக்கும் சிங்கம் ஒன்றுக்கு உதவிய பூனையின் நிலைதான் வரும் என்று எச்சரித்தது. தமனக்கா சொன்ன பூனையின் கதைதான் இந்த பகுதியில் நீங்கள் கேட்கப்போகும் கதை.
சிங்கமும் பூனையும்
பாரத தேசத்தின் வடக்கில் உள்ள அற்புதசிகரா என்ற மலை உச்சியில் உள்ள குகையில் மகாவிக்ரமா என்ற கொடூரமான சிங்கம் ஒன்று இருந்தது. அதற்கு அங்கே ஒரு பெரிய பிரச்சனை இருந்தது. அந்தப் பிரச்சனை என்ன தெரியுமா? அந்த குகைக்குள் ஒரு சுண்டெலி அதற்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருந்தது. எல்லாரும் பாரத்து பயப்படும் சிங்கத்திற்கு ஒரு சுண்டெலியால் அமைதி இல்லாமல் போய்விட்டது. அந்த சுண்டெலி சிங்கம் தூங்கும்போதெல்லாம் அதன் பிடரி மயிரைப் பிடித்து விளையாடும்.
சுண்டெலி சிங்கத்துடைய பிடரி மயிரைப் பிடித்து விளையாடும்போது சிங்கம் கோபமாக கர்ஜிக்கும். சுத்தி உள்ள விலங்குகள் அதன் கர்ஜனையைக் கேட்டுப் பயப்படும். ஆனால் இந்த சுண்டெலிக்கு மட்டும் பயமே இல்லை. சிங்கம் கர்ஜிக்க ஆரம்பித்த உடனே சுண்டெலி பொந்துக்குள் போய் ஒளிந்து கொள்ளும். சிங்கத்தால் அந்த சுண்டெலியை ஒன்றும் செய்ய முடியவில்லை. கோபத்தில் கர்ஜிக்க மட்டும்தான் அதனால் முடிந்தது. சுண்டெலியைக் கட்டுப்படுத்த முடியாமல் சிங்கம் தவித்தது.
“என் கர்ஜனைக்கு இந்த எலி பயப்படவில்லை. என்னால் அதன் தொல்லை தாங்க முடியவில்லை. தூங்கப்போனல் உடனே வந்து எனக்குத் தொல்லை கொடுக்க ஆரம்பிக்கிறது. அந்த சின்ன பொந்துக்குள் போய் ஒளிந்து கொண்டால் என்னால் எதுவும் செய்ய முடியாது. வேறு ஏதாவது திட்டம் போட்டு இந்த சுண்டெலியைப் பிடிக்க முயற்சி எடுக்கவேண்டும். ஒரு சின்ன, குட்டியா ஒரு விலங்கு வேண்டும் இந்த எலியை சமாளிக்க” என்று பக்கத்தில் உள்ள கிராமத்துக்குப் போய் ஒரு பூனையை வாங்கிக் கொண்டு வந்தது.
அந்த பூனையுடைய பெயர் ததிகர்ணா. ததிகர்ணாவுக்கு சிங்கத்தின் குகைக்கு வர விருப்பமில்லை. எங்கே அந்த சிங்கம் அதைச் சாப்பிட்டுவிடுமோ என்று ததிகர்ணாவுக்கு பயம். மகாவிக்ரமா ததிகர்ணாவிடம் அன்பாகப் பேசி சாப்பிடக் கொடுத்ததால் ததிகர்ணாவின் பயம் போய்விட்டது. ததிகர்ணாவிற்க்கு வாழ்க்கை பிரச்சனைகள் இல்லாமல் சுகமா போய்க்கொண்டிருந்தது. சாப்பாடோ ஒவ்வொருநாளும் பூனைக்குக் கஷ்டப்படாமல் கிடைத்தது.
