(Jataka tales}
வணக்கம். இந்த பகுதியில் நாம் பார்க்கப் போற கதை ஜாதக கதைகளில் ஒரு கதை.
புத்த மதத்தில் சொல்லப்படும் ஒரு வகை நீதிக் கதைகள் தான் ஜாதக கதைகள். புத்தரின் முற்பிறவிகள் மனிதர்களாகவோ விலங்குகளாகவோ சித்தரிக்கப் பட்டிருக்கும். பல் வேறு கதாபாத்திரங்கள் பிரச்சனைகளைச் சந்திக்கும் போது புத்தர் கதாபாத்திரம் தலையிட்டு பிரச்சனைகளைத் தீர்க்கும்.
குள்ள வில்லாளி
(DWARF ARCHER)
குமரன் ஒரு குள்ளன். ஆனால் திறமையான வில்லாளி. அவனுடைய உருவமும் செயலும் கோமாளித்தனமா இருந்ததால் எல்லாரும் அவனைக் கேலி செய்தார்கள். அவனுடைய வில்வித்தையையும் நம்பவில்லை. எப்படியாவது அந்த நாட்டு ராஜாவைப் பார்த்து அவனுடைய திறமையை காமிக்கனும்னு திட்டம் போட ஆரம்பபிச்சான். அந்த ஊரில் கூடை பின்னும் நிறைய ஆட்கள் இருந்தார்கள். அந்த கூடை பின்றவங்க நடுவில் உயரமா பருமனா இருந்த ஒருத்தரைப் பார்த்தபடி நோட்டம் விட்டான். அந்த ஆளுடைய பெயர் வீரசேனன். குமரனுடைய துளைக்கும் பார்வயால் எரிச்சலா “அப்படி என்ன பாக்கிற”னு கேட்டான். உடனே குமரனும் “நீ என்னோடு வந்தால் ராஜாகிட்ட வேலை வாங்கி தரே”னு ஆசை காட்டினான். வீரசேனனுக்கோ நப்பாசை வந்துடிச்சு. சரியென்று ஒத்துக்கொண்டான். குமரன் அரண்மனைக்குள் நுழைந்து வீரசேனன் ஒரு பெரிய வில்லாளியென்றும் குமரன் வீரசேனனுடைய சேவகன்னும் அறிமுக படுத்திக்கொண்டான். ராஜாவும் ஒரு வில்லாளி தேவைனு வீரசேனனை உடனே வேலையில் சேர்த்துக்கொண்டான்.
வீரசேனன் வேலையில் சேந்து கொஞ்ச நாள் கழித்து நாட்டு எல்லையில் புலி ஒன்று சுத்திக்கிட்டு இருக்குனு செய்தி வந்துச்சு. உடனே ராஜா வீரசேனனைக் கூப்பிட்டு அந்த புலியை பிடித்துக்கொண்டு வரச் சொல்லி கட்டளை போட்டான். அதைக்கேட்டதும் வீரசேனனுக்குக் கிலி பிடிச்சிடுச்சு. ஆனால் குமரனுடைய அறிவுரைப்படி அவன் புலியை பிடிக்க வந்ததாகவும், அந்த கிராமவாசிகளை வெளியில் வந்து புலி புதரில் இருந்து வெளியில் வரவைக்கச் சத்தம் பண்ணச் சொன்னான். அவனுடைய உருவத்தை பார்த்து அந்த கிராமவாசிகளும் மயங்கி கம்பு, தடி, கோடாலி எல்லாம் எடுத்துட்டு காட்டுக்குள்ள போயி ஒரே சத்தமா அமர்க்களம் பண்ணாங்க. வீரசேனன் தூரத்தில் ஒரு மரத்துக்குப் பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டான். புலியும் புதரில் இருந்து வெளியில் வந்துச்சு. அந்த கிராம வாசிகளில் கொஞ்சப்பேர் பயந்து ஓட ஆரம்பித்தார்கள். இன்னும் சிலர் கையிலிருந்த தடியால் புலியை அடி அடியென்று அடித்தார்கள். இப்படி சேந்து அடித்ததால் அந்த புலியும் செத்துப்போச்சு.
