ஹிதோபதேசம்.
ஹிதோபதேசத்தின் மூன்றாவது பகுதியிலிருந்து கதைகளைத் தொடர்கிறோம். ஹிதோபதேசத்தில் நண்பர்களைக் கவர்தல், நண்பர்களை இழப்பது, போர் தொடுத்தல், சமாதானம் செய்வது என்ற நான்கு பகுதிகள் உள்ளது என்று பார்த்தோம். போர் தொடுத்தல் பகுதியின் முதல் கதை இது.
அன்னப்பறவை-மயில்-போர்
விஷ்ணு சர்மா நண்பர்களைக் கவர்வது, நண்பர்களை இழப்பது எப்படி என்று கதைகள் சொல்லி முடித்ததும் இளவரசர்களுக்கு அவர் சொல்லும் கதைகளில் ஆர்வம் அதிகமாகிவிட்டது. போர் தொடுத்தலைப் பற்றி அவர் என்ன கதைகள் சொல்லப்போகிறர் என்று ஆவலாகக் காத்திருந்தார்கள்.
மறு நாள் காலையில் விஷ்ணு சர்மா அரண்மனைக்கு வந்த போது இளவரசர்களின் முகத்தில் தெரிந்த ஆர்வத்தைக் கண்டு “என்ன! எல்லாரும் கதைகள் கேட்க தாயாரயிட்டீங்க போலிருக்கிறதே” சிரித்துக் கொண்டே கேட்டார். “ஆமாம் குருவே!போர் தொடுப்பதைப் பற்றி கதைகள் சொல்லப்போவதாகச் சொன்னீர்களே! நாங்கள் எதிர்காலத்தில் அரசர்களாக இந்த நாட்டை ஆளவேண்டுமே! போர் செய்வதைப் பற்றி நாங்கள் அறிந்து கொள்ள வேண்டுமே!”
இளவரசர்களின் பதிலைக் கேட்ட விஷ்ணு “ம்ம்! நான் சொன்னது நடக்க ஆரம்பித்துவிட்டது. இளவரசர்கள் அவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். நாட்டை ஆள்வதைப் பற்றி கற்றுக் கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்” மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.
“அப்படியா! இதோ போர் தொடுத்தலைப் பற்றிச் சொல்ல ஆரம்பிக்கிறேன். அன்னப் பறவைகளுக்கும் மயில்களுக்கும் எப்படிப் போர் ஆரம்பமானது என்று பார்க்கலாம்”.
“இந்த இரண்டு படைகளும் வீரத்தில் சமமாக இருந்ததால் யார் ஜெயிப்பார்கள் என்று சொல்ல முடியவில்லை. அப்படி இருந்த போது காக்கைகள் அன்னப் பறவைகளுக்கு உதவி செய்ய வந்த போது அன்னப்பறவைகளும் சுலபமா வெற்றி அடையலாம் என்று அதற்கு ஒத்துக் கொண்டன. ஆனால் நடந்ததோ வேறு. பாவம் !அன்னப்பறவைகளுக்குக் காக்கைகள் எதிரிப் படையைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை” விஷ்ணு சர்மா சொல்லிவிட்டு நிறுத்தினார்.
ஓ !எப்படி என்ன நடந்தது? சொல்லுங்கள் குருவே” இளவரசர்கள் ஆர்வமாக கேட்டார்கள். “இதோ அன்னப் பறவைகளுக்கும் மயில்களுக்கும் இடையே நடந்த போரைப் பற்றிச் சொல்கிறேன் கேளுங்கள்” விஷ்ணு சர்மா ஆரம்பித்தார்.
கற்பூர தீபிகா என்ற தீவில் தாமரைப் பூக்கள் நிறைந்த ஏரிகள் நிறைய இருந்தன.அந்த ஏரிகளில் ஒன்று தான் பத்மகேலி. தாமரைப்பூக்கள் நிறைய இருந்ததால் இந்த பெயர் வந்தது. அன்னப்பறவைகளின் ராஜா ஹிரண்யகர்பா பத்மகேலியில்தான் வாசம் செய்தது.
அந்த ஏரிகளில் உள்ள பறவைகள் அவர்களுக்கு ஒரு தலைவர் வேண்டும் என்று முடிவு செய்தன. “ராஜா இல்லாமல் போனால் மாலுமி இல்லாத கப்பலைப் போல் தத்தளிப்போம். நமக்கு வரும் ஆபத்தைப் பற்றி அறியாமல் வாழ்க்கை குழப்பங்களும் சந்தேகங்களும் நிறைந்ததாக இருக்கும்” இப்படிப் பேசி முடிவு செய்து ஹிரண்யகர்பாவை ராஜாவாகத் தேர்ந்தெடுத்தன.
