திருக்குறளின் 25வது அதிகாரமான அருளுடைமையிலிருந்து முதல் ஐந்து குறள்களை இதற்கு முந்தைய பகுதியில் பார்த்தோம். இந்த அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்த பகுதியில் கேட்கப் போகிறீர்கள். அருள் என்றால் பிற உயிர்களிடம் கருணையோடும் இரக்கத்தோடும் நடந்து கொள்வது. நம்மைவிட மெலிந்தவர்களிடம் கருணையோடு நடந்து கொள்ள வேண்டும்.
அருளுடைமை 2
- ஆறாவது குறள்.
“பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்“.
இதில்
‘பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர்‘
இதன் பொருள்
உறுதிப் பொருளாகிய அறத்தைச் செய்யாமல் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்று சொல்லப்படுவார்கள்.
அடுத்து
‘அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார்‘
இதன் பொருள்
அருள் இல்லாமல் தீமைகள் செய்து வாழ்பவர்கள்.
அதாவது
அருள் இல்லாமல் தீமைகள் செய்து வாழ்பவர்கள், உறுதிப் பொருளாகிய அறத்தைச் செய்யாமல் தம் வாழ்க்கையின் குறிக்கோளை மறந்தவர் என்று சொல்லப்படுவார்கள்.
அருளுடைமை அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்.
“அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு“.
இதில்
‘அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை‘
இதன் பொருள்
அருள் இல்லாதவர்களுக்கு மேல் உலக இன்பம் இல்லை.
அடுத்து
‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு‘
இதன் பொருள்
பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில் இன்பம் இல்லாதது போல்
அதாவது
பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில் இன்பம் இல்லாதது போல், அருள் இல்லாதவர்களுக்கு மேல் உலக இன்பம் இல்லை.
அருளுடைமை அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்.
“பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற்று ஆதல் அரிது“.
இதில்
‘பொருளற்றார் பூப்பர் ஒருகால்’
இதன் பொருள்
பொருள் இல்லாமல் வறுமையில் இருப்பவர் ஒரு காலத்தில் செல்வத்தால் பொலிவுறலாம்.
அடுத்து
‘அருளற்றார் அற்றார்மற்று ஆதல் அரிது‘
இதன் பொருள்
ஆனால் அருளில்லாமல் வாழ்பவர்கள் பின்பு ஒரு காலத்திலும் சிறந்து விளங்குவதில்லை.
அதாவது
பொருள் இல்லாமல் வறுமையில் இருப்பவர் ஒரு காலத்தில் செல்வத்தால் பொலிவுறலாம். ஆனால் அருளில்லாமல் வாழ்பவர்கள் பின்பு ஒரு காலத்திலும் சிறந்து விளங்குவதில்லை.
அருளுடைமை அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்.
“தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்“.
இதில்
‘தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்‘
இதன் பொருள்
ஞானம் இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல் ஆகும்
அடுத்து
‘அருளாதான் செய்யும் அறம்‘
இதன் பொருள்
மனதில் அருள் இல்லாதவன் செய்கின்ற அறத்தினை ஆராய்ந்து பாரத்தால்
அதாவது
மனதில் அருள் இல்லாதவன் செய்கின்ற அறத்தினை ஆராய்ந்து பாரத்தால், ஞானம் இல்லாதவன் மெய்ப்பொருளை உணர்ந்தது போல் ஆகும்.
அருளுடைமை அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“வலியார்முன் தன்னை நினைக்க;தான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து“.
இதில்
‘வலியார்முன் தன்னை நினைக்க‘
இதன் பொருள்
தன்னை விட வலிமை உள்ளவர்கள் தன்னை துன்புறுத்த வந்தால், தான் அஞ்சி நிற்பதை நினைக்க வேண்டும்.
அடுத்து
‘தான் தன்னின் மெலியார்மேல் செல்லு மிடத்து‘
இதன் பொருள்
அருளில்லாதவன் தன்னை விட எளியவர்களைத் துன்புறுத்தச் செல்லும் போது
அதாவது
அருளில்லாதவன் தன்னை விட எளியவர்களைத் துன்புறுத்தச் செல்லும் போது, தன்னை விட வலிமை உள்ளவர்கள் தன்னை துன்புறுத்த வந்தால், தான் அஞ்சி நிற்பதை நினைக்க வேண்டும்.
அருளுடைமை அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு அருளுடைமை அதிகாரம் முடிவடைந்தது. அடுத்து வரும் அதிகாரம் புலான்மறுத்தல்.
நன்றி! வணக்கம்!