ஆனால் எலிக்குத்தான் பிரச்சனையே! அந்த குகையில் ஒரு பூனை புதியதாக வந்திருக்கிறது என்று புரிந்தது. பொந்துக்குள் இருந்தால்கூட சுண்டெலியால் மோப்பம் பிடிக்க முடிந்தது. பொந்திலிருந்து வெளியில் வராமல் இருந்தது. சிங்கத்தால் பூனை வந்ததுக்குப் பின் எலியின் தொல்லை இல்லாமல் நன்றாக தூங்கமுடிந்தது. பாவம்! அந்த எலி எத்தனை நாட்கள் சாப்பிடாமல் இருக்க முடியும்? ஒரு நாள் பொந்திலிருந்து வெளியில் சாப்பிட வந்தது. அவ்வளவுதான்! எலியைப் பார்த்த பூனை லபக்கனு அதைப் பிடித்துச் சாப்பிட்டுவிட்டது. எலியின் தொல்லை இனிமேல் இல்லை.
ஆனால் பூனைக்குத்தான் பிரச்சனை ஆரம்பமானது. சிங்கத்துக்குப் பூனையின் உதவி இனிமேல் தேவை இல்லையே! பூனையைப் பற்றி அது கவலைப்படவில்லை. சாப்பாடும் கொடுக்கவில்லை. பூனைக்குச் சாப்பிட அங்கே வேறு எதுவும் கிடைக்கவும் இல்லை. இப்போது பூனைதான் சாப்பிடக் கிடைக்காமல் செத்துப் போனது.
“இதற்குத்தான் சிங்கம் நம்முடைய உதவி தேவை இல்லை என்று நினைக்கக் கூடாது. இல்லை என்றால் நமக்குத்தான் அழிவு” தமனக்கா கரட்டக்காவிடம் சொன்னது. “தமனக்கா! நிஜமாகவே நீ ரொம்ப புத்திசாலிதான்!”கரட்டக்கா சகோதரனைப் பாராட்டியது.
இரண்டு நரிகளும் காட்டுக்குள் சென்று சஞ்ஜீவிகாவைத் தேட ஆரம்பித்தன. தூரத்தில் சஞ்ஜீவிகாவைப் பார்த்ததும் தமனக்கா கரட்டக்காவின் காதில் முணுமுணுத்தது. அதன் பின் தமனக்கா மட்டும் தனியாக சஞ்ஜீவிகாவைப் பாரத்துப் பேசச் சென்றது.
“வணக்கம்! அதோ அந்த மரத்தடியில் இருப்பவர் தான் இந்தக் காட்டின் தளபதி. அவர்தான் உனக்கு ஒரு செய்தி சொல்ல என்னை அனுப்பியிருக்கின்றார்” தமனக்கா மரத்தடியில் கம்பீரமா உட்கார்ந்திருந்த கரட்டக்காவை காமித்து “எங்கள் ராஜா பிங்கலிகா இந்தக் காட்டைப் பாதுகாக்க அந்த தளபதியை நியமித்திருக்கிறார். உடனே வந்து எங்கள் தளபதியை நீ பார்க்க வேண்டும். வருவதற்கு விருப்பமில்லை என்றால் இங்கிருந்து நீ வெளியே போகவேண்டும். சொன்னதைச் செய்யவில்லை என்றால் உனக்கு இங்குப் பாதுகாப்பு கிடைக்காது.ராஜா என்ன செய்வாரோ தெரியாது” அதிகாரமாகச் சொன்னது.
சஞ்ஜீவிகா காட்டில் வாழ்ந்தது இல்லையே! மனிதர்களோடு வாழ்ந்துதான் அதற்குப் பழக்கம். தமனக்கா அதிகாரமாகச் சொன்னதை நம்பி மரத்தடியிலிருந்த கரட்டக்காவைப் நோக்கி வேகமாக வந்து குனிந்து வணக்கம் சொன்னது. நரிகள் எவ்வளவு தந்திரமா இருக்கிறது என்று தெரிகிறது இல்லையா? நடுக்கத்தோடு “ஐயா! நான் என்ன செய்யவேண்டும்?” கேட்டது. கரட்டக்கா திமிரா ” இந்த காட்டில் இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டால் எங்கள் சிங்கராஜாவைப் பாரத்து பணிந்து மரியாதை செய்யவேண்டும்” சொன்னது. சஞ்ஜீவிகாவுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஓரே பயம்! “நானா? நான் நான் சிங்கத்துக்கு முன்னாடி போய் சொல்லனுமா? பயமாக இருக்கிறதே! என் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம்?” சஞ்ஜீவிகா பயத்தோடு கேட்டது.