அவர்கள் இருந்ததோ ஒரு தீவு. வெளி உலகுக்கும் அந்த தீவுக்கும் அதிக தொடர்பு கிடையாது. அப்படி யாரும் அந்த தீவுப் பக்கம் வருவதில்லை.ஆனால் எதுவும் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லையே!
ஒரு நாள் கொக்கு ஒன்று ஹிரண்யகர்பா தாமரைப் பூக்கள் நிறைந்த குளத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது அங்கே வந்தது. அந்த கொக்குடைய பெயர் தீர்க்கமுகா. அதன் மூக்கு நீளமா இருந்ததால் அதற்கு அந்த பெயர்.
ஹிரண்யகர்பா கொக்கைப் பார்த்ததும்” தீர்க்கமுகா! வா! வா! எப்படி இருக்கிறாய்? நிறைய நாள் ஆயிற்றே உன்னைப் பாரத்து! எங்கே போயிருந்தாய்?பிரச்சனை ஒன்றும் இல்லையே உனக்கு? இந்த தீவுக்கு வெளியில் என்ன நடக்கிறது?” நலம் விசாரித்தது.
முதலில் தீர்க்கமுகா அந்த ராஜா அன்னப்பறவைக்குத் தலை வணங்கி மரியாதை செய்தது. பின் “ஓ! ராஜா! உங்களை இங்க பாரத்தது ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. உங்களிடம் சொல்ல ஒரு செய்தி இருக்கிறது. உங்களுக்கு அதைச் சொல்லத்தான் இங்கு வேகமா பறந்து வந்தேன்” கொக்கு சொன்னது.
“அப்படியா! அது என்ன செய்தி? அதைச் சொல்” ஹிரண்யகர்பா ராஜதோரனையில் கேட்டது.
“ராஜா! ஜம்புத்தீவில் இருக்கும் விந்திய மலைக்கு மேல் போய்க்கொண்டிருந்தேனா? அங்க இருக்கும் மயில் சித்ரவர்ணா தான் அந்த இடத்துக்கு அரசன். அந்த இடத்திலிருந்த காய்ந்து போன புல்லைப் பாரத்து அங்கே இறங்கினேன். அப்போது அந்த இடத்துக்கு மயில்கள் கூட்டமாக வந்தது. என்னைப் பாரத்து நான் யார் எங்கே இருந்து வருகிறேன் என்று கேட்டார்கள்”.
“நானும் கற்பூர தீவின் ராஜாவான ஹிரண்யகர்ப்பாவிடம் சேவகம் செய்வதாகச் சொன்னேன். புதுப்புது இடங்களுக்குப் போவதும் எனக்குப் பிடிக்கும் என்றும், சொன்னேன். இப்படி நான் சொன்னதும் அவர்கள் என்ன நினைத்தார்களோ தெரியாது என்னைப் பாரத்து உனக்கு எந்த இடம் நிறையப் பிடித்திருக்கிறது என்று கேட்டார்கள்”.
“அவர்கள் அப்படிக் கேட்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எந்த இடம் பிடித்திருக்கிறது என்றா கேட்டீர்கள்.?இது என்ன கேள்வி? எப்படி இந்த இரண்டு இடங்களையும் ஒப்பிட்டுச் சொல்ல முடியும்?”
“நானும் கற்பூர தீவின் ராஜாவான ஹிரண்யகர்ப்பாவிடம் சேவகம் செய்வதாகச் சொன்னேன். புதுப்புது இடங்களுக்குப் போவதும் எனக்குப் பிடிக்கும் என்றும், சொன்னேன். இப்படி நான் சொன்னதும் அவர்கள் என்ன நினைத்தார்களோ தெரியாது என்னைப் பாரத்து உனக்கு எந்த இடம் நிறையப் பிடித்திருக்கிறது என்று கேட்டார்கள்”.
“அவர்கள் அப்படிக் கேட்டது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. எந்த இடம் பிடித்திருக்கிறது என்றா கேட்டீர்கள் ?இது என்ன கேள்வி? எப்படி இந்த இரண்டு இடங்களையும் ஒப்பிட்டுச் சொல்ல முடியும்?”
“கற்பூர தீவிற்குத்தான் முதலிடம். அது ஒரு சொர்க்கம். அதன் ராஜாவோ தேவேந்திரனின் மறு பிறவி. நீங்கள் வந்து பார்த்தால்தான் தெரியும் அதன் மதிப்பு. ஆமா! நீங்கள் ஏன் இந்த எதற்கும் உபயோகமில்லாத இந்த இடத்தை விட்டு என்னோடு எங்கள் நாட்டுக்கு வரக்கூடாது? வந்து பார்த்தால் உங்களுக்கே நான் சொல்வது புரியும். நான் இப்படிச் சொன்னதும் அந்த பறவைகளுக்கும் ஆர்வமாக இருக்கும் என்று நினைத்தேன்.”
