இதுவரை திருக்குறளின் பன்னிரண்டு அதிகாரங்களைப் பொருளோடு முந்தைய பகுதிகளில் கேட்டிருப்பீர்கள். இந்த பகுதியில் நாம் பார்க்கப்போவது பதிமூன்றாம் அதிகாரமான அடக்கமுடைமை.
அடக்கமுடைமை என்பது தான் என்ற அகங்காரம் இல்லாமல், ஆரவாரமில்லாமல், செருக்கில்லாமல் ஒழுக்கத்துடன் இருப்பது ஆகும். இந்த அதிகாரம் அடக்கமுடைமை பண்பைப் பற்றிக் கூறுகிறது. ஐம்புலன்களையும் அடக்கி தீயவழியில் செல்லாமல் நல்வழியில் ஆராய்ந்து செல்வதே அடக்கமான வாழ்வாகும்.
அடக்கமுடைமை 1
- முதல் குறள்.
“அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.“
இதில்
“அடக்கம் அமரருள் உய்க்கும்“
அதன் பொருள்
அடக்கமாகிய அறம் ஒருவனைத் தேவர் உலகுக்குக் கொண்டு சேர்க்கும்.
அடுத்து
“அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.”
இதன் பொருள்
அடக்கம் இல்லாமல் வாழ்வது இருண்ட துன்ப வாழ்க்கையில் சேர்த்து விடும்.
அதாவது
அடக்கமாகிய அறம் ஒருவனைத் தேவர் உலகுக்குக் கொண்டு சேர்க்கும். அடக்கம் இல்லாமல் வாழ்வது இருண்ட துன்ப வாழ்க்கையில் சேர்த்து விடும்.
அடக்கமுடைமை அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின்ஊங்கு இல்லை உயிர்க்கு.“
இதில்
“காக்க பொருளா அடக்கத்தை“
இதன் பொருள்
உயிர்க்கு அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் வேறில்லை.
அடுத்து
“ஆக்கம் அதனின்ஊங்கு இல்லை உயிர்க்கு.“
இதன் பொருள்
அதனால் அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் காக்க வேண்டும்.
அதாவது
உயிர்க்கு அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் வேறில்லை. அதனால் அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் காக்க வேண்டும்.
அடக்கமுடைமை அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.
- மூன்றாவது குறள்.
“செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.“
இதில்
“அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின்.”
இதன் பொருள்
அடக்கத்துடன் வாழ்வதே அறிவானது என்று அறிந்து ஒருவன் அடக்கத்துடன் வாழ்ந்தால்
அடுத்து
“செறிவறிந்து சீர்மை பயக்கும்“
இதன் பொருள்
அந்த அடக்கமானது நல்லோரால் அறியப்பட்டு அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.
அதாவது
அடக்கத்துடன் வாழ்வதே அறிவானது என்று அறிந்து ஒருவன் அடக்கத்துடன் வாழ்ந்தால் அந்த அடக்கமானது நல்லோரால் அறியப்பட்டு அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.
அடக்கமுடைமை அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.
- நான்காவது குறள்.
“நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.“
இதில்
“நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்“
இதன் பொருள்
தனது வாழ்க்கை நெறியில் மாறுபடாமல் அடக்கத்துடன் வாழ்பவனின் உயர்வு
அடுத்து
“மலையினும் மாணப் பெரிது.”
இதன் பொருள்
மலையின் உயர்வைவிட மிகப் பெரியதாகும்.
அதாவது
தனது வாழ்க்கை நெறியில் மாறுபடாமல் அடக்கத்துடன் வாழ்பவனின் உயர்வு மலையின் உயர்வைவிட மிகப் பெரியதாகும்.
அடக்கமுடைமை அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள்.
“எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து”.
இதில்
“எல்லார்க்கும் நன்றாம் பணிதல்“
இதன் பொருள்
செருக்கில்லாமல் பணிந்து அடக்கமாக வாழ்தல் எல்லோருக்கும் நல்லதாகும்.
அடுத்து
“அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து.”
இதன் பொருள்
அவர்களுள் செல்வர்களுக்கு அடக்கம் இருந்துவிட்டால் அது மற்றொரு செல்வம் போன்றதாகும்.
அதாவது
செருக்கில்லாமல் பணிந்து அடக்கமாக வாழ்தல் எல்லோருக்கும் நல்லதாகும். அவர்களுள் செல்வர்களுக்கு அடக்கம் இருந்துவிட்டால் அது மற்றொரு செல்வம் போன்றதாகும்.
அடக்கமுடைமை அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.
இந்த குறளோடு இந்த பகுதி முடிவடைந்தது. அடக்கமுடைமை அதிகாரத்தின் அடுத்து உள்ள ஐந்து குறள்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
நன்றி! வணக்கம்!