திருக்குறளின் 30வது அதிகாரம் வாய்மை. வாய்மை அதிகாரத்திலிருந்து முதல் ஐந்து குறள்களை இந்த பகுதியில் பார்க்கப்போகிறோம்.
வாய்மை என்றால் பொய் சொல்லாமல் இருப்பது. பொய் சொல்லாமல் வாய்மையைக் கடைப்பிடிப்பது சிறந்த அறம் ஆகும், வாய்மையை விடச் சிறந்தது வேறு எதுவும் இல்லை என்று இந்த அதிகாரம் சொல்கிறது.
வாய்மை 1
- முதல் குறள்.
“வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்“.
இதில்
‘வாய்மை எனப்படுவது யாதெனின்‘
இதன் பொருள்
வாய்மை என்று சொல்லப்படுவது எது என்றால்.
அடுத்து
‘யாதொன்றும் தீமை இலாத சொலல்‘
இதன் பொருள்
பிறர்க்குத் தீங்கு செய்யாத சொற்களைச் சொல்லுதல் ஆகும்.
அதாவது
வாய்மை என்று சொல்லப்படுவது எது என்றால், பிறர்க்குத் தீங்கு செய்யாத சொற்களைச் சொல்லுதல் ஆகும்.
வாய்மை அதிகாரத்தின் முதல் குறளின் பொருள் இது.
- இரண்டாவது குறள்.
“பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்“.
இதில்
‘பொய்மையும் வாய்மை யிடத்த‘
இதன் விளக்கம்
பொய்மையும் வாய்மை என்று கருதத் தக்க இடம் பெறும்.
அடுத்து
‘புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்‘
இதன் விளக்கம்
பிறர்க்குக் குற்றம் இல்லாத நன்மையைத் தருமானால்.
அதாவது
பிறர்க்குக் குற்றம் இல்லாத நன்மையைத் தருமானால், பொய்மையும் வாய்மை என்று கருதத் தக்க இடம் பெறும்.
வாய்மை அதிகாரத்தின் இரண்டாவது குறளின் பொருள் இது.
- மூன்றாவது குறள்.
“தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்“.
இதில்
‘தன்நெஞ் சறிவது பொய்யற்க‘
இதன் விளக்கம்
ஒருவன் தன் நெஞ்சு அறிந்து பொய் சொல்லால் கூடாது.
அடுத்து
‘பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும்‘
இதன் விளக்கம்
அவ்வாறு பொய் கூறினால் அவன் நெஞ்சே அவனை வருத்தும்.
அதாவது
ஒருவன் தன் நெஞ்சு அறிந்து பொய் சொல்லால் கூடாது. அவ்வாறு பொய் கூறினால் அவன் நெஞ்சே அவனை வருத்தும்.
வாய்மை அதிகாரத்தின் மூன்றாவது குறளின் பொருள் இது.
- நான்காவது குறள்.
“உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்”.
இதில்
‘உள்ளத்தாற் பொய்யா தொழுகின்‘
இதன் விளக்கம்
ஒருவன் தன் மனதறிய பொய் சொல்லாமல் வாழ்ந்தால்.
அடுத்து
‘உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன்‘
இதன் விளக்கம்
அவன் உயர்ந்தோர் உள்ளங்களில் இருப்பவனாவான்.
அதாவது
ஒருவன் தன் மனதறிய பொய் சொல்லாமல் வாழ்ந்தால், அவன் உயர்ந்தோர் உள்ளங்களில் இருப்பவனாவான்.
வாய்மை அதிகாரத்தின் நான்காவது குறளின் பொருள் இது.
- ஐந்தாவது குறள்.
“மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை“.
இதில்
‘மனத்தொடு வாய்மை மொழியின்‘
இதன் விளக்கம்
ஒருவன் தன் மனத்தோடு பொருந்த உண்மை சொல்வானாயின்.
அடுத்து
‘தவத்தொடு தானஞ்செய் வாரின் தலை‘
இதன் விளக்கம்
அவன் தானமும் தருமமும் செய்பவரை விட உயர்ந்தவன்.
அதாவது
ஒருவன் தன் மனத்தோடு பொருந்த உண்மை சொல்வானாயின், அவன் தானமும் தருமமும் செய்பவரை விட உயர்ந்தவன்.
வாய்மை அதிகாரத்தின் ஐந்தாவது குறளின் பொருள் இது.
வாய்மை அதிகாரத்தின் ஆறிலிருந்து பத்து வரை உள்ள குறள்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்.
நன்றி! வணக்கம்!