ஹிதோபதேசம்
போன பகுதியில் மந்திரி கழுகு காகத்தை ராஜாவாக நியமிப்பது ஆபத்தில் முடியும் என்று சொல்லி சித்ரவர்ணாவை எச்சரித்ததைப் பார்த்தோம். காகம் சித்ரவராணாவையே எதிர்த்துப் போர் செய்து சித்ரவர்ணாவைக் கொன்று தனக்கு முடிசூட்டிக் கொள்ள ஆசைப்படலாம் என்றும் கழுகு சொன்னது .முனிவரும் எலியும் கதையைச் சொல்லி முடித்து கொக்கும் நண்டும் கதையைச் சொல்ல ஆரம்பித்தது.
கொக்கும் நண்டும்
கழுகின் அறிவுரையைக் கேட்ட சித்ரவர்ணா இப்படியும் அப்படியும் நடந்து கொண்டே யோசனை செய்தது. சித்ரவர்ணாவிற்கு கழுகு அறிவுரை சொல்வதை நிறுத்தவில்லை என்று புரிந்தது.
“கற்பூரத்தீவை ஜெயித்துவிட்டோம். அதை ஆட்சி செய்வது சுலபமாக இருக்குமா?” சித்ரவர்ணா கேட்கக் “கொக்கு ஒன்று எல்லா மீன்களையும் தின்ன வேண்டும் என்ற பேராசையால் உயிரை இழந்தது. அதுபோல நாம் பேராசைப் பட்டால் அழிவு நிச்சயம்” கழுகு சொல்ல “நீ என்ன சொல்ல வருகிறாய் என்று எனக்குப் புரிகிறது. கொக்குக்கும் நண்டுக்கும் அப்படி என்ன நடந்தது?” சித்ரவர்ணா கேட்டது. கழுகும் கதையை ஆரம்பித்தது.
மாள்வ தேசத்தில் தாமரைப் பூக்கள் நிறைந்த பத்மகர்பா என்ற ஏரி ஒன்று இருந்தது.ஒரு நாள் ஒரு வயதான கொக்கு விரக்தியாக எங்கேயோ பார்த்துக் கொண்டு அந்த ஏரியின் கரையில் நின்று கொண்டிருந்தது. அந்த ஏரியில் வசிக்கும் மீன்கள் அங்கே வரும் பறவைகளிடம் எச்சரிக்கையாகத்தான் இருக்கும்
அந்த கொக்கோ எதை இழந்து சோகமாக இருந்தது போல் அங்கிருந்த மீன்கள் நினைத்தன. “இந்த கொக்குக்கு என்ன ஆயிற்று? இன்று அது ரொம்ப சோகமாக இருக்கிறதே!” ஒரு மீன் கேட்டது. “அதற்கு வயிறு வலியாக இருக்குமோ ?” இரண்டாவது மீன் சந்தேகமாகப் பதில் சொன்னது
“வயிறு வலியா? சும்மா யாரையும் இப்படி கேலி செய்யக்கூடாது” முதலில் பேசிய மீன் கண்டித்தது. “ஆமா! அந்த கொக்கு எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கும். திடீரென்று சாப்பிடாமல் இருக்கிறதா? அதனால்தான் சொன்னேன் வயிறு வலியாக இருக்கலாம் என்று. இதற்குப் போய் கோபித்துக் கொள்கிறாய்?” இரண்டாவது மீன் திரும்பிச் சொன்னது.
அங்கே இருந்த இலைகளுக்கு நடுவிலிருந்த நண்டு கொக்குப் பக்கத்தில் சென்றது. கொக்கைப் பார்த்து “என்ன ஆயிற்று உனக்கு? உடம்பு சரியாக இல்லையா? ஒரு மாதிரியாக இருக்கிறாயே?” கொக்கை கோபப்படுத்தாமல் கேட்டது.
உலகமே முடிவுக்கு வந்தது போல் விரக்தியோடு “என்னமோ போ! ஏதோ நடக்கிறது இங்கே! இந்த மீன்களை நினைத்தால் தான் எனக்குப் பாவமாக இருக்கிறது. என்ன ஆகப்போகிறதோ இவர்களுக்கு?” மர்மத்தோடு சொல்லி நிறுத்தியது.
“என்ன? இந்த மீன்களுக்கு என்ன ஆபத்து வரப்போகிறது?” நண்டு சத்தமாகக் கேட்டது அங்கே இருந்த மீன்களின் காதில் விழுந்தது. மீன்கள் இதைக் கேட்டதும் படப்படப்போடு கொஞ்சம் முன்னே வந்தன. ஆனால் கொக்கின் அருகில் வரவில்லை.
