ஹிதோபதேசம்
இதற்கு முந்தைய பகுதியில் தீர்க்கமுகா விந்திய மலையில் இருக்கும் மயில்களுடன் நடந்த விவாதத்தைப் பற்றி ஹிரண்யகர்பாவிடம் சொல்வதைப் பார்த்தோம். மயில்களிடம் அவர்கள் நாட்டை விட்டுவிட்டு கொக்கின் நாடான ஜம்புத்தீவுக்கு வருமாறு கொக்கு சொல்ல மயில் வீரர்களுக்குக் கோபம் வந்துவிட்டது. கொக்கு முயல் யானையின் கதையையும் ஹிரண்யகர்ப்பாவிற்கு சொன்னது.
இந்த பகுதியில் இடம் பெறும் போர் தொடுத்தல் பகுதியின் மூன்றாவது கதையில் அந்த முட்டாள் கொக்கால் கற்பூர தீவுக்கும் ஜம்பு தீவுக்கும் இடையில் எப்படிப் போர் தொடங்குகிறது என்று பார்ப்போம்.
கொக்கால் ஆரம்பமான போர்
சிறகுகளை அடித்துக்கொண்டே பேசிய முட்டாள் கொக்கின் குரலில் ஏதோ சாதித்தது போல் ஒரே பெருமை. “பெருமைக்குரிய அரசே! அந்த மயில்கள் உங்களைத் தரக்குறைவா பேசியது எனக்கு உங்களை அவமதித்தது போல் இருந்தது. நானும் அவர்களுக்குக் குறைந்தவன் இல்லை. நீங்கள் சொல்வது போல் எங்கள் ராஜா அதிகாரம் செல்வாக்கில்லாதவர் இல்லை. அவரால் மூன்று உலகத்தையும் ஆள முடியும்! இப்படித் திருப்பி கொடுத்தேன்” என்று நிறுத்தியது.
எங்கே எப்படிப் பேசவேண்டும் என்று இந்த கொக்குக்குச் சுத்தமாகத் தெரியாது போல். “நான் இப்படிச் சொன்னதும் அந்த மயில்களுக்கு ரொம்ப கோபம் வந்துவிட்டது. பறந்து வந்து என்னைக் கொத்த என் மேல் வந்து விழுந்தார்கள். என்னைத் திட்டவும் செய்தார்கள். தரதர என்று அவர்களின் அரசன் முன் இழுத்துக் கொண்டு போனார்கள். எல்லாரும் சேர்ந்து என்னைக் கண்டித்தார்கள். அவர்கள் அரசனிடம் “அரசே! இந்த திமிர் பிடித்த கொக்கு நம் நாட்டிற்கு வந்து உங்களையே குறை சொல்கிறது” என்று முறையிட்டார்கள்.”
மயில்களின் ராஜாவான சித்ரவரணா என்னை மேலும் கீழும் பார்த்து “யார் நீ? உன்னுடைய நாடு எது?” என்று கேட்டது. அப்போது என்னை இழுத்துக் கொண்டு வந்த பறவைகளிலிருந்த ஒரு கழுகு “இவனா! இவன் கற்பூரத்தீவின் அரசனான ஹிரண்யகர்ப்பாவிடம் வேலை செய்பவன்” சொல்லிக் கொண்டே என்னிடம் வந்தது.
ஒரு பச்சைக்கிளியும் “மகாராஜா! கற்பூர தீவு மட்டும் இல்லை அதைச் சுற்றி உள்ள தீவுகளும் ஜம்புத் தீவுக்கே சொந்தம். நீங்கள் தான் எல்லாவற்றிற்கும் ராஜா!” அதன் பங்கிற்குப் பேசியது. சித்ரவர்ணாவிற்கு அதைக் கேட்டு கர்வம் தாங்கவில்லை. “உண்மைதான் நீ சொல்வது” என்று ஆமோதித்தது.
இதை எல்லாம் கேட்ட பின் நான் சும்மா இருப்பேனா? நான் எப்படி சித்ரவர்ணாவை ராஜாவாக ஏற்றுக் கொள்ள முடியும்? “சும்மா பேசினால் மட்டும் யாராலும் அரசனாக முடியாது. எங்கள் ராஜாவான ஹிரண்யகர்ப்பாவுக்கு மட்டும் தான் ஜம்புத் தீவுக்கு ராஜாவாக இருக்கத் தகுதி இருக்கிறது” அழுத்தமாகவே சொன்னேன்.
மறுபடியும் கிளி மூக்கை நுழைத்தது. “எப்படி இந்த பிரச்சனையை முடிவுக்குக் கொண்டுவருவது?” என்று கேட்டது. “போர் தான் வேறென்ன?” நான் சவால் விட்டேன்.
