இதற்கு முந்தைய பகுதியில் திருக்குறளின் 22வது அதிகாரமான ஒப்புரவறிதலிலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பார்த்தோம். அடுத்து உள்ள ஐந்து குறள்கள் இந்த பகுதியில் பொருளுடன் இடம் பெறுகிறது. வாழும் சமுதாயத்தோடு இணைந்து பிறர்க்கு இயன்ற அளவு உதவி செய்து தன்னிடம் இருப்பதைப் பகிர்ந்து வாழ்வதே ஒப்புரவறிதல் ஆகும். தன்னலம் இல்லாமல் பொதுநலன் கருதி எதையும் எதிர்பார்க்காமல் செய்வதைப் பற்றி இந்த அதிகாரம் விளக்குகிறது.
ஒப்புரவறிதல்- 2
- ஆறாவது குறள்.
“பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்“.
இதில்
‘செல்வம் நயனுடை யான்கண் படின்‘
இதன் பொருள்
பிறர்க்கு ஒப்புரவு செய்யும் நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால்
அடுத்து
‘பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால்‘
இதன் பொருள்
அது ஊரின் நடுவில் பழங்கள் நிறைந்த மரம் எல்லோருக்கும் பயன் தருவது போலப் பயன் கொடுக்கும்.
அதாவது
பிறர்க்கு ஒப்புரவு செய்யும் நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அது ஊரின் நடுவில் பழங்கள் நிறைந்த மரம் எல்லோருக்கும் பயன் தருவது போலப் பயன் கொடுக்கும்.
ஒப்புரவறிதல் அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்.
“மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்“.
இதில்
‘செல்வம் பெருந்தகை யான்கண் படின்’
இதன் பொருள்
ஒப்புரவு செய்யும் பண்புடையவனிடம் செல்வம் சேர்ந்தால்
அடுத்து
‘மருந்தாகித் தப்பா மரத்தற்றால்’
இதன் பொருள்
அது எல்லா உறுப்புகளும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.
அதாவது
ஒப்புரவு செய்யும் பண்புடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அது எல்லா எல்லா உறுப்புகளும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம் போன்றது.
ஒப்புரவறிதல் அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்“.
இதில்
‘இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்‘
இதன் பொருள்
செல்வம் இல்லாத காலத்திலும் ஒப்புரவு செய்யத் தயங்க மாட்டார்.
அடுத்து
‘கடனறி காட்சி யவர்‘
இதன் பொருள்
செய்ய வேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள்
அதாவது
செய்ய வேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள் செல்வம் இல்லாத காலத்திலும் ஒப்புரவு செய்யத் தயங்க மாட்டார்.
ஒப்புரவறிதல் அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்.
“நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு“.
இதில்
‘நயனுடையான் நல்கூர்ந்தான் ஆதல்‘
ஒப்புரவாகிய நற்பண்புடையவன் வறியவன் ஆவது
அடுத்து
‘செயும்நீர செய்யாது அமைகலா வாறு‘
இதன் பொருள்
செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்ய முடியாமல் வருந்தும் போது தான்
அதாவது
ஒப்புரவாகிய நற்பண்புடையவன் வறியவன் ஆவது செய்யக்கூடிய உதவிகளைப் பிறர்க்குச் செய்ய முடியாமல் வருந்தும் போது தான்.
ஒப்புரவறிதல் அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்கது உடைத்து“.
இதில்
‘ஒப்புரவி னால்வரும் கேடெனின்‘
இதன் பொருள்
ஒப்புரவு செய்வதால் ஒருவனுக்குப் பொருட்கேடு வரும் என்று சொன்னால்
அடுத்து
‘அஃதொருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து’
இதன் பொருள்
அந்தக் கேடு தன்னையே விற்றாவது வாங்கிக் கொள்ளும் தகுதி உடையதாகும்.
அதாவது
ஒப்புரவு செய்வதால் ஒருவனுக்குப் பொருட்கேடு வரும் என்று சொன்னால் அந்தக் கேடு தன்னையே விற்றாவது வாங்கிக் கொள்ளும் தகுதி உடையதாகும்.
ஒப்புரவறிதல் அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு ஒப்புரவறிதல் அதிகாரம் முடிவடைந்தது. அடுத்த பகுதியில் இடம் பெறும் அதிகாரம் ஈகை.
நன்றி! வணக்கம்!