ஹிதோபதேசம் ஓர் அறிமுகம்
வணக்கம்.
இது ஒரு புதிய தொடர். இந்த பகுதியில் ஹிதோபதேஷத்தில் இருந்து கதைகள் இடம் பெறும். நம் நாட்டில் கதைகளுக்கு ஒரு பாரம்பரியமே உண்டு. அதில் ஹிதோபதேஷம் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஹிதோபதேஷம் நிறைய சிறு கதைகள் நிரம்பிய நூல். ஹிதோபதேஷம் என்ற சொல்லுக்கு நல்ல உபதேசங்கள் அல்லது அறிவுரைகள் என்று பொருள். இந்த கதைகளில் வாழ்க்கைக்கு வேண்டிய நீதிகள் உள்ளது.
இந்தக் கதைகள் கி.பி 5ம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாமென்று சொல்கிறார்கள். சில கதைகள் அந்த காலத்திற்கு முன்பு உள்ள கதைகளில் இருந்து எடுத்து சொல்லப்பட்டிருக்கிறது. இன்னும் சில கதைகள் இந்த ஹிதோபதேஷத்தில் மட்டும் இருக்கின்றது. இந்த தொடர் கதைகளை எழுதியவர் நாராயணா என்பவர். தவளசந்திரா என்ற அரசன் ஆண்ட காலத்தில் இதை நாராயணா என்பவர் எழுதியிருக்கிறார். இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் மேற்கு வங்காளத்தின் அருகில் இந்த மன்னர் ஆட்சி செய்து இருக்கலாமென்று வல்லுநர்கள் சொல்கிறார்கள்
பஞ்ச தந்திரம், ஹிதோபதேசம் இரண்டிற்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது. அரசன் அவனுடைய மகன்களுக்குப் படிப்பிலும் ,அரசாள்வதிலும் ஆர்வம் இல்லாமல் இருந்ததைப் பார்த்து கவலைப்பட்டு ஓர் அறிவுமிக்க குருவிடம் செல்கிறான். அந்த குருவிடம் தன் மகன்களுக்கு நல்ல அறிவுரை சொல்லி அவர்களுடைய அறியாமையை அகற்றும் படி கேட்கிறான். அந்த குருவோட பெயர் விஷ்ணு ஷர்மா.
அவர்தான் கதைக்குள்ள கதைகளைப் புகுத்தி ராஜகுமாரர்களுக்கு புரியும்படி சொல்கிறார். இந்த கதைகளில் மனிதர்களோடு பறவைகள், விலங்குகள் போன்ற காதாபத்திரங்களும் இடம் பெறும். அந்தக் கதைகளைக் கேட்கும்போது நமக்கும் அந்த கதைகளோடு தொடர்பு உண்டாகிறது. இந்தக் கதைகள் அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் குழப்பம், பிரச்சனைகள் இதற்கெல்லாம் ஒரு தீர்வு கிடைக்க உதவுகிறது. நீதி நெறிகள் கதைகளாகச் சொல்லப்படுவதால் சுலபமாக மனதில் பதிந்து விடும். நகைச்சுவையோடு நாராயாண இந்தக் கதைளை எழுதியிருக்கின்றார்.
இந்த ஹிதோபதேஷத்தில் நான்கு பகுதிகள் உள்ளது. நண்பர்களைக் கவர்வது, நண்பர்களை இழப்பது, போர்தொடுத்தல், சமாதானம் செய்வது இதுதான் அந்த நான்கு பகுதிகள். இதெல்லாம் ராஜகுமாரர்களுக்கு பொருத்தமா இருக்கும். இப்போது எப்படி இந்த கதைகள் ஆரம்பமானதென்று பார்ப்போமா?