“இந்த மீன்களின் கதி என்ன ஆகுமோ? அதை நினைத்தால் எனக்கு உறக்கம் வருவதே இல்லை. நான் இப்படிப் பறந்து சுற்று எல்லா இடத்திற்கும் போய்விட்டு வருகிறேன் இல்லையா. அது போல ஒரு சமயம் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என்று நினைத்த போது ஒரு மரத்தின் கீழ் மீனவர்கள் சிலர் அவர்களின் வலையைச் சுத்தப்படுத்திக்கொண்டே பேசிக் கொண்டார்கள்”.
“அந்த மரத்தின் அருகில் சென்று என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று கேட்டேன். அவர்கள் பக்கத்தில் இருக்கும் ஊர்களிலிருந்து வந்த மீனவர்களாம். அவர்கள் என்ன பேசினார்கள் தெரியுமா? இந்த பக்கத்தில் உள்ள ஏரிகளில் என்னென்ன வகையான மீன்கள்,ஆமைகள்,நண்டுகள் இப்படி எவை எல்லாம் இருக்கிறதோ அதை எல்லாம் வலை வீசிப் பிடிக்கப் போகிறார்களாம்”.
“அதைக் கேட்ட பின் எனக்குத் துக்கம் அதிகமாகிவிட்டது. சாப்பிடவும் பிடிக்கவில்லை. என்னைப் போல் உள்ள பறவைகள் பறந்து தப்பித்து விடுவோம். பாவம் இந்த மீன்கள் எப்படித் தப்பிக்க முடியும்?”
“நண்டே! நீயும் தான் எப்படித் தப்பிக்க முடியும் ? என்னுடைய உணவு மீன்கள் தான். ஆனாலும் யாரோ வந்து அவர்களை ஒட்டு மொத்தமாக அழிப்பது என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை” கொக்கோ உருக்கமாகப் பேசியது.
இதைக் கேட்ட மீன்களுக்கு அதிர்ச்சி, வியப்பு எல்லாம் .கொக்கோ மீன்களின் எதிரி ஆனால் கொக்கே அவர்களுக்கு வர இருக்கும் ஆபத்தைப் பாரத்து வருந்துகிறது. “அப்படி என்ன பெரிய ஆபத்து வரப்போகிறது? கொக்கிடமே என்ன செய்வது என்று கேட்கலாமே” ஒரு மீன் முணுமுணுத்தது.
“புத்தி இருக்கா உனக்கு? கொக்கிடமா போய் கேட்பது?” மற்றொரு மீன் அதட்டியது. “அதனால் என்ன? நண்பனாக இருந்தால்கூட உதவ வரமாட்டார்கள். எதிரியாக இருந்தாலும் கொக்கு உதவத் தயாராக இருக்கிறதே” முதல் மீன் திரும்பிச் சொன்னது. முதல் மீன் சொன்னதை எல்லா மீன்களும் ஆமோதித்தன.
கொஞ்சம் முன் சென்று “பெரியவரே! நீங்கள் பறந்து நிறைய இடங்களைப் பார்த்திருப்பீர்கள்.வெளி உலகம் எப்படி இருக்குமென்று உங்களுக்கு நன்றாகத் தெரியும். அந்த மீனவர்கள் சொன்னதை நீங்கள் கேட்டீர்கள் இல்லையா? நாங்கள் என்ன செய்ய முடியும் என்று உங்களால் சொல்ல முடியுமா?” ஒரு மீன் கொக்கிடம் கேட்டது.
கொக்கு முகத்தைத் தண்ணீர் இருக்கும் திசையில் திருப்பி “ம்ம்! எனக்குத் தெரிந்து ஒரு வழி இருக்கிறது. என்ன! கொஞ்சம் மெதுவாகத் தான் செய்ய முடியும். ஆனால் உங்களுக்காக நான் எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன். கிழக்கு திசையில் ஒரு பெரிய ஏரி இருக்கிறது. ஒவ்வொரு மீனாக எடுத்துக் கொண்டு போய் உங்களை அந்த ஏரியில் சேர்த்து விட்டு விடுவேன்” என்று சொன்னது.
கொக்கின் குரலிலிருந்த கருணையைப் பார்த்து யாரும் அதைச் சந்தேகப் படவில்லை. எந்த கேள்வியும் கேட்க வில்லை. ஒவ்வொரு மீனாகக் கொக்கு எடுத்துக் கொண்டு போனது. கடைசி மீனை எடுக்க வரும் கொக்குக்காக நண்டு காத்திருந்தது. நண்பர்கள் எல்லாரும் ஏரியை விட்டுப் போனதால் நண்டுக்கு அந்த ஏரியில் இருக்க விருப்பமில்லை. அதுவும் நண்பர்களோடு கிழக்கில் உள்ள ஏரிக்குப் போக விரும்பியது.