அந்த கூட்டத்தின் புத்திசாலி மந்திரி சர்வாங்யா என்ற பிராமினி வாத்து. அந்த வாத்துக்கு நாட்டை எப்படி ஆள வேண்டும் என்ற எல்லா விதிகளும் சாஸ்திரங்களும் தெரியும்.அந்த வாத்தும் எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தது.
“ஆமாம் போர் ஒன்றுதான் தீர்வு . நீ போய் உன் அரசனிடம் போருக்குத் தயாராகச் சொல்” மயில் அரசன் எனக்குக் கட்டளை இட்டது.
“நான் போய் சொல்ல மாட்டேன். நீங்களே உங்கள் தூதனை அனுப்புங்கள்” திருப்பி சொல்லிவிட்டேன். அந்த ராஜாவுக்கு நான் ஏன் பணிய வேண்டும்? அவர்களுக்குள் யாரை அனுப்புவது என்று விவாதம் நடந்தது.
அப்போது கழுகு “எதிரியின் பலவீனத்தைப் புரிந்து கொள்ளும் புத்திசாலியான ஒருத்தரை அனுப்புவதுதான் நல்லது” என்று சொன்னது.
சித்ரவர்ணா கிளியைப்பார்த்து “நீ இந்த கொக்குடன் போய் அவனின் அரசனிடம் போருக்குத் தயாராகும்படி சொல்” என்றது.
“என்னைப் போகச்சொல்வது எனக்குப் பெருமைதான். ஆனால் எனக்கு இந்த கொக்குடன் செல்ல விருப்பமில்லை. எனக்கு அவன் மேல் நம்பிக்கையே வரவில்லை. மனம் முழுவதும் தீய எண்ணங்கள் உடையவன். என்னால் சிறிது நேரம் கூட அவனோடு இருக்க முடியாது. இந்த முட்டாள்களால் நல்லவர்களுக்கும் துன்பம்தான். இவர்களைப் போல் உள்ளவர்களுடன் கூட இருப்பதும் நமக்கு நல்லதில்லை.”
“ஒரு வாத்துக்கும் காடைக்கும் பொல்லாத காகத்துடன் இருந்ததால் நடந்ததைப் பார்த்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்” கிளி சொல்லி முடித்தது. “இது என்ன கதை? வாத்துக்கும் காடைக்கும் என்ன நடந்தது? காகம் அப்படிச் செய்தது என்ன?” மயில் ராஜா கிளியைப் பார்த்துக் கேட்டது.
கிளி வாத்தும் காகமும் கதையைச் சொல்ல ஆரம்பித்தது.
வாத்தும் காகமும்
உஜ்ஐயனி போகும் வழியில் மரங்கள் நிறைய இல்லாததால் வெயிலின் தாக்கம் அதிகமா இருந்தது. ஆனால் அந்த வழியில் ஒரு பெரிய அரச மரம் படர்ந்து இருந்தது. வழிப்போக்கர்களுக்கு ஓய்வெடுக்க வசதியாக இருந்தது. அந்த மரத்தில் ஒரு வாத்தும் காகமும் வசித்து வந்தன.
ஒரு நாள் ஒரு பயணி வெய்யிலில் நடந்து வந்த களைப்பால் அந்த மரத்தடியின் கீழ் படுத்து நன்றாக உறங்கிவிட்டார். சூரியனின் திசை மாற மாற ஒரு சமயத்தில் சூரிய ஒளி நேராக அந்த பயணியின் மேல் விழுந்தது. அந்த வாத்து அந்த பயணியின் மேல் இரக்கப் பட்டு தன் சிறகுகளை நன்றாக விரித்து சூரிய ஒளி அந்தப் பயணியின் மேல் விடாமல் செய்தது.
பயணியின் உறக்கமும் தடையில்லாமல் தொடர்ந்தது. ஆனால் அந்த பொல்லாத காகத்தால் இதைப் பொறுக்க முடியவில்லை.
எல்லாரிடமும் கருணை காட்ட வேண்டிய அவசியமில்லை. எல்லாரிடமும் கருணையோடு நடக்க வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள். காகம் வாத்தின் கருணையைப் பார்த்து சந்தோஷப்பட்டு அப்படியே போயிருக்கலாம்.
எல்லாரிடமும் கருணை காட்ட வேண்டிய அவசியமில்லை என்று ஒரு தீய எண்ணத்துடன் வாத்தின் இரக்கத்தைப் பொறுக்காமல் அந்த பயணியின் தடையில்லாத உறக்கத்தைக் கெடுக்க நினைத்த காகம் அந்த பயணியின் வாய்க்கு நேராகப் போய் எச்சமிட்டது.