“ஆனால் அந்தப் பறவைகளுக்குக் கோபமும் எரிச்சலும் தான் வந்தது. அப்போதுதான் எனக்கு ஒன்று புரிந்தது. பாலால் நன்மைகள் அதிகம். ஆனால் பாம்புக்குப் பால் வார்த்தால் அது விஷமாக மாறும். பிறர்க்கு உதவும் எண்ணத்தில் தான் நாம் அறிவுரை சொல்கிறோம். ஆனால் முட்டாளுக்கு அறிவுரை சொன்னால் அவனுக்குக் கோபம்தான் வரும்.”
“அதனால் தான் இலவசமா யாருக்கும் அறிவுரை சொல்லக்கூடாது. பாத்திரம் அறிந்துதான் பிச்சை இடனும். உதவும் எண்ணத்தில் சொல்கிறோம் என்று புரிந்து கொள்பவர்களுக்கு மட்டும்தான் அறிவுரை சொல்லவேண்டும்.திமிராக உள்ளவர்களுக்குச் சொல்லக் கூடாது. அப்படிச் செய்தால் குரங்குகளுக்கு உதவும் நோக்கத்தில் அறிவுரை செய்த பறவைகளின் கதி தான் வரும்.”
“அப்படி என்ன நடந்தது தெரியுமா! குரங்குகள் கோபத்தில் பறவைகளின் கூட்டைக் கலைத்து எறியப் பறவைகள் அவர்களின் கூட்டை விட்டுத் தப்பித்து வேறு இடத்திற்குப் போக வேண்டியிருந்தது” தீர்க்கமுகா சொல்ல
“ஓ !அப்படியா! அது என்ன கதை? குரங்குகள் ஏன் பறவைகளின் கூட்டைக் கலைத்தது?” ஹிரண்யகர்ப்பா கேள்வி மேல் கேள்விகளாகக் கேட்டது. அவ்வளவுதான் கொக்கு பெருமையாக ஆரம்பித்தது.
குரங்குகளும் தூக்கணங்குருவிகளும்
நர்மதை ஆற்றில் எப்பொழுதும் சலசல என்று தண்ணீர் ஆராவாரத்துடன் போகும். நர்மதை ஆற்றில் கலக்கும் சின்ன சின்ன நதிகள் ஒன்றின் கரையில் இலவம் பஞ்சு மரம் ஒன்று இருந்தது. இந்த மரம் தூக்கணாங்குருவிகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. எப்போதும் அந்த மரத்தில்தான் கூடுகள் கட்டும். மழை மெய்யும் காலத்தில்கூட அந்த மரத்தில் தான் கூடு கட்டும்.
ஒரு மழைக் காலத்தில் வானம் இருண்டதும் பறவைகள் பாதுகாப்பாய் கூடுகளில் அடைந்து கொண்டன. மழையோ விடாமல் பெரிதாகப் பெய்தது. அப்போது குரங்குகளின் நடமாட்டம் அந்த பறவைகள் கண்ணில் பட்டது. அந்த குரங்குகள் மரத்தடியின் கீழ் மழையிலிருந்து தப்பிக்க ஒதுங்கின.
“ஓ !குரங்குகளே! எல்லாரும் இப்படி நனைந்து விட்டீர்களே! எங்களைப்பருங்கள். எங்கள் கூட்டில் எப்படி இந்த மழையில் நனையாமல் நாங்கள் இருக்கிறோம் என்று. எப்படி எங்கள் அலகால் இந்த பாதுகாப்பான கூடுகளைக் கட்டியிருக்கிறோம் என்று பார்த்தீர்களா? உங்களுக்கு கை கால்கள் இருக்கிறது. அப்படி இருந்தும் உங்களைக் காப்பாற்றிக்கொள்ள எங்களைப் போல் கூடு கட்டிக்கொள்ளாமல் இப்படி மரத்தடியில் ஒதுங்குகிறீர்களே? கூடுகட்டியிருந்தால் இப்படி நனைய வேண்டாமே!”
