இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது திருக்குறளின் பத்தாவது அதிகாரமான இனியவை கூறல்.
அதிகார விளக்கம்
இனிய சொற்கள் மனதில் உள்ள அன்பினைக் காட்டும். பிறரிடம் அன்புடன் இனிமையாகப் பேசுவது அறம் ஆகும். இனிமையான பழம் போல் இன்சொல் இருக்கும்போது ஏன் காயான இனிமை இல்லாத சொற்களைப் பேசவேண்டும்? இந்த அதிகாரம் இன்சொற்கள் பேசுவதால் உண்டாகும் நன்மைகளையும் பயன்களையும் சொல்கிறது.
இனியவைகூறல்-1
- முதல் குறள்.
“இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்“
இதில்
“இன்சொலால்“
இதன் பொருள்
இனிய சொற்கள் ஆகும்
அடுத்து
“ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்“
இதன் பொருள்
அன்பு கலந்து, வஞ்சனையற்று, வாய்மையுடன் அறத்தினை உணர்ந்தவர் வாயிலிருந்து வரும் சொற்கள்
அதாவது
அன்பு கலந்து, வஞ்சனையற்று, வாய்மையுடன் அறத்தினை உணர்ந்தவர் வாயிலிருந்து வரும் சொற்கள் இனிய சொற்கள் ஆகும்.
இனியவை கூறல் அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்“
இதில்
“அகன்அமர்ந்து ஈதலின் நன்றே“
இதன் பொருள்
நெஞ்சு உவந்து ஒருவருக்குப் பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் சிறந்தது
அடுத்து
“முகனமர்ந்து இன்சொலன் ஆகப் பெறின்“
இதன் பொருள்
முகமலர்ச்சியுடன் இன்சொல் பேசுவது
அதாவது
முகமலர்ச்சியுடன் இன்சொல் பேசுவது, நெஞ்சு உவந்து ஒருவருக்குப் பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் சிறந்தது.
இனியவை கூறல் அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.
- மூன்றாவது குறள்.
“முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்“
இதில்
“முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி“
இதன்பொருள்
முகம் மலர்ந்து இனிமையாகப் பார்த்து
அடுத்து
“அகத்தானாம் இன்சொ லினதே அறம்“
இதன் பொருள்
உள்ளத்திலிருந்து இனிய சொற்களைக் கூறுவதே அறம் ஆகும்.
அதாவது
முகம் மலர்ந்து, இனிமையாகப் பார்த்து உள்ளத்திலிருந்து இனிய சொற்களைக் கூறுவதே அறம் ஆகும்.
இனியவை கூறல் அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.
- நான்காவது குறள்.
“துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு“
இதில்
“துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும்“
இதன் பொருள்
துன்பத்தை அதிகமாக்கும் வறுமை என்பது இல்லை.
அடுத்து
“யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு“
இதன் பொருள்
எல்லாரிடத்திலும் இன்பத்தைத்தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்கு
அதாவது
எல்லாரிடத்திலும் இன்பத்தைத்தரும் இனிய சொற்களைப் பேசுபவர்க்குத் துன்பத்தை அதிகமாக்கும் வறுமை என்பது இல்லை.
இனியவை கூறல் அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள்.
“பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற“
இதில்
“பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு”
இதன் பொருள்
அடக்கம் உடையவனாகவும், இனிமையாகப் பேசுவதும் ஒருவனுக்கு அணிகலனாகும்
அடுத்து
“அணியல்ல மற்றுப் பிற”
மற்றவை அணிகலன்கள் ஆகா.
அதாவது
அடக்கம் உடையவனாகவும், இனிமையாகப் பேசுவதும் ஒருவனுக்கு அணிகலனாகும். மற்றவை அணிகலன்கள் ஆகா.
இனியவை கூறல் அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.
மீதி உள்ள ஐந்து குறள்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
நன்றி! வணக்கம்!