போன பகுதியில் திருக்குறளின் கேள்வி அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை நீங்கள் கேட்டிருப்பீர்கள். கேள்வி அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை இந்தப் பகுதியில் பார்க்கப்போகிறோம்.
கேள்வி என்பதற்குப் பொருள் நாம் அறியாத ஒன்றைத் தெரிந்து கொள்வது, செவி வழியாகக் கற்றறிந்தவரிடம் கேட்டு அறிந்து கொள்வது என்று சொல்லலாம். பல் நூல்களைக் கற்று அறிவது போல் செவி வழியாகக் கேட்டும் அறிந்து கொள்ளலாம்
கேள்வி -2
- ஆறாவது குறள்.
“எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.“
இதில்
‘எனைத்தானும் நல்லவை கேட்க’
இதன் பொருள்
எவ்வளவு சிறியதாக இருந்தாலும் நல்லவற்றைக் கேட்டு அறிய வேண்டும்.
அடுத்து
‘அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்‘
இதன் பொருள்
சிறியதாக இருந்தாலும் கேட்டவை பெருமையைத் தரும்.
அதாவது
எவ்வளவு சிறியதாக இருந்தாலும் நல்லவற்றைக் கேட்டு அறிய வேண்டும்.
சிறியதாக இருந்தாலும் கேட்டவை பெருமையைத் தரும்.
கேள்வி அதிகாரத்தின் ஆறாவது குறளின் பொருள் இது.
- ஏழாவது குறள்.
“பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து
ஈண்டிய கேள்வி யவர்.”
இதில்
‘பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லார்‘
இதன் பொருள்
ஒன்றைத் தவறாக உணர்ந்திருந்தாலும் அறிவற்ற சொற்களைச் சொல்லமாட்டார்.
அடுத்து
‘இழைத்துணர்ந்து ஈண்டிய கேள்வி யவர்‘
இதன் பொருள்
ஆறாய்ந்து உணர்ந்து கேள்வி ஞானத்தால் நிரம்பியவர்.
அதாவது
ஆறாய்ந்து உணர்ந்து கேள்வி ஞானத்தால் நிரம்பியவர் ஒன்றைத் தவறாக உணர்ந்திருந்தாலும் அறிவற்ற சொற்களைச் சொல்லமாட்டார்.
கேள்வி அதிகாரத்தின் ஏழாவது குறளின் பொருள் இது.
- எட்டாவது குறள்
“கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.”
இதில்
‘கேட்பினுங் கேளாத் தகையவே‘
இதன் பொருள்
கேட்கும் தன்மை பெற்றிருந்தாலும் அவை செவிட்டுத் தன்மை உடையவையே.
அடுத்து
‘கேள்வியால் தோட்கப் படாத செவி‘
இதன் பொருள்
கேள்வி அறிவால் துளைக்கப்படாத செவிகள்.
அதாவது
கேள்வி அறிவால் துளைக்கப்படாத செவிகள் கேட்கும் தன்மை பெற்றிருந்தாலும் அவை செவிட்டுத் தன்மை உடையவையே.
கேள்வி அதிகாரத்தின் எட்டாவது குறளின் பொருள் இது.
- ஒன்பதாவது குறள்.
“நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது.”
இதில்
‘நுணங்கிய கேள்வியர் அல்லார்’
இதன் பொருள்
நுண்ணிய கேள்வி அறிவு இல்லாதவர்.
அடுத்து
‘வணங்கிய வாயினர் ஆதல் அரிது‘
இதன் பொருள்
பணிவான சொற்களைப் பேசும் இயல்புடையவராக இருப்பது கடினம்.
அதாவது
நுண்ணிய கேள்வி அறிவு இல்லாதவர் பணிவான சொற்களைப் பேசும் இயல்புடையவராக இருப்பது கடினம்.
கேள்வி அதிகாரத்தின் ஒன்பதாவது குறளின் பொருள் இது.
- பத்தாவது குறள்.
“செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.”
இதில்
‘செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்’
இதன் பொருள்
செவியால் உணரும் இன்பத்தை உணராமல் வெறும் வாயால் உணரும் இன்பத்தை அறிந்த மக்கள்.
அடுத்து
‘அவியினும் வாழினும் என்’
இதன் பொருள்
செத்தால் வரும் தீமை என்ன? வாழந்தால் வரும் நன்மை என்ன?
அதாவது
செவியால் உணரும் இன்பத்தை உணராமல் வெறும் வாயால் உணரும் இன்பத்தை அறிந்த மக்கள், செத்தால் வரும் தீமை என்ன? வாழந்தால் வரும் நன்மை என்ன?
கேள்வி அதிகாரத்தின் பத்தாவது குறளின் பொருள் இது.
இந்தக் குறளோடு இந்த அதிகாரம் முடிவடைந்தது. அடுத்த பகுதியில் நாம் பாரக்கப்போகும் அதிகாரம் அறிவுடைமை.
நன்றி! வணக்கம்