ஹிதோபதேசம்
பாடலிபுத்திரம் கங்கைக் கரையில் உள்ள ஒரு நகரம். அதன் ராஜா சுதர்சனன் நீதியும் கருணையும் உள்ள ராஜா. ஒரு நாள் அந்த ஊரில் உள்ள ஒரு புத்திசாலியான நபர் அறிவு,ஞானம் இதெல்லாம் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமென்று சொல்லிக் கொண்டிருந்தார்.
“நமக்குப் புரியாத அறிவு சார்ந்த விஷயங்களை, ஞானம் இருந்தால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். நம் மனதில் உள்ள சந்தேகங்களுக்கு விடைகள் கிடைக்கும். சந்தேகங்கள் நீங்கினால் இந்த உலகத்தில் நடப்பதை சரியாக புரிந்து கொள்ளமுடியும். அந்த ஞானம் இல்லை என்றால் இந்த உலகத்தில் நடப்பதை புரிந்து கொள்ள முடியாத குருடனாகத்தான் இருக்க முடியும். இளமை, செல்வம்,அதிகார மமதை, சுயநலம் இந்த குணங்கள் ஒருவித்தில் குறைபாடாக இருக்கலாம். இந்த நான்கு குறைபாடுகளும் ஒருவரிடம் இருந்தால் எவ்வளவு மோசமாக இருக்கும்?”
இப்படி அவர் பேசியதைக்கேட்ட ராஜா சுதர்சனனுக்கு கவலை வந்தது. ஒரு ராஜாவா இருந்தால் நிறைய முடிவுகளை எடுக்கும் திறமை வேண்டும். மக்களுடைய நலனில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
நாட்டை காப்பாற்ற எல்லா விவரங்களையும் தெரிந்திருக்கவேண்டும். பாதுகாப்பு, விவசாயம், கல்வி இப்படி மக்களுக்குத் தேவையானவற்றை அறிந்து அதற்கேற்ப முடிவுகளை எடுக்கவேண்டும். ராஜாவுக்கு நான்கு மகன்கள் இருந்தார்கள். ஆனால் என்ன பயன்? யாருக்கும் அரசாள்வதில் ஆர்வம் இல்லை.
“ஞானத்தைப் பற்றிப் பேசிய மனிதர் என் மகன்களுடைய குணங்களைப் பற்றி பேசிகின்ற மாதிரியே இருக்கிறதே! அவர்களுக்குப் படிப்பிலும் ஆர்வம் இல்லை. அரசுக்குரிய பொறுப்புகளும் தெரியவில்லை. வயசும் போதாது. அனுபவமும் இல்லை. ராஐகுமாரர்களா இருப்பதால் செல்வமும் அலட்சியமும் நிறைய இருக்கிறது.. இதனால்தான் அவர்கள் எதுக்கும் கவலைப்படாம சுயநலமா இருக்காங்க. அந்த நான்கு குறைபாடுகளும் என் மகன்கள் கிட்ட இருக்கிறது. அவங்கதா் எனக்குப்பின் இந்த நாட்டைஆளவேண்டும்? எப்படி அவர்களால் அது முடியும்? மக்களைப் பாதுகாத்து நாட்டை எப்படி காப்பற்றப்போறாங்க? ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது. அவர்களை இப்போது திருத்தவில்லை என்றால் நான்என் கடமையைச் சரியாக செய்யவில்லை என்றுதானே சொல்வார்கள். அவர்கள் திருந்தாமல் இருந்தால் அவர்களே அவர்களுக்கு எதிரியாயிடுவார்கள். வாசனை இல்லாத மலரைப்போலத்தான் ஒரு மனிதனுக்கு ஞானம் இல்லையென்றால். இப்போதே நான் அவர்களை மாற்ற ஏதாவது பண்ணவேண்டும். இல்லையென்றால் எப்பவுமே அவர்கள் திருந்த மாட்டார்கள்.”
இப்படி ராஜா நினைத்து ஒரு நல்ல குருவைத் தேடி கண்டுபிடிக்க வேண்டும் என்று எல்லா படித்த ,அறிவுள்ள மந்திரிகளை ராஜசபைக்கு வரச்சொன்னான்.
