வணக்கம். இந்த பகுதியில் திருக்குறளின் ஆறாவது அதிகாரமான வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தில் இருந்து முதல் ஐந்து குறள்களைக் கேட்கப்போகிறீர்கள். முந்தைய அதிகாரமான இல்வாழக்ககையி்ல், இல்வாழ்க்கையின் அறன்கள் கூறப்பட்டது. இந்த அதிகாரத்தில் அந்த அறனுக்கு உறுதுணையாக நிற்கும் மனைவிக்கு உரிய நற்பண்புகள் சொல்லப்படுகிறது.
வாழ்க்கைத் துணைநலம்
வாழ்க்கை என்பது ஒரு நெடிய பயணம். அதில் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் துணையாகச் செல்லவேண்டும். இல்லறத்தில் பொறுப்புகள் பெண்ணைச் சார்ந்து உள்ளது. அந்தப் பெண்ணைச்சுற்றியே இல்வாழ்க்கை அமைகிறது. மனைவி செய்ய வேண்டிய கடமைகளையும் பொறுப்புகளையும் இந்த அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.
- முதல் குறள்.
“மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை”.
இதில்
“மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள்”
இதன் பொருள்: இல்வாழ்க்கைக்கு உரிய நற்பண்புகளுடன் தன் கணவனின் வருவாய்க்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே
அடுத்து
“வாழ்க்கைத் துணை“
இதன் பொருள்: வாழ்க்கைத் துணை ஆவாள்.
அதாவது
இல்வாழ்க்கைக்கு உரிய நற்பண்புகளுடன் தன் கணவனின் வருவாய்க்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே, வாழ்க்கைத் துணை ஆவாள்.
இது முதல் குறளின் பொருள் .
- இரண்டாவது குறள்.
“மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்.”
இதில்
“மனைமாட்சி இல்லாள்கண். இல்லாயின்“
இதன் பொருள்: இல்வாழ்க்கைக்கு உரிய நற்பண்புகள் மனைவியிடம் இல்லை என்றால்
அடுத்து
“வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்“
இதன் பொருள்: அந்த இல்வாழ்க்கை வேறு வகையில் எத்தனை சிறப்புடையதாய் இருந்தாலும் எந்த பயனும் இல்லை.
அதாவது
இல்வாழ்க்கைக்கு உரிய நற்பண்புகள் மனைவியிடம் இல்லை என்றால், அந்த இல்வாழ்க்கை வேறு வகையில் எத்தனை சிறப்புடையதாய் இருந்தாலும் எந்த பயனும் இல்லை.
இது இரண்டாவது குறளின் பொருள்.
- மூன்றாவது குறள்.
“இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை“.
இதில்
“இல்லதென் இல்லவள் மாண்பானால்”
இதன் பொருள்: நற்பண்புகளுடைய மனைவி அமைந்தால் ஒருவனுக்கு வாழ்க்கையில் இல்லாதது என்ன?
அடுத்து
“உள்ளதென் இல்லவள் மாணாக் கடை?”
இதன் பொருள்: அப்படி அமையாவிட்டால் வாழ்க்கையில் இருப்பது என்ன?
அதாவது
நற்பண்புகளுடைய மனைவி அமைந்தால் ஒருவனுக்கு வாழ்க்கையில் இல்லாதது என்ன? அப்படி அமையாவிட்டால் வாழ்க்கையில் இருப்பது என்ன?
இது மூன்றாவது குறளின் பொருள் .
- நான்காவது குறள்.
“பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்“.
இதில்
“கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்”
இதன் பொருள்: இல்வாழ்க்கையில் கற்பு என்னும் மன உறுதி பெண்ணிடம் இருக்குமானால்
அடுத்து
“பெண்ணின் பெருந்தக்க யாவுள”
இதன் பொருள்: அந்தப் பெண்ணைவிட உயர்வானது எது?
அதாவது
இல்வாழ்க்கையில் கற்பு என்னும் மன உறுதி பெண்ணிடம் இருக்குமானால், அந்தப் பெண்ணைவிட உயர்வானது எது?
இது நான்காவது குறளின் பொருள்.
- ஐந்தாவது குறள்.
“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை“.
இதில்
“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்“
இதன் பொருள்: பிற தெய்வங்களைத் தொழாமல் தன் கணவனையே தெய்வமாக தொழும் மனைவி
அடுத்து
“பெய்யெனப் பெய்யும் மழை”
இதன் பொருள்: பெய் என்று சொல்ல மழை பெய்யும்.
அதாவது
பிற தெய்வங்களைத் தொழாமல் தன் கணவனையே தெய்வமாக தொழும் மனைவி, பெய் என்று சொல்ல மழை பெய்யும்.
இது ஐந்தாவது குறளின் பொருள்.
இந்தக் குறளுடன் இந்த பகுதி முடிவடைந்தது. வாழ்க்கைத் துணைநலம் அதிகாரத்தின் மற்ற குறள்களை அடுத்த பகுதியில் பார்க்கலாம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி! வணக்கம்!
மற்ற திருக்குறள் அத்தியாயங்களைக் கேட்க இங்கே கிளிக் செய்யவும்:
திருக்குறள்: வாழ்க்கைத் துணைநலம்