முந்தைய பகுதியில் திருக்குறளின் 24வது அதிகாரமான புகழ் அதிகாரத்திலிருந்து ஆறு முதல் பத்து அவரை உள்ள குறள்களைப் பொருளோடு பார்த்தோம். இந்த பகுதியில் திருக்குறளின் 25வது அதிகாரமான அருளுடைமையிலிருந்து முதல் ஐந்து குறள்களைப் பார்க்கப்போகிறோம். திருக்குறளின் அறத்துப்பாலில் துறவியல் அறங்களைக் கூறும் பகுதியில் அருளுடைமை அதிகாரம் இடம் பெறுகிறது. அருள் என்றால் பிற உயிர்களிடம் கருணையோடும் இரக்கத்தோடும் நடந்து கொள்வது. நம்மைவிட மெலிந்தவர்களிடம் கருணையோடு நடந்து கொள்ள வேண்டும். அருள் குணம் உடையவர்கள் பிறரைத் துன்புறுத்த மாட்டார்கள். பிறர் துயர் தீர உதவுவார்கள்.
அருளுடைமை 1
- முதல் குறள்.
“அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள“.
இதில்
‘அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்‘
இதன் பொருள்
செல்வங்களில் சிறந்த செல்வம் உயர்ந்தவர்களிடம் உள்ள அருளால் வரும் செல்வமேயாகும்.
அடுத்து
‘பொருட்செல்வம் பூரியார் கண்ணும் உள’
இதன் பொருள்
பொருளால் வரும் செல்வம் இழிந்தவர்களிடமும் இருப்பதாகும்.
அதாவது
செல்வங்களில் சிறந்த செல்வம் உயர்ந்தவர்களிடம் உள்ள அருளால் வரும் செல்வமேயாகும். பொருளால் வரும் செல்வம் இழிந்தவர்களிடமும் இருப்பதாகும்.
அருளுடைமை அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“நல்லாற்றான் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை“.
இதில்
‘நல்லாற்றான் நாடி அருளாள்க‘
இதன் பொருள்
நல்ல பல நெறிகளில் நின்று நமக்குத் துணையான அறம் எது என்று ஆராய்ந்து அருளோடு வாழ வேண்டும்.
அடுத்து
‘பல்லாற்றால் தேரினும் அஃதே துணை‘
இதன் பொருள்
பல நெறிகளை ஆராய்ந்தாலும் அருளே துணையாக இருக்கும்.
அதாவது
நல்ல பல நெறிகளில் நின்று நமக்குத் துணையான அறம் எது என்று ஆராய்ந்து அருளோடு வாழ வேண்டும். பல நெறிகளை ஆராய்ந்தாலும் அருளே துணையாக இருக்கும்.
அருளுடைமை அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.
- மூன்றாவது குறள்.
“அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்“.
இதில்
‘அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை‘
இதன் பொருள்
அருள் நிறைந்த நெஞ்சம் உடையவர்க்கு இல்லை.
அடுத்து
‘இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல்‘
இதன் பொருள்
இருள் நிறைந்த துன்ப உலகத்தில் வாழும் வாழ்க்கை
அதாவது
இருள் நிறைந்த துன்ப உலகத்தில் வாழும் வாழ்க்கை அருள் நிறைந்த நெஞ்சம் உடையவர்க்கு இல்லை.
அருளுடைமை அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.
- நான்காவது குறள்.
“மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை“.
இதில்
‘மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு‘
இதன் பொருள்
உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளோடு வாழ்பவர்க்கு
அடுத்து
‘இல்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை‘
இதன் பொருள்
தன் உயிர் அஞ்சக் கூடிய தீவினைகள் உண்டாகாது.
அதாவது
உலகில் நிலைபெற்றுள்ள மற்ற உயிர்களைப் போற்றி அருளோடு வாழ்பவர்க்கு தன் உயிர் அஞ்சக் கூடிய தீவினைகள் உண்டாகாது.
அருளுடைமை அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள்.
“அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி“.
இதில்
‘அல்லல் அருளாள்வார்க்கு இல்லை‘
இதன் பொருள்
அருள் உள்ளவர்க்கு இவ்வுலகில் துன்பம் உண்டாகாது.
அடுத்து
‘வளிவழங்கும் மல்லன்மா ஞாலங் கரி‘
இதன் பொருள்
அதற்குக் காற்று இயங்குகின்ற வளமுடைய இந்த பெரிய உலகத்தில் வாழ்பவரே சான்று.
அதாவது
அருள் உள்ளவர்க்கு இவ்வுலகில் துன்பம் உண்டாகாது. அதற்குக் காற்று இயங்குகின்ற வளமுடைய இந்த பெரிய உலகத்தில் வாழ்பவரே சான்று.
அருளுடைமை அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு இந்த பகுதி முடிவடைந்தது. இந்த அதிகாரத்தின் அடுத்து உள்ள ஐந்து குறள்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
நன்றி! வணக்கம்!