“செடி நாட்டின் ராஜா சிசுபாலனைக் கிருஷ்ணன் ஏன் புறக்கணித்தான்? சிங்கம் இடியின் சத்தத்தைக்கேட்டுக் கர்ஜிக்குமே தவிர நரி ஊளையிட்டால் கவலைப்படாது. எதற்கு? பெரிய புயல் வளைந்து நிற்கும் புல்லை ஒன்றும் செய்யாது. ஆனால் உயரமா வளர்ந்து நிற்கும் பனை மரத்தை ஏன் வேரோடு பிடுங்கிவிடும்? ஏன் என்றால் பலம் உள்ளவர்கள் அவர்களுக்கு இணையாக பலம் உள்ளவர்களோடு தான் சண்டைபோடுவார்கள்” கரட்டக்கா சொன்னது. மறைமுகமா சஞ்ஜீவிகாவுக்கு முக்கியத்துவம் எதுவும் இல்லை என்று நக்கலா சொன்னது
சஞ்ஜீவிகாவுக்கு சிங்கம் அதைப் பார்த்து பயப்படுதுனு எப்படித் தெரியும்? இரண்டு நரிகளும் சஞ்ஜீவிகாவைக கூட்டிக்கொண்டு சிங்கத்தைப் பார்க்கப் போனார்கள். சஞ்ஜீவிகாவை நேராகக் குகைக்குக் கூட்டிக்கொண்டு போகாமல் கொஞ்சம் தூரத்திலேயே இருக்கச் சொன்னார்கள். பதட்டமாகா இருந்த சிங்கம் இரண்டு நரிகளையும் பார்த்ததும் “அந்த புது விலங்கைக் கண்டுபிடிச்சாச்சா?” கேட்டதும் “ஆமாம் மகாராஜா! நீங்கள் சந்தேகப்பட்டது சரிதான். அது ஒரு பெரிய ராட்ஷச விலங்குதான். உங்களோடு அது ஏதோ பேசனுமாம்” தமனக்கா பயந்த மாதிரி வேஷம் போட்டது.
“அதைப் பார்த்துப் பேசும்முன் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே நீங்க இருக்கவேண்டும். அது என்ன சத்தம் போட்டாலும் பயப்படாதீர்கள். சத்தம் எங்கிருந்து வந்தாலும் எதனால் அந்த சத்தம் வருகிறது என்று பார்க்கவேண்டும். பயந்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை. இல்லை என்றால் ஓர் ஊரில் எங்கிருந்தோ மணியின் சத்தம் வந்ததும் அது எதனால் வந்ததென்று ஒரு பெண் கண்டுபிடித்து அதற்கு அவளுக்குத் தகுந்த சன்மானமும் கிடைத்த கதை மாதிரி நடக்கும்” தமனக்கா எச்சரித்தது. இப்படி தமனக்கா பேச்சை மாற்றிப் பேசியதும் சிங்கத்துக்கு ஒன்றும் புரியவில்லை. “அது என்ன மணி? என்ன சன்மானம்? இது போல் நான் எதுவும் கேள்விப்பட்டதில்லையே!” சிங்கம் கேட்க தமனக்கா அந்த மணியின் கதையைச் சொல்ல ஆரம்பித்தது.
மணியும் குரங்கும்
ஶ்ரீபர்வதை மலை மேல் ப்ரம்மபுரா என்ற ஊர் ஒன்று இருந்தது. அந்த மலைமேல் கண்டகர்ணா என்ற அரக்கன் வசிப்பதாக அந்த ஊர் மக்கள் நம்பினார்கள். ஒரு நாள் திருடன் ஒருவன் பெரிய மணி ஒன்றைத் திருடி பக்கத்தில் உள்ள காட்டுக்குள் போய் பதுங்கி விட்டான். அந்த காட்டுக்குள் இருந்த ஒரு புலி அவனை அடித்துக் கொன்று சாப்பிட்டு விட்டது.அந்த பெரிய மணியோ கேட்பார் இல்லாமல் மண்ணிலேயே கிடந்தது. அந்தப் பக்கம் வந்த ஒரு குரங்கு கூட்டம் அந்த மணியைப் பார்த்து அதை எடுத்து அசைத்ததும் வந்த சத்தத்தைக் கேட்டு அந்த மணியை மறுபடியும் மறுபடியும் அடிக்க ஆரம்பித்தன.