“என் மகன்கள் நான்கு பேரும் எப்பவும் ஏதாவது பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டே இருக்கிறார்கள். உங்களில் யாராவது அவர்களுக்கு எடுத்துச் சொல்லிப் புரியவைக்க முடியுமா?அவர்களுக்குப் புரிய வைக்க ஒரு நல்ல குரு கிடைக்குமா?” ராஜா ஆதங்கத்தோடும் கவலையோடும் கேட்டான்.
மந்திரிகளுக்கு அவனுடைய கவலை புரிந்தது. ராஜகுமாரர்களின் குணமும் அவங்களுக்குத் தெரியும். சுதர்சனன் ஒரு நல்ல ராஜா. அதே சமயத்தில் ஒரு நல்ல தகப்பனும் கூட. அப்போது தான் “என்னால் முடியும்” என்று ஒரு குரல் கேட்டது. அந்த குரலுக்கு சொந்தக்காரர் பெயர் விஷ்ணு ஷர்மா. விஷ்ணு சர்மா ஒரு சிறந்த அறிவாளி ,ஞானியும்கூட. அவருக்கு ஒரு நாட்டை ஆள என்ன தகுதிகள் வேண்டுமென்று நல்ல தெரியும்.
“மகாராஜா இளவரசர்களுக்கு என்னால் அறிவுரைகளைச் சொல்லி மாற்ற முடியும். அவர்களுக்கும் புரிந்துகொள்ளும் ஆற்றல் உள்ளது. எல்லாமே அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும் விதத்தில்தான் இருக்கிறது. எனக்கு ஒரு ஆறு மாதம் கொடுங்கள். அந்த ஆறுமாத்திற்குள் நான் அவர்களுக்கு நாட்டை ஆள தகுதியுள்ளவர்களாக மாற்றமுடியும். ”
விஷணுஷர்மா உறுதியா சொன்னதைக் கேட்ட ராஜாவுக்கு விஷ்ணுஷர்மா ஒரு நல்ல குரு என்று புரிந்தது. ஆறுமாதத்தில் ராஜகுமாரர்களிடம் மாற்றம் வருமென்று ராஜாவுக்கு திருப்தியா இருந்த்து. ராஜாவுக்கு மகன்கள்கிட்ட மாற்றம் கட்டாயம் வருமென்று நம்பிக்கையும் வந்தது
.அரண்மனையிலேயே விஷ்ணுஷர்மா பாடம் நடத்த ஏற்பாடும் செய்தார்கள். விஷ்ணுஷர்மாவுக்கு அந்த ராஜகுமாரர்களுக்கு உடனே பாடங்களை ஆரம்பித்தால் தான் அவர்களுக்குப் புரியவைக்கமுடியுமென்று தெரியும். பாடங்களை ஆரம்பித்த முதல் நாள் நேராக அவர்களுக்கு அறிவுரைகளை ஆரம்பிக்காமல், கதைகள் சொல்ல ஆரம்பித்தது ராஜகுமாரர்களுக்கு வியப்பா இருந்தது.
“என்ன ராஜகுமாரர்களே! வியப்பா இருக்கா உங்களுக்கு? இப்ப கதைதான் சொல்லப்போகிறேன். ஒரு காக்கா ,ஆமை, மான் அப்புறம் ஒரு எலி இதெல்லாம் இந்தக் கதையில் வரும்.” அவர் சொல்ல ராஜகுமாரர்கள் அதை எதிர்பார்க்கவில்லை. வெறுப்போடு அறிவுரைகளை எதிர்பார்த்தவர்கள் கதை என்று சொன்னதும் சந்தோஷத்தில் குதிக்க ஆரம்பித்தார்கள்.ஒரே குரலில் “குருவே கதை கேட்க ஆர்வம் இருக்கோம்” என்று சொன்னார்கள். விஷ்ணுஷர்மாவும் கதையை ஆரம்பித்தார்.
