ஹிதோபதேசம்
போன பகுதியில் மயில் ராஜா காகம் மேகவர்ணாவை ஜம்புத்தீவின் ராஜாவாக அறிவிக்க விரும்பியதும் மந்திரி கழுகு அதைத் தடுத்ததையும் பார்த்தோம். காகம் அவர்களுடைய ஒற்றனாக இருந்தும் கூட கழுகு அதை நம்பவில்லை. கழுகு காகம் போலத் தகுதியில்லாதவர்களை மன்னன் ஆக நியமிப்பது பெரும் ஆபத்தில் முடியும் என்று அதற்கு உதாரணமாக ஒரு முனிவர் எலி ஒன்றின் மேல் பரிதாபப்பட்டு அதைப் புலியாக மாற்றிய பின் அந்த புலியாக மாறிய எலி முனிவரையே கொல்ல வந்த கதையைச் சொன்னது.
முனிவரும் எலியும்
சித்ரவர்ணா கேட்டது “அது எப்படி எலி புலியாக மாறியது? அதற்கும் இந்த காகத்திற்கும் என்ன சம்பந்தம்?” ஆர்வமாகக் கேட்டது. கழுகு மயில் ராஜாவிற்குச் சொன்ன முனிவரும் எலியும் கதையைத் தான் இந்த பகுதியில் நீங்கள் கேட்கப்போகிறீர்கள்.
ஒரு பெரிய காட்டில் கௌதமர் என்ற முனிவர் இருந்தார். அந்த காட்டில் அவருடன் நிறைய முனிவர்களும் இருந்தார்கள். அந்த முனிவர்களுள் ஒருவர் தான் மகாதபஸ். ஒரு நாள் எப்பொழுதும் போல் மகாதபஸ் அவருடைய வேலையில் கவனமாக இருந்த போது ஏதோ ஒன்று மேலே இருந்து கீழே விழுவதைக் கவனித்தார்.
தலைக்கு மேலே ஒரு காகம் பறந்து போனது அவர் கண்ணில் பட்டது. மேலிருந்து அப்படி என்ன தான் விழுந்தது என்று அவர் பார்க்கப்போன போது ஒரு எலி அரைகுறை உயிருடன் கிடந்தது.” ஐயோ பாவம்! இந்த எலிக்கு உயிர் ஊசலாடுகிறது. ஏனோ அந்த காகம் இதைத் தின்னாமல் விட்டுவிட்டது” எண்ணிக் கொண்டே திரும்பிப் போக ஆரம்பித்தார். காகம் எலியைத் தின்பது இயற்கைதானே.
ஆனால் அவரின் இளகிய மனது அந்த எலியைக் காப்பாற்ற நினைத்தது. அந்த எலியை எடுத்துக் கொண்டு உள்ளே போய் வைக்கோலைப் பரப்பி அதன் மேல் படுக்க வைத்தார். அந்த எலிக்கு வேண்டிய உணவும் கொடுத்து நன்றாகக் கவனித்தார். எலியும் நல்ல குணமாகித் தெம்பாக ஓட ஆரம்பித்தது. அந்த ஆசிரமத்தில் எலிக்கு எல்லாம் சுகமாகப் போய்க்கொண்டிருந்தது.
ஆனால் ஒரு நாள் ஆபத்தும் வந்தது. ஒரு நாள் அந்த எலி பயத்தோடு அவசரமாக ஓடி ஒளிந்ததை மகாதபஸ் கவனித்தார். எதைக் கண்டு எலி பயந்து ஓடுகிறது என்று திரும்பிப் பார்த்தார்.
ஒரு பூனை அங்கே இருந்தது.” ஓ! இப்போது புரிகிறது இந்த எலி எதனால் பயந்தது என்று” சொல்லி கையத் தூக்கி எலியைப் பாரத்து மந்திரத்தை உச்சரித்து “பூனையாக மாறி உன்னைக் காப்பாற்றிக் கொள்” என்று சொல்ல அந்த எலி பூனையாக மாறியது.
