ஹிதோபதேசம்
போன வாரம் எலி ராஜா காட்டில் வசிக்க ஏன் வந்ததென்று காரணத்தைச் சொன்னது. அதன் சேமிப்பை எல்லாம் இழந்ததனால், தன்நம்பிக்கையையும் இழந்த பின் யாரையும் நம்பி வாழ விரும்பவில்லை. துறவி எலியுடைய நிலைமையைக் கேலி செய்ததும் காட்டுக்குப் போய் ஒரு துறவு வாழ்க்கை வாழ முடிவு பண்ணி காட்டுக்கு வந்தது.
எலிராஜாவோட புது நண்பன் மந்தரா, ஹிரண்யகாவை சமாதானம் செய்தது. மந்தரா சொன்னது” எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே. பணத்தைப் பிறருக்குக் கொடுத்து உதவி செய்தால் மட்டுமே ,அந்த பணத்தால் நமக்கு உண்மையான சந்தோஷம் கிடைக்கும். நமக்கே எல்லாம் வேண்டும் என்று பேராசைப் பட்டால் ஆபத்தில் முடியும்”. இதற்கு எடுத்துக்கட்டாக ஒரு நரியின் கதையையும் சொன்னது. அந்த கதை என்ன என்று இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம். அதன் பின் நண்பர்கள் எப்படி தந்திரமாக ஆபத்திலிருந்து தப்பித்தார்கள் என்றும் பார்க்கப் போகிறோம்.
நரியின் பேராசையும் நண்பர்களின் தந்திரமும்
விந்திய மலை அடிவாரத்தில் ஓர் ஊரில் பைரவன் என்ற வேடன் இருந்தான். வேட்டையாடுவதில் கெட்டிக்காரன். ஒருநாள் ஒரு மானை வேட்டையாடி பிடிக்கவேண்டும் என்று காட்டுக்குக் கிளம்பினான். இவனால்தான் இந்த கதையே ஆரம்பமானது. காட்டுக்குள்ளே போய் தேடித் தேடி மான் ஒன்றை வேட்டையாடி பிடித்தான். பைரவனோ வில் வித்தையில் கை தேர்ந்தவன். மானால் தப்பிக்க முடியவில்லை. மானை இழுத்துக்கொண்டே வீட்டுக்குப் போய்க்கொண்டிருந்தான்.
போகும் வழியில் அவனை ஒரு காட்டுப் பன்றி பார்த்துவிட்டது.பைரவன் வில் வித்தையில் சிறந்தவனாக இருந்தாலும், மானைக் கீழே விட்டுவிட்டு அம்பை வில்லில் ஏற்றுவதற்குள் அந்தப் பன்றி அவனைத் தாக்க ஆரம்பித்தது. பன்றி அவனைப் பலமா தாக்க, அவனும் அதைத் திரும்பித் தாக்கச் சண்டை பலமா போக ஆரம்பித்தது. பைரவன் வில்லில் அம்பை ஏற்றி பன்றியைக் கொல்ல முயற்சி செய்தான். இரண்டு பேருக்கும் நல்லா பலமா அடி விழுந்ததால் இரண்டு பேருக்குமே உயிர் போய்விட்டது. மான், காட்டுப்பன்றி, பைரவன் மூன்று பேருமே செத்து மண்ணில் கிடந்தார்கள்.
இந்த சண்டைக்கு நடுவில் ஒரு பாம்பும் மாட்டி செத்துப் போனது. அந்த சண்டையில் அந்த பாம்பு எப்படிச் செத்ததோ தெரியவில்லை. கொஞ்ச நேரத்தில் ஒரு நரி பசியோடு அங்கே வந்தது. அங்கே தரையில் செத்துக் கிடந்த விலங்குகளையும் மனிதனையும் பார்த்து “அப்படியோவ்! இப்படி ஒரு விருந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லையே! இவ்வளவும் எத்தனை நாட்கள் வரும் எனக்கு? 2 மாசம்! 3 மாசம்! இல்லை இன்னும் கூட வருமா?” நரி கணக்குப் போட ஆரம்பித்தது. “இந்த மனித உடம்பு ஒரு மாசத்துக்கு வருமா! அப்புறம் அந்த மான், பன்றி இன்னொரு மாசம்! ஓ! அந்த பாம்பை மறந்துவிட்டேனே! ஒரு வாரம் வருமா? இல்லை இல்லை ஒரு நாள் வரும்” அதன் மூக்கால் அந்த பாம்பைத் தள்ளிக்கொண்டே கணக்குப் போட்டது.