வீரசேனன் மறைவில் இருந்து கையில் காட்டுக் கொடி கம்புகளோடு” எங்க புலி, எங்க புலி”யென்று கத்திட்டே வந்தான். அந்த கிராம வாசிகள்” நாங்கள் புலியை அடித்து கொன்னுட்டோம்”னு சொன்னார்கள். உடனே வீரசேனன்” ஐயோ! ராஜா புலியை உயிரோடு இல்ல பிடித்துக்கொண்டு வரக் கட்டளை போட்டாரு . இப்ப அவருக்கு நான் என்ன பதில் சொல்வேன் “அப்படியென்று நடித்தான். அரசனுடைய ஆணையைஅவர்கள் மதிக்காமல் மீறிட்டாங்கனு வீரசேனன் சொல்ல அந்த கிராமத்தில் இருந்தவர்கள் நல்லா பயந்துட்டாங்க. அந்த பயத்தை வீரசேனன் பயன்படுத்தி “சரி விடுங்கள். நானே புலியை கொன்றதா சொல்றேன். அந்த புலியை காட்டுச்செடிகளால் கட்டி இந்த மாட்டுவண்டியில் ஏத்திடுங்க” அந்த கிராமத்து மக்களிடம் ரொம்ப தைரியசாலி மாதிரி சொன்னான். அவர்களும் அப்படியே செய்தார்கள். குள்ள குமரனும் இப்ப வீரசேனனோடு சேந்துட்டான்.
அரசனும் மந்திரிகளும் மக்களும் வீரசேனனை ரொம்ப பாராட்டினார்கள். அரசன் அவனுக்குப் பரிசும் கொடுத்தான். வீரசேனனும் குள்ள குமரனுக்கு நன்றியை சொல்லிவிட்டு இதற்கப்புறம் “கூடை பின்னப் போக மாட்டேன்னு”ம் சொன்னான். இருவருக்கும் சந்தோஷமா ஒரு மாசம் போச்சு. ஒரு மாசத்துக்கப்புறம் இன்னொரு கிரமத்தில் தொந்தரவு கொடுத்துட்டு வந்த ஒரு காட்டெருமையைப் பிடித்துக்கொண்டு வரச்சொல்லி ராஜா மறுபடியும் வீரசேனனுக்குக் கட்டளை போட்டான். அவனும் குமரனோடு ஆலோசித்து புலியை அடித்த மாதிரியே இந்த காட்டெருமையும் கொன்று பாராட்டை வாங்கிட்டான். வீரசேனனுக்கு எல்லாரும் தடபுடலா விருந்து கொடுத்தார்கள். மறுபடியும் அவனுக்கு ராஜாவிடம் இருந்து பரிசு கிடைத்தது. அங்க இருந்தவர்கள் புலியை கொன்றதை விட காட்டெருமையைக் கொன்றதைப் பெரிதாக பேச ஆரம்பித்தார்கள்.
இதற்கப்புறம் வீரசேனனுக்குக் கர்வம் அதிகமாயிடுச்சு. குள்ளகுமரனை லட்சியமே செய்யவில்லை. குமரனின் உதவியில்லாமலே அவனே யோசித்து இந்த மாதிரி விலங்குகளை மக்களை வச்சி கொன்னுட்டு பாராட்டு வாங்கியிருக்க முடியுமென்று நினச்சான். அதனாலேயே குமரனை ஒதுக்க ஆரம்பித்தான். குமரனுக்கு அவனுடைய நடத்தை புரிந்தது. ஐந்தாறு மாதங்களுக்குப்பின் பக்கத்து நாட்டு ராஜாவிடம் இருந்து போருக்குத் தயாராகும்படி ஓலை ஒன்று வந்துச்சு. உடனே வீரசேனன் அந்த ஓலை அனுப்பின பக்கத்து நாட்டு ராஜாவைப் பிடித்து அழைத்து வருகிறேனென்று வீராவேசமா முழங்கினான். அதைக் கேட்டதும் அங்க ஓரே கைதட்டல். ரொம்ப ஆடம்பரமா யானைமேல் அம்பாரியில் ஏறினான். ‘ஐயோ இந்த அறிவிலியைக் காப்பாற்றி ஆகனுமே’னு குமரனும் வீரசேனனோடு ஏறினான். குமரன் வீரசேனனுடைய சேவகனென்று எல்லாருக்கும் தெரியுமே. யாரும் அவனைத் தடுக்கவில்லை.
