ஹிதோபதேசம்
ஹிதோபதேசக் கதைகள் இந்தியாவில் பழங்காலத்தில் சொல்லப்பட்ட ஒரு கதை தொடர். இதில் நண்பர்களைக் கவர்வது, நண்பர்களை இழப்பது, போர் தொடுத்தல், சமாதானம் செய்வது இந்த நான்கு பகுதிகள் உள்ளது என்று பார்த்தோம். போன வாரக்கதையுடன் கதையின் முதல் பகுதியான நண்பர்களைக் கவர்வதில் உள்ள கதைகள் முடிவடைந்தது. அடுத்து நாம் பார்க்கப்போவது ஹிதோபதேசத்தின் இரண்டாவது பகுதியான நண்பர்களை இழப்பது. இந்த பகுதியின் முதல் கதை சிங்கம், நரிகள் அப்புறம் ஒரு காளைமாட்டைப் பற்றியது.
சிங்கம், நரிகள்,காளையின் கதை
மகாராஜா சுதர்ஷனனின் மகன்களுக்கு விஷ்ணு சர்மா சொன்ன கதைகள் மிகவும் பிடித்திருந்தது. குருகுலம் போய் பாடங்கள் படிப்பதைவிட இந்த கதைகள் அவர்களுக்கு சுவாரசியமாக இருந்தது. நண்பர்கள் கவர்வது பகுதி முடிந்ததும் அடுத்த பகுதியான நண்பர்களை இழப்பதிலிருந்து விஷ்ணு சர்மா என்ன கதைகளைச் சொல்லப் போகிறார் என்று ஆவலை அடக்கமுடியவில்லை. “குருவே! முதல் பகுதியில் எப்படி நல்ல நண்பர்களை தேர்வு செய்வது என்று தெரிந்துகொண்டோம். அப்படிக் கிடைத்த நண்பர்களை இழந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதையும் தெரிந்துகொண்டோம். நண்பர்களை இழப்பது பற்றிக் கதை சொல்லுங்கள். அதையும் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்”. இளவரசர்களுக்கு விஷ்ணு சர்மா சொல்லும் கதைகளைக் கேட்க மிகவும் ஆர்வம் வந்துவிட்டது.
விஷ்ணு சர்மாவுக்கு இளவரசர்களின் ஆர்வம் புரிந்தது. அவர் ராஜாவுக்குக் கொடுத்த வாக்கையும் நிறைவேற்ற வேண்டுமே! “இதோ! அடுத்த கதையை ஆரம்பிக்கப்போகிறேன். சிங்கம், நரிகள், ஒரு காளைமாடு இந்த விலங்குகளின் கதையை முதலில் சொல்லப்போகிறேன். இந்த கதையில் எதனால் நண்பர்களை இழப்போமென்று தெரியும் உங்களுக்கு. இந்த கதையில் ஒரு நரி, நண்பர்களாக இருந்த ஒரு சிங்கத்தையும், காளைமாடு ஒன்றையும் எப்படி பிரித்ததென்று கேட்கப்போகிறீர்கள்” விஷ்ணு சர்மா சொல்ல “என்ன? ஒரு சிங்கமும் காளைமாடும் நண்பர்களா? இது போல நாங்கள் கேள்விப்பட்டதே இல்லையே? என்னதான் நடந்தது? எப்படி நரி இந்த இரண்டு விலங்குகளையும் பிரித்தது?” கேள்வி மேல் கேள்விகளாக இளவரசர்கள் கேட்டார்கள்.
“இந்த கதையைக் கேட்டால் எல்லாம் உங்களுக்குப் புரியும். இதோ! சொல்கிறேன். கேளுங்கள்“. விஷ்ணு சர்மா கதையை சொல்ல ஆரம்பித்தார்.
ஸ்வர்ணாவதி என்ற ஊரில் வர்த்தமான என்ற வியாபாரி இருந்தான். வர்த்தமனாவிடம் செல்வம் நிறையவே இருந்தது. ஆனாலும் அவனுக்குத் திருப்தியே இல்லை. இன்னும் வேண்டும், வேண்டும் என்று அவனுக்கு ஒரு வெறி இருந்தது.. அதற்குக் காரணம் அவனுடைய சொந்தக்காரர்கள் அவனைவிட பணக்காரர்களா இருந்ததுதான். அந்த சொந்தக்காரர்களைப் பார்த்து அவனுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துவிட்டது.
நம்மைவிட உயரத்தில் இருப்பவர்களோடு ஒப்பிட்டு “அவர்களைப்போல நாமில்லையே” என்று நினைப்போம். தோல்வி மனப்பான்மையும் வரும். நம்மைவிடக் கீழ்நிலையில் இருப்பவர்களைப் பார்த்து “ஓ!நம்மிடம் அவர்களைவிட நிறையவே இருக்கிறது” என்றும் நினைப்போம். இது மனித இயல்பு.
வர்த்தமனாவும் இதற்கு விதிவிலக்கு இல்லை. “இன்னும் எப்படி செல்வம் சேர்க்கமுடியும்? என்ன பண்ணவேண்டும் அதற்கு?” என்று எப்போதுமே அதே யோசனையில் இருந்தான். “ஒன்றும் செய்யாமல் சோம்பேறியா இருந்தால், லக்ஷ்மி என்னிடம் வந்து சேராது. கஷ்டப்பட்டு உழைத்தால் நிச்சயமாக எனக்கு செல்வம் வந்து சேரும். அதற்கு என்ன பண்ண வேண்டுமோ அதைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும்” வர்த்தமனா முடிவு செய்தான்.
“பணம் நிறையச் சம்பாதிக்க வேண்டும். அதில் கொஞ்சம் சேமித்து வைக்க வேண்டும். தேவைகளுக்குச் செலவு செய்யலாம். இல்லாதவர்களுக்குக் கொடுத்தும் உதவலாம். எதுவுமே தப்பில்லையே. ஒரே நாளில் நிறையப் பணம் சம்பாதிக்க முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்தால் ஒரு நாள் நிறையவே இருக்கும். ஒரு பானையில் துளித் துளியாகத்தானே தண்ணீரை நிரப்ப முடியும். பணத்தைச் சேமிப்பது, அறிவை வளர்ப்பது, கடவுளிடம் பக்தி வைப்பது இந்த மூன்றுமே கொஞ்சக் கொஞ்சமாகச் சேர்த்தால்தான் கடைசியில் நிறைய இருக்கும்” இப்படியெல்லாம் அவன் சிந்தனை போனது. அவனிடம் நந்தகா, சஞ்ஜீவிகா என்ற இரண்டு காளை மாடுகள் இருந்தது. அந்த இரண்டையும் அவனுடைய மாட்டு வண்டியில் கட்டி அந்த வண்டியில் வியாபாரத்திற்கு வேண்டிய சாமன்களை ஏற்றி காஷ்மீரை நோக்கி பயணம் செய்ய தொடங்கினான்.
அவன் சென்ற வழியோ சுதுர்கா மலை வழியே சுற்றிச் சுற்றி செல்லும் மலைப்பாதை. போகும் வழி கடினமா இருந்ததால் சஞ்ஜீவிகா காலில் அடிபட்டு மேலே போக முடியாமல் உட்கார்ந்து விட்டது. வர்த்தமனா பயணத்தை நிறுத்த விரும்பவில்லை. “எந்த புது வேலையிலும் தடங்கல் வருவது இயல்புதான். சஞ்ஜீவிகாவுக்காக என்னால் இங்கேயே இருக்க முடியாது. வேறு ஏதாவது நான் செய்ய வேண்டும். அப்போதுதான் என் இலக்கை நான் அடைய முடியும்” இப்படி எண்ணி வர்த்தமனா பக்கத்து ஊருக்குப் போய் வேறு மாடு ஒன்று வாங்கிக்கொண்டு வந்து சஞ்ஜீவிகா இடத்தில் அதைக் கட்டி பயணத்தைத் தொடர்ந்தான்.
சஞ்ஜீவிகா மெதுவா மூன்று கால்களை ஊன்றி எழுந்தது. காயமடைந்த மாட்டுக்கு அந்த இடத்தில் நிறையச் சௌகரியம் இருந்தது. அங்கே அதைத் தவிர வேறு விலங்குகள் இல்லை. சாப்பிட நிறைய இருந்தது. எப்போது, என்ன வேண்டுமோ பயமில்லாமல் அதற்குச் சாப்பிட முடிந்தது. அதற்கு மேல் வேலை எதுவும் செய்ய வேண்டும் என்ற அவசியமும் இல்லை. மெது மெதுவாக அதன் காலும் குணமானது. நல்லா கொழுகொழு என்று பலத்தோடு அங்கேயே சுத்தி வந்தது. அந்த விபத்து அதற்கு நல்லதாகவே மாறியது. சந்தோஷமாக எக்காளமிட்டு அந்த காட்டில் சுத்தி வந்தது.
அந்த காட்டில் சஞ்ஜீவிகா மட்டும் இல்லை! பிங்கலிகா என்ற சிங்கமும் இருந்தது. மீதி விலங்குகள் அதை அந்த காட்டுக்கு ராஜாவாகத்தான் நடத்தின. ராஜாவுக்கு கொடுக்கும் மரியாதையையும் கொடுத்தன. சிங்கம் பலமான மிருகம் இல்லையா! யாரும் அதை எதிர்க்க மாட்டார்கள். ஒரு நாள் தண்ணீர் குடிக்க யமுனை ஆற்றங்கரைக்கு சிங்கம் வந்தது. சஞ்ஜீவிகாவும் அந்த இடத்தின் பக்கத்தில் தான் சுற்றிக்கொண்டிருந்தது. நன்றாக சாப்பிட்டு சத்தமாக எக்காளமிட்டது. பாவம்! பக்கத்தில் சிங்கம் இருந்தது அதற்கு தெரியாது.தெரிந்திருந்தால் பூனை மாதிரி சத்தம் போடாமல் இருந்திருக்கும்.
ஆனால் நடந்தது என்னமோ அசாதாரணமானது! பிங்கலிகா பயத்தில் அப்படியே உறைந்து போய்விட்டது. அதற்கு நெஞ்சு படபடவென்று அடிக்க ஆரம்பித்தது. கால்கள் நடுங்க ஆரம்பத்தது. சஞ்ஜீவிகாவின் எக்காளம் அதற்குப் புதிராக இருந்தது. ஒரு காளைமாட்டுடைய எக்காளத்துக்குப் போய் சிங்கம் பயப்படுமா என்று நீங்கள் நினைக்கலாம். காளைமாடு காட்டு விலங்கு இல்லையே! அதன் சத்தம், காட்டில் உள்ள மிருகங்களுக்கு புதுதாகத்தானே இருக்கும! பிங்கலிகா தண்ணீர் குடிக்காமலே திரும்பிப் பார்த்தது. கொஞ்சம் கலக்கத்தோட அந்தப் பக்கம் வெறித்துப் பாரத்தது.
இப்படி ஒரு பக்கம் இருந்தால், இன்னொரு பக்கம் இரண்டு நரிகள் சிங்கத்தைக் கவனித்து கொண்டிருந்தன. அந்த நரிகள் இரண்டும் சிங்கத்தின் மந்திரியின் பிள்ளைகள். தமனக்கா அதன் சகோதரன் கரட்டாகாவைத் தட்டிக் கூப்பிட்டு “நமது ராஜாவைப் பார்த்தியா? என்னமோ மாதிரி இருக்காரு! என்ன தெரியலையே? தண்ணீர் குடிக்க போனாரு! ஆனால் குடிக்காமல் எங்கேயோ பார்த்திட்டிருக்காரு!” வியப்பாகவே சொன்னது.
“இங்க பாரு தமனக்கா! அதைப் பத்தி நீ ஏன் கவலைப்படுகிறாய்? நீயும் நானும் சொல்லி அவர் கேட்கப்போகிறாரா என்ன? முதலில் அவருக்கு யோசனைகள் சொல்லுவதை நாம் நிறுத்தவேண்டும். அவருக்கு நாம் எது செஞ்சாலும் மதிப்பு கொடுக்கத் தெரியாது. எப்பவும் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருப்பாரு. அவருக்கு சேவை செய்தால் நமக்குத்தான் அவமானம் வந்து சேரும். எப்பப் பாரத்தாலும் ஓடி ஓடி சேவகம் செய்வது பெரிய அவமதிப்பு. சுயமரியாதையையும் சுதந்திரத்தையும் இழக்க வேண்டும். உனக்கு ஏன் புரியவில்லை!”
“நம்மைப் போல் சேவகம் செய்பவர்களால் எஜமானர்களை திருப்திப் படுத்தவே முடியாது. அமைதியா இருந்தால் அவன் ஒரு மக்கு! பேசினால் வாய் ஜாஸ்தி!பொறுமையாக இருந்தாலும் அதுவும் தப்பு! அவனுக்கு வெட்கம் அதிகம். புத்தி கிடையாது! திரும்பி பதில் சொன்னால் திமிர் அதிகம்! நல்ல குடும்பத்திலிருந்து வரவில்லை! பக்கத்தில் நின்றால் உரிமை அதிகமாக எடுத்துக்கறான்! தூரத்தில் நின்றால் தைரியம் இல்லை! இப்படித்தான் எல்லாவற்றிலும் தப்பு கண்டுபிடிப்பார்கள். இவர்களுக்காக நம் வாழ்க்கையை நாம் ஏன் தியாகம் செய்ய வேண்டும்? போதும்! இந்த ராஜாவைப் பற்றி கவலைப் படுவதை நிறுத்த வேண்டும்”. கரட்டகா கோபத்தில் படபடனு சொன்னது.
“கரட்டகா! ஏன் இப்படிப் பேசுகிறாய்? பலமான எஜமானனுக்கு வேலை செய்வது நமக்குத்தான் நல்லது. நமக்கும் நிறையச் சலுகைகள் கிடைக்கும். நம் வேலையை நல்லா செய்தால் நமக்கு வேண்டியது கிடைக்குமே! பலமுள்ளவர்களிடம் வேலை செய்தால்தான் பலத்தின் மதிப்பு நமக்கும் புரியும். ராஜாவோடு இருந்தால்தானே எங்கே போனாலும் நமக்கு மதிப்பு கிடைக்கும்” தமனக்கா எடுத்துச் சொன்னதன் பின்னும் கரட்டகா சமாதானம் ஆகவில்லை.
“நீ என்ன சொன்னாலும் என்னால் ஒத்துக்கொள்ள முடியாது. அவசியம் இல்லாமல் நாம் தலையிட்டால் நமக்குத்தான் பிரச்சனை வரும். ஒரு குரங்கு முட்டுக் கொடுக்கும் ஆப்பு ஒன்றை இழுக்கும்போது செத்துப்போச்சு. அது மாதிரியும் நடக்கலாம்” கரட்டகா சொன்னதைக் கேட்ட தமனக்கா “இது என்ன? நான் ஒன்று சொல்ல, நீ வேற என்னமோ சொல்கிறாய்? இந்த குரங்கு எங்கே இருந்து வந்தது? அதற்கு என்ன ஆயிற்று? ஏன் செத்தது?” கேட்டது.
கரட்டக்கா சொன்ன அந்த குரங்கு கதையை மறக்காமல் அடுத்த பகுதியில் வந்து கேளுங்கள்.
நன்றி! வணக்கம்!