தூக்கணங்குருவிகள் நல்ல எண்ணத்துடன் தான் குரங்குகளுக்கு அறிவுரை சொன்னது. குரங்குகளுக்கு ஒரே எரிச்சல் கோபம். “அது எப்படி இந்தப் பறவைகள் மழையில் நனையாமல் கூட்டில் உட்கார்ந்து கொண்டு அவர்களைக் குறை சொல்லலாம்? பிறர்க்கு உபதேசம் செய்வது ரொம்ப சுலபம். இந்த மழையில் நனைந்தால்தான் இந்த பறவைகளுக்குப் புத்தி வரும். மழை நிற்கட்டும். என்ன ஆகுதுனு பார்க்கலாம் ” கோபமாக பேசிக்கொண்டன.
மழையும் நின்றது .”என்ன செய்கிறோம் பாருங்கள்” கருவிக்கொண்டே குரங்குகள் மரத்தில் ஏறி தூக்கணாங்குருவிகளின் கூட்டைக் கலைத்து முட்டைகளை உடைத்தன. பாவம்! தூக்கணாங்குருவிகள்! குரங்குகளை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை. துக்கத்தோடு வேடிக்கை மட்டும்தான் பார்க்க முடிந்தது.
“இதனால்தான் சொன்னேன். மயில்களுக்கு அறிவுரை சொன்னது என்னுடைய தப்புதான். பேசாமல் இருந்திருக்கவேண்டும். கொஞ்சம் என்னுடைய புத்தியை உபயோகப் படுத்தியிருக்கவேண்டும். புத்திசாலிகளுக்குத்தான் அறிவுரையை ஏற்றுக்கொள்ளும் பண்பு இருக்கும். முட்டாள்களுக்கு அறிவுரை சொல்வது வீண் வேலை” தீர்க்கமுகா ஒரு பெருமூச்சோடு சொல்லி முடித்தது.
“அது சரி . மயில்களுக்கு இந்த கதையைச் சொன்னாயா? இதைக் கேட்டு அந்த மயில்கள் என்ன சொன்னது?” ராஜா பறவை கேட்டது.
“ராஜா! அந்த மயில்கள் செய்த அமர்க்களத்தைப் பார்த்திருக்கவேண்டுமே! அப்பப்பா! நான் சொல்வதை நீங்கள் நம்ப மாட்டீர்கள்! எதற்கும் உதவாதா அந்த முட்டாள் கூட்டம் என்னை வம்புக்கு இழுத்தது”.
“என்னைப் பார்த்து ஆமா! எந்த முட்டாள் அந்த அன்னத்தை அரசனாக்கியது? கேட்டார்கள். என்னைப் பயமுறுத்துகிறார்களாம்! நானும் பயந்து ஓடிவிடுவேன் என்று நினைத்தார்கள் போல். நானும் சும்மா விடவில்லை.”
“ஆமா! எந்த முட்டாள் மயிலை அரசனாக்கியது? என்று திருப்பிக் கேட்டேன். கூட்டமாக என்னைத் தாக்க வந்தது. நான் விடுவேனா! திரும்பி அடித்தேன். யாராவது நம்மை மிரட்டினால் பயந்து திரும்பக்கூடாது. தைரியமா எதிர்த்து சண்டை போட்டு ஜெயிக்கனும். அந்த சமயத்தில் சமாதானம் அப்படி இப்படி என்று தடுமாறக்கூடாது” கொக்கு தன் வீர செயலை பெருமையுடன் சொன்னது.
ஹிரண்யகர்ப்பா இதைக் கேட்டுச் சிரித்துக் கொண்டே “ஆனால் எதிரியின் பலத்தைப் பற்றித் தெரியாமல் சண்டைக்குப் போவது நல்லது இல்லை. நம்மை விடப் பலமாக இருந்தால் ஒரே அடியா அடித்துவிடுவார்கள். புத்தியோடு சண்டை போட்டு தாமதம் செய்யாமல் அங்கிருந்து வெளியில் வரவேண்டும்.”
“முட்டாள் மாதிரி மெதுவா யோசிக்காமல் சண்டை போட்டு தாமதம் செய்தால் புலியின் தோலை உடுத்திய கழுதைக்கு நடந்ததுதான் நடக்கும். அந்த முட்டாள் கழுதை புலித்தோலோடு அப்படியே நிறைய நேரம் திரிந்து கொண்டிருந்தது. அது கத்த ஆரம்பித்ததும் அதன் சுயரூபம் வெளியில் தெரிந்துவிட்டது” சொன்னது.
“ம்ம்! ஒரு கழுதை புலித்தோல் போர்த்திச் சுற்றிக்கொண்டு இருந்ததா? ஏன் அப்படிச் செய்தது?” கொக்கு அன்ன ராஜாவைப் பார்த்துக் கேட்டது.
இதோடு இந்த பகுதி முடிந்தது. புலித்தோல் போர்த்திய கழுதையின் கதையை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
நன்றி!வணக்கம்!