Short story in Tamil [Hoopoe]
மீன்கொத்தி ,மரங்கொத்தி மாதிரி கொண்டலாத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா? இந்தகதையில் தரன், சாமா ,ஜோதி மூனுபேரும் கொண்டலாத்தி பறவையை முதல் தடவையா பார்த்ததும் அவங்களுக்கு அதைப்பற்றி நிறைய தெரிஞ்சிக்க ஆசை வந்திருச்சு. அவங்களோட போய் நாமும் அந்த பறவையைப் பற்றி தெரிஞ்சக்கலாமா?
கொண்டலாத்தியின் கொண்டை
அத்தைபாட்டி சரஸ்வதி தரன், சாமா, ஜோதி மூனுபேருக்கும் ஓவியம் கத்துக்கொடுக்க
ஆசைப்பட்டாங்க. அமெரிக்காவில் இருந்து விடுமுறைக்கு வந்த தரனுக்கும், சாமாவுக்கும் கூட ஓவியம் வரைய ஆர்வம் அதிகம். பாட்டிக்கு தெரிஞ்ச பொண்ணு அனு. ஓவியம் வரையறது அவளுக்கு கை வந்த கலை. வாரத்தில் ரெண்டு நாள் அவளோட ஓவிய வகுப்புக்கு போவாங்க. சேகர், அவனோட தங்கை ராதா ரெண்டு பேரும் ஓவியம் கத்துக்கு வருவாங்க. ஒரு ஞாயிற்றுக்கிழமை சேகர் எல்லாரையும் விளையாடவும், பட்டம் விடவும் கூப்பிட்டான். தரன், சாமா, ஜோதி மூனுபேரும் ஆவலோட சேகரோட விளையாடப்போனாங்க. சேகரோட அவனோட நண்பர்கள் இன்னும் நாலஞ்சு பேர் இருந்தாங்க. உற்சாகத்துக்கு கேக்கனுமா!
எல்லாரும் பட்டம் விட கிளம்பிட்டாங்க. சேகர் பட்டம் விடுவதில் கில்லாடி. சமன்யுவுக்கு
எல்லாமே புதுசா ,வித்தியாசமா இருந்துச்சா. ஜோதியும் தரனும் அவனுக்கு உதவ வந்தாங்க. ஜோதி ராதாவோட ஜடை குஞ்சலத்தை வாங்கி சாமாவோட பட்டத்தின் வாலில் கட்டி பறக்க விட சொன்னாள். ஒரே அமர்க்களம் அங்கே. சேகரோட பட்டம் உயர உயர பறக்க ஆரம்பிச்சது. அவனோட நூல் மஞ்சா தடவி கூரா இருந்துச்சு. சேகரோட பட்டம் சமன்யூவின் பட்டத்துக்குப் பக்கத்துல வந்துச்சு. ஜோதிக்கு சேகர் சாமாவோட பட்டத்த அறுக்கப்போறான்னு புரிஞ்சுபோச்சு. “அண்ணா! அண்ணா! எங்களோட பட்டத்த அறுத்துடாத” சத்தமா கெஞ்ச ஆரம்பிச்சா. அவளோட கெஞ்சலை காதுல வாங்காம சேகர் பட்டத்த அறுத்துட்டான். “நான் 49 பட்டங்கள அறுத்துட்டேன். இது என்னோட 50வது பட்டம்” சேகர் கிட்ட ஒரே வெற்றி பெருமிதம். அவனோட நண்பர்கள் கைதட்ட ஆரம்பிச்சாங்க.