“இந்தக் கதையில் எப்படி நண்பர்களைக் கவர்வதென்று சொல்லப்போகிறேன். சிறந்த நண்பர்கள் இருந்தால் போதும், செல்வமே இல்லாமல் ஏழையா இருந்தால்கூட நண்பர்கள் உதவியோடு எதையும் சாதிக்கமுடியும். காக்கா, மான், ஆமை, எலி இந்த நாலு விலங்குகளுடைய கதையைச் சொல்லப்போகிறேன். நல்லா கவனமா கேளுங்கள்.” ராஜகுமாரர்களுக்கு ஆர்வம் தாங்கவில்லை. “சொல்லுங்கள், சொல்லுங்கள்” நச்சரிக்க ஆரம்பித்தார்கள்.
விஷ்ணுஷர்மாவும் கதையை தொடர்ந்தார்.
காக்கா, ஆமை, மான் மற்றும் ஒரு எலியின் கதை
கோதாவரி நதிக்கரையில் ஒரு பெரிய இலவ மரம் இருந்தது. அந்த மரத்தில் ஒவ்வொரு இரவும் நிறைய பறவைகள் வந்து ஓய்வெடுக்கும். ஒரு ராத்திரி லகுபட்னக்கானு ஒரு காக்கா அந்த மரத்தில் வந்து தங்கியது. அதோடு பெயருக்கு மிக வேகமாகப் பறக்கும் பறவை என்று பொருள். மறுநாள் காலையில் சூரிய உதயம் ஆரம்பிக்கும் நேரத்தில் முழித்துக்கொண்டு இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமா, இல்லை வேற இடத்துக்கு பறந்துபோகலாமானு சோம்பல் முறித்துக்கொண்டே எந்திரித்தது. சிறகுகளை விரித்து படபடனு ஒரு தடவை அடித்துவிட்டு இளம்காலைநேரத்தில் சுத்திப் பார்த்தது. நல்லா விடிஞ்சதுக்கு அப்புறம் போகலாமானு கொஞ்சம் குழப்பத்தோட யோசித்தபோது ஓர் உருவம் நடந்து வருவதைப் பார்த்தது. “ஓ, அது ஒரு வேடன் மாதிரி இல்லை இருக்கிறது. எவ்வளுவு எச்சரிக்கையோடு வருகிறான்!” காக்காவுக்கு ஒரு பயம் வந்தது.
“இந்த வேடன் ஏன் இங்க வரான்? இங்க என்ன பண்ணப்போறானு தெரியலையே? என் கண்ணுக்கு இன்னொரு யமதர்மராஜன் மாதிரிதான் தெரிகிறான். இங்கேயே இருந்து என்னப் பண்ணப் போகிறானு பார்க்கனும்.”
வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்கும்போது சிலருக்குத் தயக்கம், பயம் ,சோகம் இப்படி எல்லாம் இருக்கும். பிரச்சனைகள் வரும்போது எதுவுமே இல்லாத மாதிரி நடிப்பது முட்டாள்தனம். அந்தப் பிரச்சனைகள் அதுவாகவே சரியாகிவிடுமென்று சிலர் நம்புவார்கள். ஆனால் புத்திசாலி அப்படி கவனக்குறைவா இருக்கமாட்டான். புத்திசாலிகள் பிரச்சனைகளால் வரும் ஆபத்தை உணர்ந்து எப்படி தீர்க்க வேண்டும் என்று முடிவெடுப்பார்கள். பிரச்சனைகளை எதிர்கொள்ள தயாரா இருப்பார்கள். லகுபட்னகாவும் தைரியமா என்ன பிரச்சனை வந்தாலும் எதிர்கொள்ள தயாரா இருந்தது. பயத்தில் ஓடி ஒளியாமல் அந்த வேடன் அந்த அதிகாலை நேரத்தில் என்ன பண்ணப்போகிறான் என்று பார்க்க அங்கேயே இருக்க முடிவு பண்ணியது.