கொக்கு வந்ததும் “என்னையும் அந்த கிழக்கில் உள்ள ஏரியில் கொண்டு போய் விடமுடியுமா? நான் என் நண்பர்களுடன் இருக்க ஆசைப் படுகிறேன். அந்த மீனவர்கள் இங்கே வரும் போது இங்கே இருக்க எனக்கு விருப்பமில்லை” நண்டு கேட்டதும் கொக்கு அதை எதிர் பார்க்கவில்லை.
“ஓ! நான் நண்டைச் சாப்பிட்டுப் பார்த்ததில்லையே? அதன் ருசி எப்படி இருக்குமோ? சாப்பிட்டுத்தான் பார்க்கலாமே!” எண்ணி “ம்! நிச்சயமாகச் செய்கிறேனே. இந்த மீனை அங்கே விட்டு விட்டுத் திரும்பி வந்து உன்னைக் கூட்டிக் கொண்டு போகிறேன் .தயாராக இரு” சொல்லி விட்டு கொக்கு கடைசி மீனோடு பறந்து போனது. நண்டும் கொக்குக்காக அந்த ஏரியின் கரையில் காத்திருந்தது.
அந்த நண்டை எப்படி எடுத்துக் கொண்டு போவது என்று முதலில் கொஞ்சம் குழப்பமாக இருந்தது. நண்டின் மேல் இருந்த கரடி முரடான ஓட்டால் கொக்கால் அதை வாயால் கவ்வ முடியவில்லை. அதனால் கொக்கு குனிந்து நண்டை முதுகில் ஏறச் சொன்னது.
நண்டுக்குப் பறந்து பழக்கம் இல்லாததால் கொக்கின் கழுத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டது. அதே சமயத்தில் கொக்கை காயப்படுத்தவில்லை. பறக்க ஆரம்பித்ததும் நண்டுக்குச் சுகமாக இருந்தது. மெதுவாகக் குனிந்து கீழே பூமியைப் பார்த்தது.
“அப்படிப் பார்த்த போது ஓர் இடத்தில் ஏதோ வித்தியாசமாக இருந்ததைப் பார்த்தது. எங்கே பார்த்தாலும் எலும்புகள். “அம்மாடி! எவ்வளவு எலும்புகள்! இந்த எலும்புகள் எப்படி இங்கே வந்தன?” கொக்கிடம் கேட்டது. “என்ன கேட்கிறாய்?” கொக்கு திரும்பிக் கேட்டது. காற்றின் சத்தத்தில் நண்டு கேட்டது கொக்கின் காதில் விழவில்லை. “சரி! கீழே இறங்கிய பின் சொல்லுகிறேன்”நண்டு சத்தமாகச் சொன்னது.
நண்டு மறுபடியும் கீழே குனிந்து பார்த்தது. கல்லின் மேல் எலும்புகள்! புல்லின் மேல் எலும்புகள்! எங்கே பார்த்தாலும் எலும்புகள்! “ஏதோ சரியில்லை இங்கே! பக்கத்தில் ஏரியும் இல்லையே?” நண்டின் மனதில் ஓர் எச்சரிக்கை உணர்வு. அதே சமயத்தில் கொக்கு ஒரு கல்லின் மேல் இறங்கி நின்றது.
“இப்போதே ஏதாவது செய்தால் தான் என்னால் தப்பிக்க முடியும். ஏதும் செய்யாவிட்டால் என் கதி அதோ கதிதான். ஆபத்து வரும் என்று தெரிந்த உடனே ஏதாவது செய்ய வேண்டும். பயத்தோடு வாழ்வதை விட எதிர்த்துப் போராடு சாவதே மேல். போராடினால் ஒரு வேளை உயிர் பிழைப்பதற்கு வாய்ப்பாவது இருக்கும்” எண்ணிக்கொண்டே நண்டு நகத்தால் கொக்கின் கழுத்தை ஆழமாக் குத்தியது. கொக்கு தலைகீழாகக் கீழே விழுந்தது.
“அதனால் தான் மகாராஜா! கற்பூரத்தீவை வென்றுவிட்டோம் என்று பேராசையில் எதுவும் செய்ய முடியும் என்று நினைக்கக் கூடாது .ஹிரண்யகர்பா கற்பூரத்தீவைக் கைப்பற்ற முயற்சி செய்து கொண்டேதான் இருக்கும். மேகவர்ணாவிடம் கற்பூரத்தீவை ஒப்படைத்தால் கற்பூரத்தீவை அது காப்பாற்றும் என்று நம்ப முடியாது” கழுகு சொல்லி முடித்து சித்ரவர்ணா அது சொல்வதை இப்போதாவது கேட்கும் என்ற நம்பிக்கையில் அதைப் பார்த்தது.
இந்த பகுதி இதோடு முடிவடைந்தது. அடுத்த பகுதியில் சொல்லப் போகும் கதையை மறக்காமல் வந்து கேளுங்கள்.
நன்றி! வணக்கம்!