ஜோதிக்கு ஒரே அழுகை. “ஐயோ அந்த பட்டம் அறுந்து, பறந்து போயிடுச்சு. ராதாவோட குஞ்சலத்த திரும்பிகொடுக்கனுமே, எங்க போய்தேடுவேன்?” ஓரே புலம்பல்தான். “ராதாவோட குஞ்சலமா? பட்டம் ரொம்ப தூரம்போயிருக்காது. பக்கத்துல தோட்டத்துல ஏதாவது மரத்துல மாட்டியிருக்கும்.போய் தேடலாம் “ சேகர் தேட கிளம்ப மீதிபேரும் அவனோட போனாங்க. சிவன் கோவில் தோப்புல சாமாவின் பட்டம் அறுந்து தொங்கிட்டிருந்துச்சு. அந்த தோட்டத்துல இருந்து “ஊபூ ஊபூனு” இனிய குரல்ல ஏதோ பறவை ஒன்னு அவர்களை வரவேற்கிற மாதிரி இருந்துச்சு. தரன் அவனோட binocularஅ எடுத்து சுத்தி சுத்தி பாத்தான். “என்ன பாக்கற தம்பி” அப்படி கேட்டுட்டே தோட்டக்காரர் ஒருத்தர் அங்க வந்தாரு. அங்க நின்ன எல்லாரையும் பாத்துட்டு “எங்க வந்தீங்க இவ்வளவு பேரும்? கண்டபடி செடிகள மிதிச்சு பாழ்பண்ணிடாதீங்க “ எச்சரிக்கையும் கொடுத்தாரு. “நாங்க அறுந்த பட்டத்ததான் தேடிவந்தோம். அந்த வில்வ மரத்துல சிக்கிட்டு இருக்கு பாருங்க” சேகர் அவர்கிட்ட சொன்னான். “ வில்வ மரத்துல ஏற முடியாது. அது உறுதியானது இல்லை. மூங்கிலை கட்டி பார்க்கலாம். முழுசா கிடைக்குமானு சொல்லமுடியாது” சொல்லிட்டே அங்க இருந்த மூனுநாலு பேர கூப்பிட்டு இரண்டு மூங்கிலை சேத்து கட்ட ஆரம்பிச்சாங்க.
இந்த பசங்களும் சுத்தி உக்காந்து பாத்திட்டிருந்தாங்க. “என்னவோ அருவருப்பான வாடை வருதே தாத்தா” சாமா மூக்க மூடிட்டே கேட்டான். “அந்த பட்டுப்போன கொய்யா மரத்துல கொண்டலாத்தி கூடுகட்டிருக்கு. அதான் இவ்வளவு நாத்தம்” அப்படீனு சொன்னாரு. “இவ்வளவு பூக்கள் இருக்கு இங்க. அதையும் மீறி இந்த நாத்தம் தாங்க முடியல. இதை ஏன் உள்ள சேக்கறீங்க தாத்தா” தரன் கேட்டான். “தம்பி! கூடுதான் இந்த வாடையே தவிர என்ன மாதிரி தோட்டக்காரர்களுக்கு அது நண்பன். செடி கொடிகளுக்கு தீங்கு செய்யற புழு பூச்சிகள் தான் இந்த கொண்டலாத்திக்கி இரை. தோட்டத்தில் வளரும் செடிகளுக்கு பாதுகாப்பு”. மறுபடியம “ஊபூ ஊபூ” குரல் கேட்டுச்சு. தரன் குரல் வந்த திசைல பைனாகுலர் வச்சி பாக்கும்போது இரண்டு அழகான பறைவகளைப் பாத்தான். அதை வர்ணிக்கவும் ஆரம்பிச்சான்.
“ இருங்க! இருங்க! அந்த பறவைகள் வெளிர் மஞ்சள் நிறமா இருக்கு. முதுகு, இறக்கை, வால் பகுதியில் வரிக்குதிரைமாதிரி பட்டைகள். தலையில் விசிறிக்கொண்டை. அலகுகள் நீட்டமா ,மெலிஞ்சு, லேசா வளைந்து இருக்கு. அதோட இறகுகளோட நுனி கருப்பா இருக்கு”. மீதிப்பேருக்கு ஆர்வம் தாங்கலை. ஒவ்வொருத்தரா பைனாகுலர வாங்கி பாக்க போட்டிபோட்டாங்க . கொஞ்ச நேரத்ரில் பறவைகள் பறந்து போயிடுச்சு. அதுக்குள்ள தோட்டக்காரர் வில்வமரத்து உச்சியில் இருந்து பட்டத்தையும் எடுத்துட்டாரு. அதோட வாலில் கட்டியிருந்த குஞ்சலத்தை எடுத்து ராதாகிட்ட கொடுத்துட்டு ஜோதி நிம்மதியா ஒரு பெருமூச்சு விட்டா.