“நாளைக்குப் பாம்பில் ஆரம்பித்து, ஒவ்வொன்றாகச் சாப்பிடலாம். மாதக்கணக்கில் கவலையில்லை எனக்கு. ஓ! அந்த வில்லில் உள்ள கயிறு இருக்கிறதே !அதுவும் மாமிசம்தானே! அதை இன்றைக்கு சாப்பிடலாமே அதை ஏன் வீணாக்கவேண்டும்” ராத்திரி அதைச் சாப்பிட முடிவு பண்ணியது. நரியுடைய புத்தி இருக்கிறதே நிறையப் பேராசை அதற்கு. சாப்பிட மீதி எல்லாம் இருக்கும் போது அந்த வில்லில் உள்ள மாமிசத்தால் ஆன கயிற்றையும் விட மனசில்லாமல் சாப்பிட ஆசைப்பட்டது. வில்லில் உள்ள கயிற்றைச் சாப்பிடக் கடிக்க ஆரம்பித்தது.
அந்த கயிற்றைக் கடித்ததும் அது பட்டுனு உடைந்தது. அப்போது அதில் இருந்த அம்பு டக்குனு விடுபட்டு நரியை குத்திடுச்சு. நரியும் அங்கேயே செத்துப்போச்சு. இந்த முட்டாள் நரியும் பேராசைப் பட்டதாலே அதுவும் செத்துப்போச்சு. “இந்த நரி மட்டும் நிறைய ஆசைப்படாமல் யோசித்து பாம்பில் ஆரம்பித்து ஒவ்வொன்றாகச் சாப்பிட்டிருந்தால் அதுக்கு இந்த கதி வந்திருக்காது. நாமும் யாருக்கும் உதவாமல் பணத்தை சேத்து வச்சி சேத்து வச்சி கடைசியா அந்த நரிமாதிரி உயிரே போகும் நிலைக்குத் தான் வருவோம்”.
“அதுவே பிறர்க்கு கொடுத்து உதவி செய்தால், நமக்கு ஆத்ம திருப்தியாவது கிடைக்கும். பேராசையால் பிரச்சனைகள்தான் அதிகமாகும். நிறையப் பணம் சம்பாதிக்க, அதிகமா உழைக்கவேண்டும். சம்பாதிச்சதுக்கப்புறம் அதைப் பத்திரப்படுத்த இன்னும் அதிகமா உழைக்கவேண்டும். ஏழையா இருந்தால்கூட சமுதாயத்துக்கு நல்லது செய்தால் அவனை அந்த சமுதாயம் மரியாதையாகத்தான் நடத்தும், எவ்வளவுதான் பணம் இருந்தாலும் சமுதாயத்துக்கு எதுவும் செய்யாமல் இருப்பவனை இந்த சமுதாயம் மதிக்காது. பணக்காரனாக இருப்பது ஒன்றும் சிறந்தது இல்லை. ஏழையா இருப்பதும் அவமானம் இல்லை. நீ பார்த்திருப்பாயே பணக்காரன் எப்போதும் பணக்காரனாக இருப்பதில்லை. ஏழையும் எப்பவுமே ஏழையா இருக்கமாட்டான். இன்று பணம் வரும். வந்த பணம் நாளை நம்மை விட்டுப் போகும். அந்த தெய்வம் நமக்கு எப்போது என்ன வேண்டுமோ அப்போது கொடுக்கும். பணம் நிறைய இருந்தால் யார் எப்போது நம்மிடம் இருந்து திருடுவாங்களோனு பயமும் இருக்கும்”.
“ஹிரண்யகா! எல்லா சேமிப்பும் போயிடுச்சே ஒன்றுமே இல்லையே என்று கவலைப் படாதே. எதுவும் உன்னிடம் இல்லை என்றாலும் நீ எங்களோடு இந்த காட்டில் வசிக்கலாம்”. மந்தரா ஹிரண்யாகாவிடம் ஆறுதலா சொன்னது. இதைக் கேட்ட லகுபட்னகா மந்த்ராவை பெருமையா பார்த்து “என்ன ஒரு நல்ல மனசு உனக்கு! நீ பெரிய ஞானி !” பூரிப்போடு சொன்னது. இந்த மூன்று நண்பர்களும் நிம்மதியா சந்தோஷமா அந்த காட்டில் அமைதியா வாழ ஆரம்பித்தார்கள்.
இப்படி வாழ்க்கை இந்த மூன்று பேருக்கும் இனிமையா போய்க்கொண்டிருந்தபோது ஒரு நாள் மான் ஒன்று படபடனு வேகமா அந்த பக்கம் வந்தது. தீடீர்னு அந்த மான் வேகமா ஓடி வந்ததும் மூன்று பேருக்கும் பயமும் குழப்பமும் வந்து விட்டது.
ஆமை ஏரிக்குள் போய் ஒளிந்தது. எலிப் பொந்துக்குள் ஓடி ஒளிந்தது. காகம் ஒரு மரத்தின் உச்சியில் போய் உட்கார்ந்தது. அங் இருந்து காட்டில் ஏதாவது அசம்பாவிதம் நடக்கிறதா என்று பார்த்தது. ஒன்றும் நடந்தது மாதிரி தெரியவில்லை. “மிருகங்களோ, மனிதர்களோ அந்த பக்கம் வந்தது மாதிரி தெரியலை. மான் ஏன் ஓடி வந்தது.? என்ன மாதிரி ஆபத்து அதுக்கு?” லகுபட்னகா யோசனையோடு பறந்து கீழே வந்து நண்பர்களைக் கூப்பிட்டது.
ஆமையும் எலியும் வெளியில் வந்ததும் மூன்று பேரும் சேந்து அந்த மானைப் பார்க்கப் போனார்கள். முதலில் ஆமை மானைப் பார்த்து “நல்வரவு! இந்த காட்டில் எங்களோடு நீயும் வந்து இருக்கலாம்” வரவேற்றது. “ஓ! நன்றி! என்னை நண்பனாக ஏற்றுக்கொண்டதற்கு. என் பெயர் சித்ரங்கா. வந்த புது இடத்தில் உங்களைப் போல் நட்பா இருப்பவர்களைப் பார்க்கச் சந்தோஷமா இருக்கிறது. ஒரு வேடன் கிட்ட இருந்து தப்பித்து ஓடி வந்தபோது காட்டின் இந்த பகுதிக்கு வந்துவிட்டேன்.வந்த புது இடத்தில் நீங்க நண்பர்களாகக் கிடைத்தது என் நல்ல நேரம்”. மான் பதில் சொன்னது.
அறிமுகம் முடிந்ததும் மானும் வயிறு நிறையச் சாப்பிட்டு ஆலமரத்தடியில் ஓய்வெடுக்கப் போச்சு. மந்த்ராவுக்கு ஒரே குழப்பம்! சந்தேகம்.!மானைப் பார்த்து “ரொம்ப வேகமா ஓடி வந்தியே? இங்கே ஏதாவது பிரச்சனையா உனக்கு? இந்த காட்டுப் பகுதிக்கு வேட்டையாட யாரும் வரமாட்டார்களே? ஏன் அப்படி பயத்தோடு வேகமா ஓடிவந்தே?’ கேட்டது.
