போன பகுதியில் திருக்குறளின் ஈகை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பொருளோடு பார்த்தோம். அடுத்து உள்ள ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கலாம்.
வறுமையில் வாழ்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் பசி தீர்க்கும் உணவு கொடுப்பது ஈகையாகும். உணவு இல்லாமல் இந்த உலகில் யாரும் வாழ முடியாது. இல்லை என்று சொல்லாமல் பிறரின் பசியைத் தீர்க்கும் அறம் முதன்மையானது. பசி தீர்க்கும் இந்த ஈகை குணத்தின் சிறப்பை இந்த அதிகாரம் எடுத்துக் காட்டுகிறது.
ஈகை-2
- ஆறாவது குறள்.
“அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி“.
இதில்
‘அற்றார் அழிபசி தீர்த்தல்‘
இதன் பொருள்
வறியவர்களின் கடும் பசியைப் போக்குதல் வேண்டும்.
அடுத்து
‘அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி‘
இதன் பொருள்
அதுவே பொருள் உள்ளவன் பிற்காலத்தில் தனக்குப் பயன்படுவதற்குப் பொருளைச் சேர்த்து வைக்கும் இடமாகும்.
அதாவது
வறியவர்களின் கடும் பசியைப் போக்குதல் வேண்டும். அதுவே பொருள் உள்ளவன் பிற்காலத்தில் தனக்குப் பயன்படுவதற்குப் பொருளைச் சேர்த்து வைக்கும் இடமாகும்.
ஈகை அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்.
“பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது“.
இதில்
‘பாத்தூண் மரீஇ யவனை‘
இதன் பொருள்
எப்பொழுதும் தன் உணவை பகிர்ந்து உண்ணப் பழகிய ஒருவனை
அடுத்து
‘பசியென்னும் தீப்பிணி தீண்டல் அரிது‘
இதன் பொருள்
பசி என்ற கொடிய நோய் தீண்டுதல் இல்லை.
அதாவது
எப்பொழுதும் தன் உணவை பகிர்ந்து உண்ணப் பழகிய ஒருவனை, பசி என்ற கொடிய நோய் தீண்டுதல் இல்லை.
ஈகை அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்”.
இதில்
‘ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல்‘
இதன் பொருள்
மற்றவர்களுக்குக் கொடுக்கும் போது அவர்கள் மகிழ்வதனால் கிடைக்கும் இன்பத்தை அறிய மாட்டார்களோ?
அடுத்து
‘தாமுடைமை வைத்திழக்கும் வன்க ணவர்‘
இதன் பொருள்
தாம் சேர்த்து வைத்திருக்கும் பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடுகின்ற இரக்கமற்றவர்கள்.
அதாவது
தாம் சேர்த்து வைத்திருக்கும் பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடுகின்ற இரக்கமற்றவர்கள், மற்றவர்களுக்குக் கொடுக்கும் போது அவர்கள் மகிழ்வதனால் கிடைக்கும் இன்பத்தை அறிய மாட்டார்களோ?
ஈகை அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்
“இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்“.
இதில்
‘இரத்தலின் இன்னாது மன்ற‘
இதன் பொருள்
பிறரிடம் கையேந்தி யாசிப்பதை விடக் கொடியது
அடுத்து
‘நிரப்பிய தாமே தமியர் உணல்‘
செல்வத்தைப் பெருக்க எண்ணி பிறர்க்கு ஈயாமல் தாமே உண்டு மகிழ்கின்ற செயல்.
அதாவது
செல்வத்தைப் பெருக்க எண்ணி பிறர்க்கு ஈயாமல் தாமே உண்டு மகிழ்கின்ற செயல், பிறரிடம் கையேந்தி யாசிப்பதை விடக் கொடியது.
ஈகை அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்
“சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை“.
இதில்
‘சாதலின் இன்னாத தில்லை‘
இதன் பொருள்
ஒருவருக்கு இறப்பதை விடத் துன்பம் தருவது வேறு எதுவும் இல்லை.
அடுத்து
‘இனிததூஉம் ஈதல் இயையாக் கடை‘
இதன் பொருள்
வறியவர்களுக்குக் கொடுக்க முடியாத போது அந்த இறப்பும் இன்பம் தருவது ஆகும்.
அதாவது
ஒருவருக்கு இறப்பதை விடத் துன்பம் தருவது வேறு எதுவும் இல்லை. வறியவர்களுக்குக் கொடுக்க முடியாத போது அந்த இறப்பும் இன்பம் தருவது ஆகும்.
ஈகை அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு ஈகை அதிகாரம் முடிவடைந்தது.
அடுத்து வரும் அதிகாரம் புகழ்.
நன்றி! வணக்கம்!