அடுத்த நாள் பசங்க அனுகிட்ட அவங்க பாத்தா பறவையபத்தி நிறைய சொன்னாங்க. “எங்கே! நீங்க பார்த்தா பறவையை வரைங்க பாக்கலாம்” அனு எல்லாரயும் உற்சாகப்படுத்தினா. மடமடனு வரைய ஆரம்பிச்சாங்க.சேகர், ராதா, சேகரோட தோழன் ராஜா அவங்க வரைஞ்ச ஓவியத்தில் கொண்டலாத்திக்கு கொண்டை இல்லை. “நாங்க பாத்தா கொண்டலாத்திக்கு கொண்டை இருந்துச்சே, இவங்க ஏன் கொண்டை போடல. மறந்துட்டீங்களா” சாமா அவங்க கிட்ட கேட்டான்.” இல்லையே நாங்க பாக்கும்போது அதுக்கு கொண்டை இல்லையே” மூனுபேரும் அழுத்தி சொன்னாங்க. “ஒருவேள அது பெண்பறவையோ” சேகருக்கு சந்தேகம். அனுவுக்கும் அந்த சந்தேகம் வந்துடுச்சு. “சேவல், மயில்போல ஆண் பறவைக்குத்தான் கொண்டை இருக்குமோ” இப்படி கேக்க ஆரம்பிச்சாங்க. சரி! அன்னிக்கி சாயந்திரமே அந்த தோட்டக்காரரைப் பார்த்து அவங்க சந்தேகத்தை கேக்கனும்னு அவரை பாக்கப் போனாங்க.
“தோட்டக்காரதாத்தா நாங்க பாத்த பறவைய வரைஞ்சிருக்கோம் பாருங்க” ஒவ்வொருத்தரா காமிச்சாங்க. “ஆமா தாத்தா !நாங்க பாக்கும்போது அதுக்கு கொண்டை இருந்துச்சு. சேகர், ராதா, ராஜா மூனுபேரும் பாக்கும்போது கொண்டை இல்லைனு சொல்றாங்க புரியலையே” சாமா சொல்லிட்டே போனான்., “ கொண்டை இல்லாதது பெண்பறவையா தாத்தா” சேகர் கேட்டான். சிரிச்சிகிட்டே தாத்தா ஆரம்பிச்சாரு. “அப்படி இல்லை. கொண்டலாத்திக்கு ஆண், பெண் ரெண்டுக்குமே அழகான ஒரே மாதிரி கொண்டை உண்டு. வேணும்போது அதை விரிச்சிக்கும் வேண்டாதபோது அதை சுருக்கிக்கும். அலகால மண்ணை கொத்தும்போது கொண்டை இறகுகள தலைக்குப்பின்னாடி மடிச்சு வச்சிக்கும். அபாயமோ, அதிர்ச்சியோ ஏற்பட்டா சிறகுகள் சிலிர்த்து நிக்க வச்சு கொண்டைய விரிக்கும். நிறைய பேருக்கு மீன்கொத்தி, மரங்கொத்திக்கு வித்தியாசம் தெரியாது. மூனு பறவை இனத்தையும் கவனிச்சு பாருங்க .உங்களுக்கு தெரியும்” நிறைய புது விஷயங்களை அவங்களுக்கு சொன்னாரு.
“பட்டம் விட்டு, அது அறுந்து மரத்துல தொங்க, அதை எடுக்கப்போன நமக்கு நிறைய புது விஷயங்கள அறிய வாயப்பு கிடச்சிருக்கு. அந்த பட்டத்துக்கும் இந்த தோட்டக்காரருக்கும் தான் நன்றிய சொல்லனும்” அவருக்கு நன்றிய சொல்லிட்டு வீட்டைப்பார்த்து திரும்பி நடக்க ஆரம்பிச்சாங்க.
கொண்டலாத்தியைப் பார்த்தால் அதோட கொண்டையை நல்லா கவனிச்சுபாருங்க.
இதோட இந்த கதை முடிஞ்சது. அடுத்த தடவை இன்னொரு கதையை பார்ப்போம். நன்றி. வணக்கம்.