திடுக்கிட்டு எழுந்த பயணியின் கண்களுக்கு வாத்துதான் தெரிந்தது. கோபத்தில் வில்லையும் அம்பையும் எடுத்து அந்த வாத்தைக் கொன்று விட்டான். பாவம் வாத்து! காகத்தின் பக்கத்தில் வசித்ததால் தான் அதற்கு இப்படி நடந்தது.
வாத்துக்கு மட்டும் இல்லை இந்த கதி. காகத்துடன் சேர்ந்து பறந்த காடைக்கும் இதுதான் நடந்தது.
ஒரு பறவைகள் கூட்டம் கருடனைத் தரிசிக்க யாத்திரைக்குச் சென்றது. ஒரு காடையும் காகத்துடன் சேர்ந்து கருடனைத் தரிசிக்கச் சென்றது. பறக்கும் வழியில் ஒரு இடையன் தலையில் தயிர் பானையுடன் நடந்து போய்க்கொண்டிருந்தான். காகம் சும்மா இல்லாமல் நடுவில் அந்தப் பானையிலிருந்து தயிரைக் கொத்திக் கொத்திச் சாப்பிட்டது.
ஓய்வெடுக்கலாம் என்று அந்த இடையன் ஓர் இடத்தில் பானையைக் கீழே வைக்கும் போது தயிர்ப் பானையில் குறைந்து போனதைக் கவனித்தான். எப்படிக் குறைந்ததென்று சுற்றிப் பார்த்தான்.
அங்கே காகமும் காடையும் இருந்தது. காகம் வரும் ஆபத்தை உணர்ந்து அங்தே இருந்து பறந்து போயிடுச்சு. பாவம் காடை! வரும் ஆபத்தை உணரவில்லை. அந்த இடையன் கோபத்தில் காடையைக் கொன்று விட்டான்.
“அதனால் தான் தீய எண்ணங்கள் உள்ளவர்களுடன் வசிக்கவோ இல்லை பயணிக்கவோ கூடாது. நான் மட்டும் தனியாகப் போகிறேன்” கிளி அரசனைப் பாரத்து சொன்னது.
இதைக் கேட்டு எனக்கு மனம் புண்ணாகிவிட்டது .என்னைக் கெட்டவன் என்று கிளி சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை.
“ஏய் கிளி! என்னை எப்படிக் கெட்டவன் என்று சொல்லலாம்? உன்னையும் உன் அரசனையும் மரியாதையோடுதானே பேசினேன்?” நான் கேட்டேன்.
பச்சைக்கிளி அதை ஒப்புக்கொள்ளாமல் “நீ என்ன சொன்னாலும் எப்படி நடந்து கொண்டாலும் உன்னை நான் நம்பத் தயாராகவில்லை. தகுந்த பருவத்தில் மலர்கள் பூக்காமல் வேறு பருவத்தில் பூத்தால் சந்தேகம்தானே வரும். அது இயற்கை இல்லையே!”
“உனக்குத் தெரியாதா நான் உன் மேல் சந்தேகப்படுகிறேன் என்று? உன்னுடைய குள்ளநரித்தனத்தால் இரண்டு அரசர்களிடையே சண்டையை ஆரம்பித்து வைத்திருக்கிறாய். நீ ஒன்றும் தெரியாதது போல் நடிப்பது எனக்குத் தெரியும்” கிளி சொன்ன பின்பு மயில் ராஜா என்னை இங்கே அனுப்பியது.
“கிளியும் சீக்கிரமா இங்க வந்து செய்தியைச் சொல்லிவிடும். அதன் பின் நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்” கொக்கு ஹிரண்யகர்ப்பாவிடம் சொன்னது.
அப்போது அங்க இருந்த மந்திரி “கடவுளே! இந்த முட்டாளின் செயலால் என்ன நடக்கப்போகிறதோ? நீ தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும். எவ்வளவு பெரிய ஆபத்தை உண்டாக்கியிருக்கிறோம் என்று கொஞ்சமும் உணர்ந்த மாதிரி தெரியவில்லை. ஞானிகள் எப்பொழுதும் போரைத் தவிர்க்க என்ன செய்ய முடியுமோ அதைச் செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் இந்த முட்டாள் கொக்கோ போருக்கு வழி செய்துவிட்டு வந்திருக்கிறது” என்று கவலையோடு சொன்னது.
“இப்போது எதுவும் செய்ய முடியாது. எதையும் மாற்றவும் முடியாது. வரும் பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்றுதான் பார்க்க வேண்டும்” ஹிரணயகர்ப்பா குழப்பத்துடன் சொன்னது.
இந்த முட்டாள் கொக்கால் வந்த பிரச்சனையால் என்ன நடந்தது என்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.