வீரசேனன் வெற்றியோடு திரும்பும்போது கிடைக்கப்போகும் வரவேற்பையும் ஏன் அரசாங்க பதவி கூட கிடைக்கலாம்னும் விதவிதமான கற்பனையோடு போனான். எதிரிப்படையுடைய முழக்கத்தைக் கேட்டு நடுங்க ஆரம்பித்தான். எதிரிப்படையின் பலசாலி சேனாதிபதியை நான்கு பேர் திறந்த பல்லக்கில் தூக்கிட்டு வந்தார்கள். அந்த எதிரி நாட்டு ராஜாவும் படை சூழ யானைமேல் அம்பாரியில் வந்தார். வீரசேனனுக்கு நடுக்கம் இன்னும் அதிகமாயிடுச்சு. யானைப் பாகனை இன்னும் முன்னாடி போகவேண்டாம்னு பயத்தோடு சொன்னான். குமரனிடம்” என்ன விட்டுவிடு நான் ஊருக்கே போயிடறேன்”னு கெஞ்சினான். வீரசேனன் பயத்தில் கீழே விழாமல் இருக்க அவனைக் குமரன் இறுக்கி பிடித்தான். ‘வீரசேனா, இது யுத்தகளம் உனக்கானதல்ல. உன் கிராமத்துக்கே ஓடிடு’னு அவனைக் குமரன் ஓட விட்டான். வீரசேனனும் யானையிலிருந்து குதித்து விட்டால் போதுமென்று ஓட்டம் எடுத்தான். எதிரிநாட்டு வீரர்களும் குமரனைப் பார்த்து ‘இவன் யார்? இந்த குள்ளனால் என்ன செய்திடமுடியுமெ’ன்று ஏளனமா பாத்தாங்க. ஆனல் குமரன் குறி தப்பாமல் சேனாதிபதியைத் தூக்கிட்டு வந்த நான்கு பேர்களையும் அம்பால் அடித்தான். சேனாதிபதி நிலைதடுமாறி ராஜாவுடைய யானையின் தும்பிக்கை மேல் விழுந்தான்.
அவ்வளவுதான் யானை கோபத்தோடு அந்த சேனையில் குழப்பத்தை உண்டாக்கிச்சு. அதைப் பயன்படுத்தி குமரன் அந்த எதிரி ராஜாவை ஒரு கயிறை வீசி பிடித்து அவனுடைய யானையில் உள்ள அம்பாரிக்குள் கொண்டு வந்தான். வேக வேகமா எதிரி ராஜாவை அவனுடைய நாட்டு ராஜாவிடம் கொண்டு வந்து சேர்த்தான். ராஜாவுக்கும் நடந்த எல்லா விவரமும் தெரிந்தது. குமரனைப் பாராட்டி அவனுடைய சேனையில் உயர்ந்த பதவியும் பரிசுகளும் கொடுத்தான்.
குள்ள குமரனும் வீர தீர சாகச குமரன் ஆனான்.
குமரனின் பாத்திரம் நமக்குச் சொல்வது “உருவத்தைப் பார்த்து எடை போடக்கூடாதென்று” .
வீரசேனன் பாத்திரம் சொல்வது” தெரியாததைத் தெரிந்த மாதிரி காட்டிப் பிறரை
ஏமாற்றக்கூடாதென்று”.
இதோடு இந்த கதை முடிந்தது. நன்றி! வணக்கம்!