ஹிதோபதேசம்
போன வாரம் ஆரம்பித்த புதிய தொடரான ஹிதோபதேசக் கதைகளில் முதல் கதையில் ஒரு புறாக் கூட்டம் காட்டுக்கு நடுவில் தானியங்கள் பரப்பி இருந்ததைப் பார்த்து, சாப்பிட ஆசைப் பட்ட போது புறா கூட்டத்தின் தலைவன் சித்ரக்ரீவா எச்சரித்ததைப் பார்த்தோம்.. சித்ரக்ரீவா சொன்ன அந்தக் கதை என்ன என்று பார்ப்போமா!
புலியும் பயணியும்
சித்ரக்ரீவா மீதி புறாக்கள் கேட்டதால் கதையை ஆரம்பித்தது. “ஒருதடவை தெற்கில் உள்ள காட்டில இரையைத்தேடி பறந்து போயிகொண்டிருக்கும் போது ஒரு வயசான புலியைப் பார்த்தேன். அது ஒரு குளத்தின் கரைமேல் உட்கார்ந்து இருந்தது. அதன் உடம்பு பூராவும் தண்ணியா இருந்தது. அப்பத்தான் குளிச்சிட்டு வந்ததோ என்னமோ? ஒரு கையில் தர்பைப்புல்லை தலைக்கு மேல் பிடித்துக்கொண்டு இன்னொரு கையால் சைகை பண்ணி எல்லாரையும் கூப்பிட்டு ‘எல்லாரும் நான் சொல்லுவதைக் கொஞ்சம் கேளுங்கள். என்கிட்ட ஒரு தங்க வளையல் இருக்கிறது. எனக்கு இனிமே அது தேவையில்லை‘. இப்படி அப்பப்ப சத்தமா சொல்லிக்கொண்டே இருந்தது.
ஒரு பயணி காட்டைக்கடந்து அடுத்து உள்ள ஊருக்குப் போக அந்த பக்கமா வந்தான். புலி அதனிடம் தங்கவளையல் ஒன்று இருக்குனு கூவிக் கூவி சொன்னதைக் கேட்டு அவருக்கு ஆச்சரியமா இருந்தது. தங்க வளையல் சும்மா கிடைக்குதுனு தெரிந்த யாருக்குத்தான் ஆச்சரியமா இருக்காது. யாருக்குத்தான் ஆசை வராது. அந்த பயணிக்கும் ஆசை வந்தது. “இப்படி ஓர் அதிர்ஷ்டமா எனக்கு. இன்று நரி முகத்தில் முழித்துக்கொண்டேனோ?” நம்பமுடியாமல் அவன் நினைத்தபோது அவனுடைய மனசு எச்சரிக்கவும் செய்தது. “என்னமோ சந்தேகமாகவே இருக்கிறது. எதற்கும் எச்சரிக்கையாகவே இருக்கவேண்டும். கெட்டவிஷயத்தில இருந்து நல்லது நடக்காது. நஞ்சு அமிர்தத்தோடு கலந்தால், அமிர்தமும் நஞ்சா மாறிவிடுமே.” இப்படி எல்லாம் நினைத்தாலும் தங்கவளையல் இலவசமா கிடைக்கும் என்றால் ‘ஏன் அதை எடுத்துக்கொள்ளக் கூடாது?’ அவனுக்கு ஆசையும் விடவில்லை. ‘ எது செஞ்சாலும் ஏதாவது ஆபத்து இருக்கத்தானே செய்யும். அந்த தங்க வளையல் வேண்டும் என்றால் துணிந்து ஆபத்தை எதிர்கொள்ளத்தானே வேண்டும். அந்த வளையல் கிடைக்க என்னதான் செய்யனும்னு பார்க்கலாமே ‘ அவன் அந்த புலியை பார்த்து ” எங்கே? உன்கிட்ட உள்ள வளையலைக் காட்டு பார்ப்போம்” கேட்டதும் அந்தப் புலி வளையலை மேல தூக்கி காட்டியது. அப்பவும் அவன் புலியை நம்ப தயாராயில்லை. “நீயோ ஒரு காட்டு விலங்கு. உன்னை நான் எப்படி நம்ப முடியும்” மறுபடியும் சந்தேகத்தோடு கேட்டான்
புலி முகத்தைச் சாந்தமா வைத்துக்கொண்டு “உண்மைதான். சின்ன வயசில் ஆக்ரோஷமாகத்தான் இருந்தேன். யாரையும் நான் விட்டு வைத்ததில்லை. மனிதர்கள், விலங்குகள், ஏன்? பசுமாடுகளைக்கூட விட்டுவைக்க வில்லை. எல்லாரையும் கொன்றிருக்கிறேன். அப்போது செஞ்ச பாவத்தின் பலனை இப்போது அனுபவிக்கிறேன். என்னப் பார் இப்போது. இந்த பெரிய உலகத்தில் யாருமே எனக்கு இல்லை. நான் மட்டும் தனியா இருக்கிறேன். என் மனைவி குழந்தைகள் எல்லாரும் செத்துப் போய்ட்டாங்க. மனசில் நிம்மதி இல்லாமல் அலைந்தபோது ஒரு முனிவரப் பார்த்தேன். அவரை என் ஆன்மிக குருவா ஏத்துக்கட்டேன். அதுக்கப்புறம் என் வாழ்க்கையே மாறிடுச்சு. அவருடைய உபதேசங்கள் என் கண்ணை திறந்திடுச்சு. அவர் என்னுடைய ஆன்மிக வாழ்க்கைக்கு வழி காமிச்சாரு. எல்லாரையும் வேட்டையாடும் என் குணத்தை மாத்திட்டாரு. இப்போது அவர் காட்டிய தார்மிக வாழ்க்கையை நான் வாழுகிறேன்.என்னுடைய ஆசைகளை எல்லாம் துறந்து, அவர் சொன்னபடி தர்மங்கள் நிறைய செய்ய ஆரம்பிச்சட்டேன். அதுமட்டும் இல்லை. என்னப் பார். எனக்கு நிறைய வயசாயிடுச்சு. நகமும் கூரா இல்லை. பற்களும் கூரா இல்லை. இந்த வளையல் ஒன்றுதான் என்கிட்ட தானம் கொடுக்க இருக்கிறது. இந்தா அதை நீ எடுத்துக்கொள். என்கிட்ட இருப்பதை விட உன்கிட்ட இருந்தால் உபயோகமாவது இருக்கும்.இந்த வளையல் இந்த வயசான புலிக்கு எதற்கு இனிமே” இப்படி அப்பாவி மாதிரி இனிக்கப் புலி பேசினதைக் கேட்ட அந்த பயணிக்குக் கொஞ்சம் நம்பிக்கை வர ஆரம்பித்தது.