“நீ கலிங்க நாட்டு இளவரசன் ருக்மங்காராவைப் பத்தி கேள்விபட்டிருக்கியா? அவன் எல்லையில் உள்ள நாட்டோடு சண்டைபோடப் படைவீரர்களோடு இந்த பக்கம் வந்து கொண்டிருக்கிறான். அந்த வீரர்களுக்கு உணவு வேண்டுமே? அவர்களுடைய ஆட்கள் வேட்டையாட இந்த காட்டுக்குள்ள வந்திருக்கிறார்கள். அப்படி ஒரு வேடனைப் பார்த்துத்தான் பயந்து தப்பித்து ஓடி வந்தேன்”.
“ஓ சொல்ல மறந்துவிட்டேனே. அந்த இளவரசன் இந்த ஏரிக்குப் பக்கத்தில் கூடாரம் போட்டுத் தங்கப்போகிறானாம். நாம் இங்க இருந்து வேறு இடத்திற்கு போவதுதான் நல்லது”.மான் வரப்போகும் பிரச்சனையைச் சொன்னது. இந்த செய்தி எல்லாருக்கும் அதிர்ச்சியைத் தந்தது. எல்லாருக்கும் மந்த்ராவைப் பத்தி கவலை வந்துவிட்டது.
“ஐயோ! மந்த்ரா என்ன பண்ணும்? ஆமையால் வேகமா நிலத்தில் நகரமுடியாதே? தண்ணீர் பக்கத்தில் வேற இருக்கனுமே? மந்த்ரா நீ எப்படி தப்பிக்கனும்னு சரியா திட்டம் போடவேண்டும்” சொல்லிக்கொண்டே ஹிரண்யகா திரும்பிப் பார்த்த போது அங்க மந்்ரா இல்லை.
மந்தரா இளவரசன் அந்த ஏரிக்குப் பக்கத்தில் தங்கப்போகிறான் என்று தெரிந்ததும் உடனே அங்கே இருந்து கிளம்பிவிட்டது. “ஐயோ! நான் உடனே கிளம்பிடவேண்டும். அவர்களால் வேகமா போக முடியும். என்னால் மெதுவாகத்தான் போக முடியும். காத்திருக்காமல் உடனே கிளம்பிடலாம்” மந்தரா யாருக்கும் காத்திருக்காமல் டக்குனு கிளம்பிடுச்சு. அடர்த்தியான மரங்களுக்கு நடுவில் அந்த மூன்றுபேரும் ஆமையைத் தேட ஆரம்பித்தார்கள். ஒரு இடம் விடாமல் தேடினார்கள். தேடித் தேடி ஆமையைக் கண்டுபிடித்த போது ஒரு வேடன் ஆமையை பார்த்துவிட்டான்.
அந்த வேடனுக்கு எந்த மிருகமும் கிடைக்கவில்லை. ஆமை சின்னதாக இருந்தாலும் இதுவாவது கிடைத்ததே என்று ஆமையை அவனுடைய கம்பில் கட்டி வீட்டைப் பார்த்து நடந்தான்.
ஹிரண்யகா ஆமை வேடனிடம் மாட்டிக்கொண்டதைப் பார்த்து’ ஐயையோ! ஆமை அந்த வேடனிடம் மாட்டிக்கொண்டதே !அது மாதிரி நல்ல நண்பர்கள் கிடைப்பதே அரிது.!ஆமையை காப்பத்தனும். இப்படியே விடக்கூடாது. காட்டை விட்டு ஊருக்குள் போய்விட்டால் காப்பத்துவது கஷ்டமா இருக்கும்.நாம் எல்லாரும் சேந்து ஆமையை அவர்கள் இந்த காட்டை விட்டுப் போகிறதுக்கு முன்னாடி காப்பத்தனும்”ஹிரண்யகா நண்பர்களைப் பார்த்துச் சொன்னது. காகமும் மானும் “ஆமா! ஆமையை எப்படியாவது காப்பத்தனும் ஆனால் எப்படித் தெரியலையே ?”கவலையோடு சொன்னார்கள்.
ஆங் எனக்கு ஒன்னு தோனுது. ‘சித்ரங்கா’ அந்த வேடன் கண்ணில் படாமல் போய் முன்னாடி உள்ள ஏரிக்கரையில் செத்துப்போன மாதிரி படுத்துக்கோ. ‘லகுபட்னகா’ நீ மானுடைய கண்ணைக் கொத்துவது போல நடி. மானைப் பார்த்து வேடன் செத்துப் போச்சுனு நினைப்பான். அந்த கம்பை ஆமையோடு கீழே வச்சிட்டு இரண்டு கைகளால் அந்த மானை இழுக்க வருவான். நான் இந்த பக்கம் ஆமையை காப்பாத்திடுவேன். சரியான சமயம் பார்த்து நீங்க தப்பிச்சிடுங்க”. விரிவாக எடுத்துச் சொன்னது.
கொஞ்ச நேரத்தில் அந்த வேடன் அந்த ஏரிக்கரைக்கு வந்தான். “ஆஹா! மான் ஒன்னு செத்துக்கிடக்குது. அதை எடுத்துக்கொண்டுபோய் கொடுத்தால் வீட்டில் எல்லாரும் சந்தோஷப்படுவாங்க”. ஆமையைக் கீழே வைத்துவிட்டு மானை எடுக்க ஆர்வமாகப் போனான். அந்த சமயம் பார்த்து ஹிரண்யகா அதன் பல்லால் வலையைக் கடித்து ஆமையை காப்பாற்றிவிட்டது. உடனே ஆமை தண்ணிக்குள் போய் பதுங்கிவிட்டது. எலி ஒரு பொந்துக்குள் ஓடிவிட்டது. மான் தாவி ஓடி மறைந்துவிட்டது. காகமும் மேலே பறந்து போய்விட்டது.
அந்த வேடனுக்கு நடந்தது எதுவும் புரியாமல் திருதிருனு முழித்தான். சரி ஆமையாவது இருக்கேனு கம்பை எடுத்தால் அதில் ஆமையும் இல்லை. “இந்த ஆமை எங்கே போனது” சுத்திப் பார்த்தும் அது கண்ணில் படவில்லை. ஏமாற்றத்தோடு வீட்டுக்குப் போனான். நம் கையில் இருப்பதை விட்டுவிட்டு அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் நடக்கும்.
ஆபத்திலிருந்து தப்பித்த நண்பர்கள் நான்குபேரும் யாரும் வரமுடியாத அடர்ந்த காட்டுப் பகுதிப் போய் பயமில்லாமல் சந்தோஷமாக வாழ ஆரம்பித்தார்கள்.
கதையைச் சொல்லி முடித்த விஷ்ணு சர்மா இளவரசர்களைப் பார்த்து “கதையை நல்ல கேட்டீர்களா? உங்களுடைய எண்ணம் என்ன?” என்று கேட்டார். “குருவே! இப்படி ஒரு விறுவிறுப்பான கதையை இதற்கு முன்னாடி நாங்கள் கேட்டதில்லை. முடிவில் எல்லாரும் சேர்ந்து சந்தோஷமா இருந்தது எங்களுக்கு ரொம்ப பிடித்திருக்கிறது” இளவரசர்கள் பதில் சொல்லி கையும் தட்டினார்கள்.
“உங்களுக்கும் இது போல் உதவும் நல்ல நண்பர்கள் கிடைக்கட்டும் .நியாயத்துடன் நடந்து நாட்டிற்கு நல்லது செய்யுங்கள். அந்த ஈசன் அருள் உங்களுக்கு எப்போதும் கிடைக்கட்டும்” குரு இளவரசர்களுக்கு ஆசீர்வாதம் செய்தார்.
இந்த கதையோடு ஹிதோபதேசத்தின் நண்பர்களைக் கவர்தல் பகுதி முடிவடைந்தது. அடுத்த பகுதியில் ஹிதோபதேசத்தின் இரண்டாவது பகுதியான நண்பர்களை இழப்பதில் இருந்து கதைகளை பார்க்கப்போகிறோம்.
நன்றி! வணக்கம்!