இந்த பகுதியில் நீங்கள் திருக்குறளின் 17வது அதிகாரமான அழுக்காறாமையிலிருந்து முதல் ஐந்து குறள்களைக் கேட்கப் போகிறீர்கள்.
அதிகார விளக்கம்
அழுக்காறாமை என்றால் பொறாமை இல்லாமல் இருப்பது. பிறரிடம் இருக்கும் செல்வத்தையோ, கல்வியையோ அல்லது வேறு எதுவாக இருந்தாலும் பொறாமைப் படுவது ஒருவனை அழித்து விடும். பொறாமைக் குணம் ஒருவனை வாழ்வில் எதையும் சாதிக்க முடியாமல் அவனது வாழ்வைச் சீர்குலைத்துவிடும். இந்த அதிகாரம் பொறாமையால் வரும் தீமைகளை எடுத்துக் கூறுகிறது.
அழுக்காறாமை 1
“ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு.“
இதில்
‘ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு’
இதன் பொருள்
ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை உணர்வு இல்லாமல் வாழும் இயல்பை
அடுத்து
‘ஒழுக்காறாக் கொள்க’
இதன் பொருள்
தனக்குரிய ஒழுக்க நெறியாகக் கொள்ள வேண்டும்.
அதாவது
ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை உணர்வு இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்குரிய ஒழுக்க நெறியாகக் கொள்ள வேண்டும்.
அழுக்காறாமை அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
“விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லை யார்மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்”.
இதில்
‘யார்மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின்’
இதன் பொருள்
யாரிடமும் பொறாமை இல்லாதிருத்தலே
அடுத்து
‘விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லை‘
இதன் பொருள்
ஒருவன் பெறத்தக்கப் பேறுகளில் சிறந்ததாகும். அதற்கு சமமானது எதுவும் இல்லை.
அதாவது
யாரிடமும் பொறாமை இல்லாதிருத்தலே
ஒருவன் பெறத்தக்கப் பேறுகளில் சிறந்ததாகும். அதற்கு சமமானது எதுவும் இல்லை.
அழுக்காறாமை அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.
“அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்.”
இதில்
‘அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான்’
இதன் பொருள்
அறத்தையும் செல்வத்தையும் வேண்டாம் என்று சொல்கின்றவன்
அடுத்து
‘பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான்‘
இதன் பொருள்
பிறரது ஆக்கத்தைக்கண்டு மகிழாமல் பொறாமைப் படுவான்.
அதாவது
அறத்தையும் செல்வத்தையும் வேண்டாம் என்று சொல்கின்றவன்
பிறரது ஆக்கத்தைக்கண்டு மகிழாமல் பொறாமைப் படுவான்.
அழுக்காறாமை அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.
“அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து”.
இதில்
‘அழுக்காற்றின் அல்லவை செய்யார்‘
இதன் பொருள்
பொறாமையினால் தமக்குத் துன்பம் வரும் என்பதை அறிந்த அறிவுடையோர்
அடுத்து
‘இழுக்காற்றின் ஏதம் படுபாக்கு அறிந்து’
இதன் பொருள்
பொறாமை காரணமாக அறனல்லாத செயல்களை
செய்யமாட்டார்கள்.
அதாவது
பொறாமையினால் தமக்குத் துன்பம் வரும் என்பதை அறிந்த அறிவுடையோர் பொறாமை காரணமாக அறனல்லாத செயல்களை செய்யமாட்டார்கள்.
அழுக்காறாமை அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
“அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.“
இதில்
‘ஒன்னார் வழுக்காயும் கேடீன் பது‘
இதன் பொருள்
பகைவர் தீங்கு செய்யாவிட்டாலும் தவறாமல் கேட்டைத் தரும்.
அடுத்து
‘அழுக்காறு உடையார்க்கு அதுசாலும்‘
இதன் பொருள்
பொறாமை குணம் உடையவர்க்கு வேறு பகை வேண்டாம். அக்குணமே போதும்.
அதாவது
பொறாமை குணம் உடையவர்க்கு வேறு பகை வேண்டாம். அக்குணமே போதும். பகைவர் தீங்கு செய்யாவிட்டாலும் தவறாமல் கேட்டைத் தரும்.
அழுக்காறாமை அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது. இந்த குறளோடு இந்த பகுதி முடிவடைந்தது. அடுத்து உள்ள ஐந்து குறள்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
தன்றி! வணக்கம்!