கற்பனைக் கதைகள் வேகமாக பரவுமே! அப்படித்தான் அந்த மலையில் உள்ள அரக்கன் அந்த திருடனை அடித்துக் கொன்றதாகவும், கொல்வதற்கு முன் மணியை அடித்துக் கொண்டு வருவதாகவும் கதை பரவ ஆரம்பித்தது. இந்த வதந்தியைக் கேட்டு அங்கு வாழும் மக்களுக்கு ஒரே பயம் அந்த ஊரிலிருந்து வேறு ஊர்களுக்குப் போக ஆரம்பித்தார்கள். எல்லாரும் போய்விட்டாலும் கராளா என்ற பெண் மட்டும் அந்த ஊரை விட்டுப் போகவில்லை.
கராளா அந்த மணி சத்தம் வந்த முறையை நன்றாகக் கவனித்தாள்.திடீரென்று வரும். திடீரென்று நின்று போகும். அப்போது அவளுக்கு ஓர் எண்ணம் வந்தது. காட்டிலிருந்துதான் மணி சத்தம் வருகிறது. குரங்குகள் அங்கே நிறைய இருக்கும். மணி சத்தத்துக்கும் குரங்குகளுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கும் என்று அவளுக்குப் புரிந்தது. அந்த குரங்குகள்தான் மணியை அடித்திருக்க வேண்டும். அந்த மணி சத்தம் எந்த திசையிலிருந்து வந்ததோ அங்கே போய் பார்த்தாள். அவள் நினைத்தது போலவே அங்கே குரங்குகள் தான் அந்த மணியை அடித்தன.
கராளா அந்த உண்மையை அந்த கிராமத்து மக்களிடம் சொல்லவில்லை. நேராகா ப்ரம்மபுராவின் ராஜாவைப் பார்த்து “மகாராஜா! மலைமேல் உள்ள அரக்கனை விரட்ட என்னால் முடியும். அதற்கு எனக்குக் கொஞ்சம் பணம் வேண்டும். நீங்க தான் கொடுத்து உதவ வேண்டும்” கோரிக்கையைச் சொன்னாள்.ராஜாவுக்கு அவளுடைய தைரியத்தைப் பாரத்து அப்பா! இப்படி தைரியமான ஒருத்தியால்தான் அந்த அரக்கனை விரட்டமுடியுமென்று சந்தோஷப்பட்டு அவள் கேட்டதை அள்ளிக் கொடுத்தார்.
மலைமேல் போகும்முன் கராளா பிள்ளையாருக்கு ஒரு பெரிய பூஜை செய்து அவருடைய ஆசீர்வாதத்தையும் வாங்கிக்கொண்டு, பழங்கள் நிறைய வாங்கி எடுத்துக்கொண்டு மலைமேல் போய் அந்தப் பழங்களை ஒரு மரத்தடியில் பரப்பி வைத்தாள். பழங்களைப் பார்த்ததும் குரங்குகள் மணியை விட்டுவிட்டு பழங்களைச் சாப்பிட ஓடி வந்தன. அந்த சமயம் பாரத்து கராளா அந்த மணியை அவளுடைய புடைவையால் மறைத்து எடுத்துக்கொண்டு வந்து விட்டாள். எல்லாருக்கும் அவளிடம் நிறைய மரியாதை வந்துவிட்டது.
தமனக்கா பிங்கலிகாவைப் பாரத்து “மகாராஜா! சத்தம் வந்தால் அதை ஆராய்ந்து பார்க்காமல் பயப்படுவதில் எந்த நன்மையும் இல்லை” சொன்னது. இரண்டு நரிகளும் காளைமாட்டை சிங்கத்திற்கு அறிமுகம் செய்தன. நாளடைவில் சஞ்ஜீவிகாவும் பிங்கலிகாவும் நல்ல நண்பர்களாக மாறினார்கள். நரிகளுக்கும் மரியாதையும் அதிகமா கிடைத்தது. ஆனால் இந்த நட்பு நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.
அப்படி என்னதான் நடந்தது? அதை அடுத்த பகுதியில் பார்க்கலாம். மறக்காமல் வந்து கேளுங்கள்.