இந்த புலி சொன்னதை நம்பலாமா? நிஜமாகவே புலியிடம் இவ்வளவு மாற்றமா? அவன் அந்தப் புலியை இன்னும் முழுவதும் நம்பவில்லை. அவனுடைய முகத்தில் இன்னும் சந்தேகம் இருப்பதைப் பார்த்த அந்தப் புலி “உன்ன சொல்லி குற்றமில்லை. என் பழைய வாழ்க்கையால்தான் உன்னால் என்னை இன்னும் நம்ப முடியலை.ஒழுக்கமா வாழ்ந்து, எல்லாருக்கும் உதவி பண்ணி நல்லது செஞ்சாலும் நம்ப முடியாமல் போகிறது. அதிகாரம் உள்ளவர்கள் நல்லது பண்ணாமல் இருந்தால்கூட, அவங்கள நம்ப நிறையப் பேர் இருக்கிறார்கள். என் பழைய வாழ்க்கையால் யாருமே என்னை நம்பவில்லை. நல்லதுக்கே காலம் இல்லை. என்ன பண்ண முடியும் என்னால். இதுவும் கடந்து போகும்” பெருமூச்சு விட்டுக்கொண்டே முணுமுணுத்தது. வாழ்க்கையே வெறுத்துப் போன மாதிரி முகத்தைச் சோகமா வைத்துக்கொண்டு மரத்தடியில் உட்கார்ந்தது. ஓரக்கண்ணால் அந்த பயணியை நோட்டமும் விட்டது. “உன்னைப் பார்த்தா ஏழையாகத்தான் தெரிகிறது. இந்த தங்க வளையலை வைத்து நீ நிறைய பணம் பண்ணலாம். நீ அதை எடுத்துக்கொள். உள்ளவர்களுக்குக் கொடுப்பதைவிட இல்லாதவர்களுக்குக் கொடுப்பதுதான் நல்லது. உடம்பு சரியில்லாதவங்களுக்குதான் மருந்து கொடுக்கவேண்டும். ஆரோக்கியமா இருப்பவர்களுக்கு மருந்து கொடுத்தால் என்ன பயனும் இல்லை” மறுபடியும் புலி பயணியிடம் பேச ஆரம்பித்தது.
“இப்பல்லாம் நான் என் உயிரை மதிப்பது போல் தான் பிற உயிரையும் மதிக்கிறேன். என் உயிரைப் பாதுகாப்பது போலப் பிற உயிரையும் பாதுகாப்பேன். உனக்கு ஒன்று சொல்கிறேன் கேள். வழியில் ஏதாவது விலை உயர்ந்த பொருள் இருந்தால் கூட நான் தொடமாட்டேன். நானோ ஆசைகளை விட்டுவிட்டேன். எனக்கு எதற்கு விலையுயர்ந்த பொருள்கள். அதுமட்டும் இல்லாமல் பிறருடைய பொருளை எடுத்தால் அந்த பாவகர்மாவும் எனக்கு வந்துவிடும்” ஒரு யோகியைப் போலப் பேசியது. பயணியின் சந்தேகம் முழுவதும் போய்விட்டது. “இந்த புலி சொன்னதில் உண்மை இருக்கிறது. அதிகாரம் உள்ளவர்கள், பெரிய பதவியில் இருப்பவர்கள், பணக்காரர்கள் சொன்னால் சீக்கிரமா நம்பிடுவோம். ஆனால் ஓர் ஏழையோ, படிக்காதவர்களோ, சமுகத்தில் அந்தஸ்து இல்லாதவர்களோ சொன்னால் நம்பமாட்டோம்”. அவனும் புலி சொன்னதை ஆமோதித்தான். ” இந்த குளத்தைத் தாண்டி வந்த இந்த வளையலை எடுத்துட்டுப் போ. என்னால் அந்தப் பக்கம் வரமுடியாது. நான் என்னுடைய தியானத்தை ஆரம்பிக்கவேண்டும்”. மறுபடியும் புலி அவனை கூப்பிட்டது. ” ஓ! என்ன ஒரு புனிதமான ஆத்மா இந்தப் புலி. வளையல் கிடைத்தது மட்டும் இல்லாமல் இப்படி ஒரு புலியைச் சந்தித்ததுக்கு நிறையக் கொடுத்து வைத்திருக்கவேண்டும் “அவனும் சந்தோஷமா அக்கரைக்குப் போகக் குளத்தில் இறங்கினான்.
