வான்சிறப்பு-1

வான்சிறப்பு

வணக்கம். இரண்டாவது அதிகாரமான வான்சிறப்பில் இருந்து முதல் ஐந்து குறள்களை இன்று பார்க்கப்போகிறோம்.

“ வான்சிறப்பு” இதில் வான் என்ற சொல்லுக்கு ஆகாயம், வெட்டவெளி இப்படி பொருள் சொல்லலாம். வானத்திலிருந்து மழை பெய்யும். அந்த மழை இந்த பூமியில் உள்ளவர்களுக்கு உணவு கிடைக்க உதவுகிறது. உழவர்களுக்குப் பயிர் செய்ய உதவுகிறது. புயலாகவும் உருவெடுக்கும். மழை இல்லை என்றால் இந்த பூமியில் ஒரு புல்,பூண்டு கூட முளைக்காது. இந்த பூமியில் நடக்கும் எல்லா செயலுக்கும் மழை இன்றியமையாதது. நீர் இல்லா உலகை நினைத்துக் கூட பார்க்க முடியாது. இந்த வான்சிறப்பு அதிகாரம் மழையுடைய பெருமையையும் முக்கியத்துவத்தையும் நமக்கு எடுத்து சொல்லுகிறது.

வான்சிறப்பு-1

  • முதல் குறள்:

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.

இதில் முதல் அடி
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
இதன் பொருள்: வானத்திலிருந்து பெய்யும் மழையால் இந்த உலகம் வாழ்ந்து வருவதால்
இரண்டாவது அடி
தான் அமிழ்தம் என்னுணரற் பாற்று
இதன் பொருள்: அந்த மழைதான் அந்த உலகத்தில் வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று சொல்லலாம்.

அதாவது
வானத்திலிருந்து பெய்யும் மழையால் இந்த உலகம் வாழ்ந்து வருவதால், அந்த மழைதான் அந்த உலகத்தில் வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று சொல்லலாம்.
இது இந்த முதல் குறளின் பொருள்.

  • இரண்டாவது குறள்:

துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.

முதல் அடி
துப்பார்க்கு துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
உங்களுக்கு இதில் கொஞ்சம் குழப்பம் இருக்கலாம் இந்த வார்த்தைகளைக் கேட்டு.
துப்பார்க்கு இதோட பொருள் உண்பவர்க்கு
துப்பாய = உணவாகி
துப்பாக்கி = உடலுக்கு வலிமை கொடுக்கும் உண்பவர்களுக்குத் தக்க உணவுகளை விளைவித்து
இரண்டாவது அடி
“துப்பாய தூஉம் மழை
இதன் பொருள்: அந்த உணவோடு பருகுவதற்கு தானும் ஓர் உணவாய் இருப்பது அந்த மழை.

அதாவது
உண்பவர்க்கு உணவாகி உடலுக்கு வலிமை கொடுக்கும் உண்பவர்களுக்குத் தக்க உணவுகளை விளைவித்து,அந்த உணவோடு பருகுவதற்கு தானும் ஓர் உணவாய் இருப்பது அந்த மழை.
இரண்டாவது குறளின் பொருள் இது.

  • மூன்றாவது குறள்

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.

முதல் அடி
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலத்து
இதன் பொருள்: கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் மழை பெய்ய வேண்டிய உரியக் காலத்தில் பெய்யாது போனால்
இரண்டாவது அடி
உள்நின்று உடற்றும் பசி
இதன் பொருள்: பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.

அதாவது
கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் மழை பெய்ய வேண்டிய உரியக் காலத்தில் பெய்யாது போனால்,பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்.
இது மூன்றாவது குறளின் பொருள்.

  • நான்காவது குறள்:

ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்
.

இதில்
புயலென்னும் வாரி வளங்குன்றிக் கால்
இதன் பொருள்: மழை என்ற வருவாய் பெய்யாமல் குறைந்து விட்டால்
ஏரின் உழாஅர் உழவர்
இதன் பொருள்: உழவரும் ஏர்கொண்டு உழ மாட்டார்.

அதாவது
மழை என்ற வருவாய் பெய்யாமல் குறைந்து விட்டால், உழவரும் ஏர்கொண்டு உழ மாட்டார்.
நான்காவது குறளின் பொருள் இது.

  • ஐந்தாவது குறள்:

கெடுப்பதூவுங் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதுஉம் எல்லாம் மழை.

முதல் அடி
கெடுப்பதூவும் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
இதன் பொருள்: இந்த உலகத்தில் வாழ்பவர்களின் வாழ்வை பெய்யாது நின்று கெடுப்பதுவும் அப்படி வாழ்வை இழந்தவர்களுக்குத் துணையாய் பெய்து
இரண்டாவது அடி
எடுப்பதுஉம் எல்லாம் மழை
இதன் பொருள்: முன் கொடுத்த துன்பத்தை எடுத்துக் காக்க வல்லதும் இந்த மழைதான்.

அதாவது
இந்த உலகத்தில் வாழ்பவர்களின் வாழ்வை பெய்யாது நின்று கெடுப்பதுவும் அப்படி வாழ்வை இழந்தவர்களுக்குத் துணையாய் பெய்து, முன் கொடுத்த துன்பத்தை எடுத்துக் காக்க வல்லதும் இந்த மழைதான்.
இது ஐந்தாவது குறளின் பொருள்.

இந்தக் குறளுடன்  இந்த பகுதி முடிவடைந்தது. வான்சிறப்பு அதிகாரத்தின் மீதி உள்ள ஐந்து குறள்களை அடுத்த பகுதியில் பார்ப்போம். நன்றி!வணக்கம்!

திருக்குறளின் மற்ற அத்தியாயங்களைக் கேட்க இங்கே கிளிக் செய்யவும்:

திருக்குறள்: கடவுள் வாழ்த்து-2

வான்சிறப்பு-1
Speaker: Nila

Share with Friends

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Categories
Tags
Recent posts