எலியைத் துரத்திக் கொண்டு வந்த பூனைக்கு எலியைக் காணாமல் குழப்பமாக இருந்தது. “அந்த எலி எங்கே போனது? இது என்ன அதற்குப் பதிலாக இந்த பூனை என்னை முறைத்துப் பார்க்கிறது?” பூனைக்கு ஒன்றும் புரியவில்லை. பூனையாக மாறிய எலிக்கு வேறு எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்தது.
வேண்டும் போது சாப்பாடு, பறவைகளைத் துரத்துவது எலிக்கு எல்லாம் சுகமாக இருந்தது. மகாதபஸ் தியானத்திலும் தவத்திலும் கவனமாக இருந்த போது மூச்சுத் திணற யாரோ ஓடிவரும் சத்தம் அவரது கவனத்தைத் திருப்பியது.
ஆசிரமத்திலிருந்த பூனை ஒரு ஜன்னலின் மேல் பயத்தோடு உட்கார்ந்திருந்தது. ஜன்னலின் கீழே நாய் ஒன்று பூனையைப் பார்த்து நின்று கொண்டிருந்தது.
“என்ன நீ? எப்போது பார்த்தாலும் ஏதாவது பிரச்சனையைக் கூட்டிக்கொண்டு வருகிறாய்” மறுபடியும் கையைத் தூக்கி மந்திரம் சொல்லி “பயமில்லாமல் போ. எதிர்த்து நில்” சொன்னார். பூனை நாயாக மாறிவிட்டது.
கீழே இருந்த நாய்” இது என்ன? நான் பூனையைத் தானே துரத்தி வந்தேன்? ஆனால் நாய் அல்லவா இங்கே இருக்கிறது? இது எப்படி?” தலையை ஆட்டிக்கொண்டே அங்கே இருந்து திரும்பிப் போய்விட்டது.
அந்த முனிவரால் பூனை பெரிய நாயாக மாறிவிட்டது. நாயாக மாறிய பூனையோ மறுபடியும் ஆபத்திலிருந்து தப்பித்ததை நினைத்துச் சந்தோசப்பட்டது. சின்ன சின்ன ஜந்துக்கள் அந்த பெரிய நாயைப் பார்த்து பயந்து ஓடியது நாயாக மாறிய பூனைக்குக் கொஞ்சம் திமிரைக் கொடுத்தது. எலியாக இருந்த போது செய்யத் தயங்கியதை எல்லாம் நாயாக மாறியதால் செய்ய முடிந்தது.
மகாதபஸோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் தியானத்திலிருந்தார். திடீரென்று ஒரு பெரிய உறுமல் சத்தம் அவரைத் தொந்தரவு செய்தது. அவர் திரும்பிப் பார்த்தபோது நாயின் முன் ஒரு பெரிய புலி இருந்தது. எப்பொழுதும் போல் மகாதபஸ் கையை உயர்த்தி மந்திரத்தை உச்சரித்து “போ! போய் தைரியமாக எதிர்த்து நில்” சொல்லி விட்டு மறுபடியும் தியானத்தில் அமர்ந்தார்.
இப்போது அந்த புலிக்குத்தான் எதிரில் நடந்தது நம்ப முடியவில்லை.” எப்படி அந்த நாய் இந்த பெரிய புலியாக மாறியது” புரியாமல் குழம்பியது.
இப்படி புலியாக மாறிய எலிக்கு இதற்குப் பின் எந்த பயமும் இல்லாமல் பிரச்சனை இல்லாமல் வாழ்க்கை இருந்தது. எலியாக மாறிய புலியைப் பாரத்து பயந்து எல்லோரும் விலகிப் போனார்கள். “ஆஹா! எனக்கு இப்போது மரியாதை நிறையவே கிடைக்கிறது” அதற்குப் பெருமை தாங்கவில்லை.
ஆனால் அந்த பெருமை, திமிர் நிறைய நாட்கள் நீடிக்க வில்லை. ஒரு நாள் அந்த ஆசிரமத்தின் தோட்டத்தில் படுத்துக்கொண்டு ஓய்வெடுக்கும் போது மகாதபஸ்ஸின் சீடர்கள் பேசிக்கொண்டிருந்ததைத் தற்செயலாகக் கேட்டது.
முதலில் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. ஆனால் அதைப் பற்றி அவர்கள் பேச ஆரம்பித்ததும் அப்படி என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று கவனிக்க ஆரம்பித்தது. “என்ன? என்னைப் புலியாக மாறிய எலி என்றா சொல்கிறார்கள?” இன்னும் உன்னிப்பாகக் கேட்டது.
“ஓ! அது ஒன்றும் நிஜமான புலி இல்லை. புலியாக மாறிய எலிதான் அது”. “அது என்ன? புதிதாக இருக்கிறது? புலியைக் கேள்விப்பட்டிருக்கிறேன். எலியைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது என்ன புலியாக மாறிய எலி? விநோதமாக உள்ளதே” ஒரு சீடன் கேட்டான்.
“உனக்குத் தெரியாதா? நமது குரு மகாதபஸ் ஒரு எலியை மற்ற விலங்குகளிடமிருந்து காப்பாற்றப் புலியாக மாற்றி இருக்கிறார்” அவனுக்குப் பதில் வந்தது.” இருக்கலாம்! ஆனால் அது புலிதானே இப்போது. ஆபத்தான விலங்குதான் அது. அது இந்த ஆசிரமத்தில் சுற்றுவது நமக்குத்தான் ஆபத்து” அந்த சீடன் சொன்னான்.
“ஐயோ! அது ஒரு எலிதான். எலிதான் புலியாக மாறியிருக்கு. அதைப் பார்த்து ஒன்றும் பயப்படவேண்டாம்” இப்படிப் பேசிக்கொண்டிருந்தார்கள். இதைக் கேட்ட எலியாக மாறிய புலிக்கு ஒரே சங்கடமாக இருந்தது. அது அப்படியே கோபமாக மாறியது.
“எப்படி அவர்கள் என்னைப் புலியாக மாறிய எலி என்று சொல்லலாம். நான் ஒரு புலிதான் எலி இல்லை. அந்த முனிவர் உயிரோடு இருக்கும் அவரை என்னைப் புலி என்று ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நான் அவரை அடித்துக் கொன்றுவிட்டால் தான் இவர்களுக்கு நானும் உண்மையான புலிதான் என்று நம்புவார்கள்”.முடிவோடு ஆசிரமத்திற்குள் மகாதபஸ்ஸை நோக்கி வந்தது.
ஆனால் அவருக்கோ அது அவரைப் பார்த்து வரும்போதே அதன் மனதிலிருந்த எண்ணங்கள் நிதர்சனமாகத் தெரிந்தது. தனக்கு வேண்டிய சக்தியைக் கொடுத்ததை மறந்து அந்த முனிவர் மேல் ஆக்ரோஷத்துடன் பாய்ந்தது. ஆனால் அடுத்த நொடி ஒரு எலி தொப்பென்று கீழே விழுந்தது. எந்த முனிவர் அந்த எலியைச் சக்தி வாய்ந்த புலியாக மாற்றினாரோ அவரே மறுபடியும் அதை ஒரு சாதாரண எலியாக மாற்றிவிட்டார்.
“மகாராஜா! இப்பொழுது புரிகிறதா நான் ஏன் அந்த காகத்தை ராஜாவாக நியமிப்பது சரியில்லை என்று சொல்வது. ஆசை அதிகமாகி உங்களையேக் கொன்று ராஜாவாக முடிவெடுக்கலாம” கழுகு சொல்லி முடித்தது.
இதோடு இந்த பகுதி முடிவடைந்தது.
ஜம்புத்தீவை வென்ற சித்ரவர்ணா அதை எப்படி ஆளப்போகிறது? மந்திரி கழுகு என்ன அறிவுரைகள் சொல்லப் போகிறது? என்று வரும் பகுதிகளில் பார்க்கலாம்.
நன்றி! வணக்கம்!