தங்கவளையலையே நினைத்துக்கொண்டு இருந்ததால் அந்த குளத்திலிருந்த புதை மண்ணை கவனிக்கத் தவறிவிட்டான். உள்ளே போகப்போக அவனால் மேலே வரமுடியவில்லை. புலியும் பொறுமையா இருந்தது. “ஓஓஓஓ ஐயோ பாவம் நீ. புதைமணலுக்குள்ள போயிடப்போற. இரு நான் வந்து உன்ன வெளியில் இழுக்கிறேன்” புலி முகத்தில் ஒரு புன்னகை தெரிந்தது. புலி அந்த குளத்தில் இறங்கும்போதுதான் அந்தப் பயணிக்கு உண்மை உறைத்தது.அந்தப் புலி அவனை நல்லா ஏமத்திடுச்சுனு. “என்ன ஒரு முட்டாள் நான். அந்தப் புலி திருந்தி தர்மம் தானங்கள் செய்கிறேன் சொன்னதை நம்பிவிட்டேனே.அதனுடைய வார்த்தைகளை நம்பி, அதன் இயல்பான குணத்தை மறந்துவிட்டேனே. அந்த வளையலோ என்னுடையது இல்லை. அது வேண்டுமென்று பேராசைப் பட்டதால்தான் இந்த நிலை” இப்படிப் புலம்பினாலும் கடைசியா அவன் அந்தப்புலிக்கு இரையாகிவிட்டான்”.
கதையைச் சொல்லி முடித்துவிட்டு சித்ரக்ரீவா புறாக்களைப் பாரத்து “இதற்குத்தான் சொன்னேன். நம் பேராசை நம்மை ஆபத்தில் மாட்டிவிட்டிடுமென்று. அந்தப் புலிதான் அந்தப் பயணியைக் கொன்றது. ஆனால் அவனுடைய பேராசையினால்தான் அவனுக்கு அந்த ஆபத்து வந்தது. பேராசையால் நாம் யோசிக்கும் திறனை இழக்கக்கூடாது” எச்சரித்தது. மீதிப் புறாக்களுக்கு சித்ரக்ரீவாவின் அறிவுரை பிடிக்கவில்லை.அதில் ஒரு புறா சித்ரக்ரீவாவோட விவாதம் பண்ண ஆரம்பித்தது. “ஆமா! ஆமா !உங்களால் எதையுமே அனுபவிக்கவே முடியாதே. எப்பப் பார்த்தாலும் அதைப் பண்ணாதே, இதைப் பண்ணாதே, ஜாக்கிரதை. இதைத் தவிர வேற எதுவும் இல்லை. உங்கள் பேச்சைக் கேட்டா பட்டினிதான் இருக்கவேண்டும். தப்பு நடக்குமென்று நினைத்தால் தப்புதான் நடக்கும். எது செஞ்சாலும் குற்றம் கண்டுபிடிக்கிறது, இல்லையென்றால் சந்தேகப்படுகிறது, இப்படியே இருந்த சந்தோஷமே இருக்காது.” அந்தப் புறா விவாதிக்க, மீதிப் புறாக்களும் ஒத்துப் பாடின. “நீ சொன்னது சரிதான். சித்ரக்ரீவா எல்லாவற்றிலும் தப்பு கண்டுபிடுச்சிட்டேதான் இருப்பார்.” மீதிப் புறாக்கள் சித்ரக்ரீவா சொன்னதைக் கண்டுகொள்ளாமல் அந்த தானியங்களை சாப்பிடக் கீழே இறங்கின..தானியங்கள் சாப்பிட அங்க இறங்கினதும், பாவம்! எல்லாம் அந்த வலையில் மாட்டிக்கொண்டது. பேராசையால் வந்த வினையப் பார்த்தீர்களா! பேராசை கண்ணை மறைத்தால், அறிவுள்ள புத்திசாலிகளும் ஆபத்தைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும். சித்ரக்ரீவா சொன்னது எவ்வளவு உண்மை என்று அந்தப் புறாக்களுக்கு அப்போதுதான் புரிந்தது.
இதோடு இந்தத் தொடரின் இந்த பகுதி முடிந்தது. அடுத்த பகுதியில் இந்தப் புறாக்களுக்கு என்ன நடக்கப்போகுதுனு மறக்காமல் வந்து கேளுங்கள்.