வேடனுக்கு அந்த புத்திசாலி காக்கை அவனைத் தொடர்ந்து கவனிக்கிறது தெரியாது. சுத்தி சுத்தி பார்த்து விட்டு மரங்களுக்கு நடுவில் வெட்டவெளி இடத்தில் முதுகிலிருந்த மூட்டையை கீழே தொப்புனு போட்டான். ஒரு பெரிய வலையை எடுத்து கிழே விரித்துப் போட்டான். கொண்டுவந்த மூட்டையில் இருந்து தானியங்களை அந்த வலையில் பரப்ப ஆரம்பித்தான். “ஓ, அவன் தானியங்களை அந்த வலையில் பரப்பி வச்சிட்டிருக்கான்.” அந்த காக்கா வியந்தது. அந்த வலை வெளியில் தெரியாமல் தானியத்தால் மூடி ஒரு போர்வை மாதிரி செய்தான். அப்பத்தான் காக்காவுக்கு புரிந்தது அவன் பறவைகளைப் பிடிக்கப் பொறி வைத்திருக்கிறான் என்று. பொறி வைத்து முடித்ததும் இரண்டு பெரிய பாறைகளுக்குப் பின்னாடி மறைந்து நின்று அந்த பொறியில் மாட்டிக்கொள்ளும் பறவைகளுக்கு காத்திருந்தான்.
அந்த சமயத்தில் புறாக்கள் கூட்டம் ஒன்று அந்த இடத்துக்கு மேல் பறந்து வந்தது. அந்தக் கூட்டத்தின் தலைவனுடைய பெயர் சித்திரக்ரீவா. தலைவனும் புறாக்களும் அங்க பரப்பப்பட்டிருந்த தானியங்களை பார்த்தன. “இவ்வளுவு தானியங்கள் இங்க எப்படி வந்தது ?அது உண்மையா?” அந்தப் புறாக்கள் வியந்தன. அந்தப் புறாக்களுக்கு அந்த தானியங்களை சாப்பிட ஆசை வந்தது. ஆனால் புறாக்களின் தலைவனுக்கு சந்தேகம் வந்திடுச்சு.
“இருங்கள்! இருங்கள்! ஏதோ சரியில்லை இதில். மனிதநடமட்டமே இல்லாத இடம் இது. பக்கத்தில் வீடுகளும் இல்லை. வயல்களும் இல்லை. எப்படி இவ்வளவு தானியங்கள் இங்கே வந்தது. அந்த தானியங்களைச் சாப்பிட நாம அங்க போகிறது நல்லதுக்கில்லை. நாம கவனமா இல்லை என்றால் நமக்கும் பேராசைப்பட்ட அந்த பயணியின் நிலைதான் வரும். தங்கத்தின் மேல் உள்ள ஆசையால் புலியை நம்பி மோசம் போன கதைதான் நமக்கும் நடக்கும்.
சதுப்பு மண்ணில் மாட்டிக்கொண்டு வெளியில் வரமுடியாமல் கடைசியில் அந்த புலிக்கு இரையான கதை போல் ஆகிவிடும்.” சித்ரக்ரீவா சொல்ல, “என்ன கதை? யார் அந்த பயணி? எங்களுக்கு அந்த கதையைச் சொல்லுங்கள்,” புறாக்கள் தலைவனிடம் கெஞ்சினார்கள். சித்ரக்ரீவா அந்த பேரசை பிடித்த பயணியின் கதையைச் சொல்ல ஆரம்பித்து.
இந்தப் பகுதி இதோடு முடிந்தது. சித்ரக்ரீவன் சொல்லப்போகிற கதையை மறக்காமல் அடுத்த பகுதியில் வந்து கேளுங்கள். நன்றி! வணக்கம்!
ஹிதோபதேசம் பற்றி இங்கே மேலும் படிக்கவும். 199313
அடுத்த பகுதி: