வணக்கம். திருக்குறளில் உள்ள முதல் மூன்று அதிகாரங்களை இதற்கு முன்னாடி பார்த்தோம். இந்தப் பகுதியில் திருக்குறளின் நான்காவது அதிகாரமான அறன் வலியுறுத்தலிலிருந்து முதல் ஐந்து குறள்களை பார்க்கலாம்.
அறம் அப்படி என்றால் என்ன? எந்த செயலையும் நேர்மையாக செய்வதே அறம் ஆகும். பொறாமை, அச்சம், பகைமை,கோபம் வெறுப்பு இந்த உணர்வுகளுக்கு நடுவில் வாழும் போது எதையும் பொருட்படுத்தாமல், நேர்மையாக நடக்கும் போது கிடைக்கும் நிம்மதி, சந்தோஷம் மிகப் பெரிய செல்வமாகும். எதற்கும் அஞ்சாமல் எதற்கும் பணியாமல் எது சரியோ, நேர்மையோ அதைச்செய்வதே அறம் ஆகும்.
அறன் வலியுறுத்தல்
- முதல் குறள்.
“சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு”.
இதில்
“சிறப்புஈனும் செல்வமும் ஈனும்”
இதன் பொருள்: அறம் சிறப்பையும் தரும் செல்வத்தையும் தரும்
அடுத்ததா
“அறத்தினூஉங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு”
இதன் பொருள்: ஆகையால் உயிருக்கு இத்தகைய அறத்தைக்காட்டிலும் மேன்மையானது வேறு எதுவும் இல்லை.
அதாவது
அறம் சிறப்பையும் தரும் செல்வத்தையும் தரும். ஆகையால் உயிருக்கு இத்தகைய அறத்தைக்காட்டிலும் மேன்மையானது வேறு எதுவும் இல்லை.
இந்த அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“அறத்தின்ஊங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு”.
இதில்
“அறத்தின்ஊங்கு ஆக்கமும் இல்லை”
இதன் பொருள்: ஒருவருடைய வாழ்க்கைக்கு அறஞ் செய்வதைவிட நன்மையானது எதுவும் இல்லை.
அடுத்ததா
“அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு”
இதன் பொருள்: அந்த அறத்தைச் செய்யாமல் மறப்பதை விடப் பெரிய கேடு எதுவும் இல்லை.
அதாவது
ஒருவருடைய வாழ்க்கைக்கு அறஞ் செய்வதைவிட நன்மையானது எதுவும் இல்லை. அந்த அறத்தைச் செய்யாமல் மறப்பதை விடப் பெரிய கேடு எதுவும் இல்லை.
இது அதிகாரத்தின் இரண்டாவது குறள்.
- மூன்றாவது குறள்.
“ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்”.
இதில்
“ ஒல்லும் வகையான்”
இதன் பொருள்: அவரவர்களுக்கு முடிந்த வகையில்
அடுத்ததா
“அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாஞ் செயல்”
இதன் பொருள்: செல்லுமிடமெல்லாம் இடைவிடாமல் அறத்தினை செய்ய வேண்டும்.
அதாவது
அவரவர்களுக்கு முடிந்த வகையில், செல்லுமிடமெல்லாம் இடைவிடாமல் அறத்தினை செய்ய வேண்டும்.
இது அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள்.
- நான்காவது குறள்.
“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற”.
இதில்
“மனத்துக்கண் மாசிலன் ஆதல்”
இதன் பொருள்: ஒருவன் தன் மனதில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும்.
அடுத்ததா
“ஆதல் அனைத்தறன்“
இதன் பொருள்: அதுவே அறம் ஆகும்
“ஆகுல நீர பிற”
இதன் பொருள்: மனத்தூய்மை இல்லாமல் செய்யும் செயல்கள் வெறும் ஆரவாரத்தன்மை உடையவை.
அதாவது
ஒருவன் தன் மனதில் குற்றம் இல்லாதவனாக இருக்க வேண்டும். அதுவே அறம் ஆகும். மனத்தூய்மை இல்லாமல் செய்யும் செயல்கள் வெறும் ஆரவாரத்தன்மை உடையவை.
இது அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள்.
- ஐந்தாவது குறள்.
“அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்”.
இதில்
“அழுக்காறு“
இதன் பொருள்: பிறர் மேல் உள்ள பொறாமை
“அவா”
இதன் பொருள்: புலன்கள் மேல் உள்ள ஆசை
“வெகுளி“
இதன் பொருள்: கோபம்
“இன்னாச்சொல்”
இதன் பொருள்: கோபத்தில் பிறக்கும் கடுஞ்சொல்
அடுத்து
“நான்கும் இழுக்கா இயன்றது அறம்”
இதன் பொருள்: இந்த நான்கினையும் விலக்கித் தொடர்ந்து செயல்படுவதே அறம்.
அதாவது
பிறர் மேல் உள்ள பொறாமை, புலன்கள் மேல் உள்ள ஆசை, இதனால் வரும் கோபம் .கோபத்தில் பிறக்கும் கடுஞ்சொல், இந்த நான்கினையும் விலக்கித் தொடர்ந்து செயல்படுவதே அறம்.
இது இந்த அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள்.
இந்த குறளோடு இந்தப் பகுதி முடிந்தது. அடுத்த பகுதியில் அறன் வலியுறுத்தல் அதிகாரத்தில் மீதி உள்ள ஐந்து குறள்களைப் பார்க்கப்போகிறோம். கட்டாயம் வந்து கேளுங்கள்.
நன்றி! வணக்கம்!
மற்ற திருக்குறள் அத்தியாயங்களைக் கேட்க இங்கே கிளிக் செய்யவும்: